மனோ கணேசனின் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா ?

By Nanthini

27 Nov, 2022 | 01:43 PM
image

(சி.அ.யோதிலிங்கம்)

மிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ்நாடு மணவைத்தம்பியின் மகன் மணவை அசோகனின் மணிவிழாவில் தெரிவித்த கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளிடையே பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

“சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்துக்கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா

இழப்புக்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளையும் இந்திய தலைவர்களையும் காரணமாகக் காட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்கள் கண்டுவிட்ட இழப்புக்களுக்கு முதல் காரணம் தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார சிங்கள பேரினவாத அரசுகள்.

1940களில் கண்டிய சிங்களத் தலைமைகளே தர வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்?

65:35 என்ற ஜன பரம்பலுக்கு நியாயமே அற்ற 50:50 என்ற கோரிக்கையை முன்வைத்து பிரித்தானியக்காரனே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்?

1987இல் வடக்கு, கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை ஆரம்பித்துவைத்த இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை, மாகாண சபைகளை எட்டி உதைத்தது யார்?

தற்போது “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்று 13ஐ ஆவது முழுமையாக அமுல்படுத்துங்களேன் என்று ஓலமிடுவது யார்?

இந்திய நாட்டு பிரதமராக இருந்த, இருக்கவிருந்த ராஜீவையே போட்டுத்தள்ளிவிட்டு, இப்போது இந்திய அரச தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்?

தற்போதும் கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல் வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற நிபந்தனை விதிப்பது யார்?

கருணாநிதியும் இந்தியத் தலைவர்களும் அதி உத்தமர்கள் என்று நான் கூறவரவில்லை. கருணாநிதியை ‘கருணை’நிதி என்று நான் கூறவில்லை. ராஜீவ் காந்தியை ‘மகாத்மா’ காந்தி என்று நான் கூறவரவில்லை.

ராஜீவ் காந்தி அனுப்பிவைத்த இந்தியப்படைகள் இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை என்று நான் கூறவரவில்லை.

ஆனால், தமது 'தேச நலன்கள்' அவரவருக்கு முக்கியம் என்பதும் இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும் நமது அரசியல் மேதைகளுக்கு விளங்கியிருக்க வேண்டும்.

கருணாநிதியோ ஜெயலலிதாவோ எம்.ஜி.ஆரோ தற்போது ஸ்டாலினோ தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் 8 கோடி தமிழர்களுக்குத்தான் முதலில் பொறுப்புக்கூற  கடமைப்பட்டுள்ளார்கள்” என்பதாக அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் மனோ கணேசன் தனது கருத்துக்களை ஓர் ஆய்வு நிலையில் வேண்டுகோள்களாகவோ  ஆலோசனைகளாகவோ முன்வைத்திருந்தால் தமிழ்த் தேசிய சக்திகள் கொஞ்சம் பரிசீலித்திருப்பர். 

ஆனால், அவர் முழுக்க முழுக்க கிராமத்து வார்த்தையில் கூறுவதானால், அதனையொரு மோசமான வசைபாடலாகவே கருதும் நிலையில் இருக்கின்றனர்.

மனோ கணேசனின் கருத்துக்களில் பல கேள்விகளும் விவாதங்களும் உள்ளன.

முதலாவது கேள்வி மனோ கணேசன் வடக்கு, கிழக்கு அரசியல் சக்திகள் தங்களது பிரதேசங்களில் மட்டும் தங்கