அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு என்ன?

By Nanthini

27 Nov, 2022 | 05:30 PM
image

(ஏ.எல்.நிப்றாஸ்)

ரு முக்கியமான பஸ் புறப்படப் போகின்றது. இதற்குப் பிறகு இந்த வழித்தடத்தில் வேறு வாகனங்கள் கிடைக்காது என்றால், அதில் நாம் உரிய நேரத்தில் ஏறிக்கொள்ள வேண்டும் அல்லது நமக்கான ஆசனத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து ‘பஸ்ஸின் சாரதியும் அதில் பயணிக்கின்றவர்களும் நமக்குத் தெரிந்தவர்கள் தானே... புறப்படும்போது கூப்பிட்டு நமக்கான ஆசனத்தை தருவார்கள்’ என்று நினைத்துக்கொண்டு ஓரத்தில் நின்றவாறு வீண்கதை பேசிக்கொண்டிருப்பது புத்திசாலித்தனமல்ல.

முஸ்லிம் அரசியல் தரப்புக்கள் தேசிய ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற பல நகர்வுகள் மற்றும் முக்கிய விவகாரங்களில் இப்படித்தான் செயற்படுகின்றன.

இப்படி அவர்கள் தவறவிட்ட பஸ்களுக்கு கணக்கில்லை. இதனை அவர்கள் அனுபவ அறிவு, பக்குவம், சாணக்கியம், சூட்சும நகர்வு என்கிற பெயர்களில் அழைக்கின்றனர். ஆனால், இதுவெல்லாம் அரசியல் போக்கிரித்தனமாகும். 

‘தமக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் படுமுட்டாளாவான்’ என்ற பழமொழியை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

தமிழர்கள் தமது உரிமைக்காகவும் தாம் கொண்ட தீரா வேட்கைக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள். அந்தளவுக்கு முஸ்லிம்கள் போராடவும் இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு தனியீழக் கோரிக்கை போன்ற தீவிர கருத்தியல்கள் மறுவாசிப்பு செய்யப்பட்டன எனலாம். 

ஆயினும், இன்னும் தமது அபிலாஷைகளை எந்த கோணத்திலாவது அடைந்துகொள்ள வேண்டும் என்பதில் எல்லா தமிழ் தரப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.

ஆனால், தமிழர்கள் வேண்டி நிற்கின்ற தீர்வுத் திட்டத்தின் மையப் பிராந்தியங்களான வடக்கில் சிறுபான்மையாகவும், கிழக்கில் பெரும்பான்மையாகவும் வாழ்கின்ற சமூகம்  என்ற அடிப்படையிலும் இன முரண்பாட்டால் பல இழப்புக்களை சந்தித்த இனக் குழுமம் என்ற அடிப்படையிலும் தீர்வுத் திட்டம் என்பது மறைமுகமாக முஸ்லிம்களோடும் தொடர்புபட்ட விடயம் என்பதை யாரும் மறுதலிக்க இயலாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கச் சொல்லியோ, சமஷ்டி தீர்வு பற்றியோ அல்லது 13 ப்ளஸ் பற்றியோ சகோதர தமிழ்ச் சமூகம் கோரிக்கை விடுப்பது அவர்களது உரிமை. இதற்கு முஸ்லிம்கள் குறுக்கே நிற்பது தர்மமில்லை. ஆனால், அதேநேரம் இவ்விடயங்களில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் தவிர்க்க முடியாது என்ற அடிப்படையில் அவற்றை முன்வைக்க வேண்டியுள்ளது.

இப்போது இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி உச்சஸ்தாயியில் பேசப்படுகின்றது. தமிழ்ச் சமூகம் முழுமையாக திருப்திப்படக்கூடிய தீர்வினை இந்த ஜனாதிபதி மட்டுமன்றி, சிங்கள பெருந்தேசியத்தின் செல்லப்பிள்ளையான யாருமே வழங்கமாட்டார் என்பதே யதார்த்தமாகும். 

எவ்வாறிருப்பினும், ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிர்ப்பந்தங்களால் சில காலடிகளை முன்னோக்கி எடுத்துவைக்க விளைகின்றார் என்பது புலனாகின்றது.

‘அடுத்த சுதந்திர தினத்துக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’ என்று அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன் பின்னர் சபையில் பேசிய ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு பற்றி பிரஸ்தாபித்தார்.

அத்துடன், 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான தீர்வினை வழங்குவதற்கான தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதியும் இதற்கு முட்டுக்கட்டை போடலாம் என எதிர்பார்க்கப்படும் தரப்பின் பிரதானியுமான மஹிந்த ராஜபக்ஷவிடமே இதற்கான சம்மதத்தை சபையில் கோரிநின்றார். அதற்கு மஹிந்த சைகையாலும் வார்த்தையாலும் தனது ‘சம்மதத்தை’ வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை வழக்கம் போல தமிழ்த் தேசிய கட்சிகள் முடியுமானளவுக்கு பயன்படுத்த முனைவது உண்மையில் பாராட்டுதலுக்குரியது.

ஆனால், இந்த விவகாரங்களுடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் கட்சிகளும் ஏனைய முஸ்லிம் தரப்புகளும் என்ன முயற்சியை எடுத்துள்ளன என்பதுதான் இங்குள்ள கேள்வி.

தீர்வுத் திட்டம் என்று வரும்போது அதில் முஸ்லிம்கள் தமது அபிலாஷைகளை, பங்கினை உறுதிப்படுத்துவது கட்டாயமானது. இதனை மிகவும் நேர்மையான முறையில் கையாள வேண்டும். எதிர்காலத்தில் இன்னுமொரு முரண்பாடு ஏற்படுவதை அதன் மூலம் தடுக்கலாம்.

இதன் அர்த்தம் தமிழர்களுக்கு தீர்வு கிடைப்பதை தடுப்பதோ, குறுக்கே நிற்பதோ அல்ல என்பதை முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் முஸ்லிம் மக்களும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், முஸ்லிம்களோ அல்லது சிங்கள தரப்புக்களோ இதனை குழப்பினால், அது ஆட்சியாளர்களுக்கு வாய்ப்பாக போய்விடும். அதனை காரணம் காட்டியே இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்காமல் நழுவிவிடுவார்கள் என்பதை நினைவில் கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.

இருப்பினும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தளபதிகள், எம்.பி.க்கள் மட்டுமன்றி அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் கணிசமான புத்திஜீவிகள் இவ்விடயத்தில் இன்னும் வாழாவிருக்கின்றனர். 

அதாவது பஸ் புறப்படத் தயாராவது தெரிந்தும் கூட வெளியில் நின்றுகொண்டு நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர் எனலாம்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற தலைப்பின் கீழ் 13ஆவது திருத்தம், 13 ப்ளஸ், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்து தீர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கல் என்ற பல கருப்பொருட்கள் பேசப்படுகின்றன. இவையெல்லாம் மிகவும் ஆழமானவையும் அர்த்தமுள்ளவையும் ஆகும்.

ஆனால், 25 வருடங்களாக பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் 95 சதவீதமானோருக்கு இதுபற்றி பூரண விளக்கமோ அல்லது பிரக்ஞையோ கிடையாது. யாருக்கு கோபம் வந்தாலும் இதுதான் நிதர்சனமாகும்.

‘அதிகாரப் பகிர்வு’ வேறு ‘அதிகாரப் பரவலாக்கல்’ என்பது வேறு என்கிற விடயம் தெரியாத பலர் உள்ளனர். ‘சுயநிர்ணய உரிமை’ என்பதன் வீச்சு எதுவரை நீளும் என தெரியாத முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். 

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் போன்றோர் முஸ்லிம் சமஷ்டி பற்றிய நூலை வெளியிட்டிருந்தாலும், இன்னும் சமஷ்டி மற்றும் 13 ப்ளஸ் என்பதன் ஆழ அகலங்கள் தெரியாத எம்.பி.க்கள் பலர் இருக்கின்றனர்.

முஸ்லிம்களுக்கான மாகாணம், முஸ்லிம் சமஷ்டி, முஸ்லிம்களுக்கான பங்கு, நிலத்தொடர்பற்ற மாகாணம், கரையோர அலகு, கல்முனை கரையோர நிர்வாக மாவட்டம் என்ற விடயங்கள் பல வருடங்களாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விடயங்களையே விளங்கிக்கொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள் மேலே குறிப்பிட்ட பெரிய விவகாரங்களை எல்லாம் விளங்கிச் செயற்படுவார்களா என்பது சந்தேகத்துக்குரியது.

இது இவ்வாறிருக்க, ‘எல்லா சமூகங்களும் திருப்திகொள்கிற தீர்வினையே நாம் ஏற்றுக்கொள்வோம்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி அறிவித்துள்ளமை நல்லதொரு விடயமாகும். 

எனவே, இதனை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த நிலப்பரப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்துவது’ என தமிழ் தேசியம் தீர்மானித்துள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், இவ்விடயத்தில் மட்டுமல்ல, அதற்கப்பால் மேற்குறிப்பிட்ட விவகாரங்களிலும் முஸ்லிம் எம்.பி.க்கள் தமது சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த தவறிவிட்டனர்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூவ் ஹக்கீம் சரிவர கையாளவில்லை. கிழக்கில் ஒரு விதமாகவும் வடக்கில் ஒரு விதமாகவும் தெற்கில் ஒரு விதமாகவும் கருத்து வெளியிடுவதாக அந்தக் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் உள்ளன. 

அத்துடன் 13 ப்ளஸ், அதிகாரப் பகிர்வு, சமஷ்டி பற்றியும் காத்திரமான நிலைப்பாட்டை மு.கா. முன்வைக்கவில்லை.

தேசிய காங்கிரஸ் தலைவர்  ஏ.எல்.எம்.அதாவுல்லா மாகாணங்கள் இணைப்பை நேரிடையாகவே எதிர்த்து வருபவர். ஆனால், அவர் கூட முறையாக தமது சமூகத்தின் நிலைப்பாட்டை பொதுவெளியில் முன்வைக்க தவறிவிட்டார்.

அதேபோல் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும் மாகாண இணைப்பை விரும்பவில்லை என்றாலும் தீர்வுடன் தொடர்புடைய ஏனைய விவகாரங்களில் அக்கட்சி ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. ஏனைய முஸ்லிம் அணிகள் மற்றும் பெரும்பான்மை கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பிக்களும் இப்படித்தான் காலத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இது முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்திருக்கின்ற ஆயிரத்து எட்டாவது வாய்ப்பாகும். இந்த தருணத்தில் பெருந்தேசியத்தை சீண்டாமலும் தமிழ் மக்களை நோகடிக்காமலும் மிகத் தெளிவாக தமது நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல் தரப்பு உடனடியாக முன்வைக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.

வழக்கம்போல பஸ் புறப்படும்போது ஓடிச் சென்று மிதிப்பலகையில் தொற்றிக்கொள்கின்ற அல்லது இன்னுமொரு பஸ் போன பிறகு கைகாட்டி அழுகின்ற அரசியல் நாடகமும் கபடத்தனங்களும் இந்த விடயத்தில் சரிப்பட்டு வராது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்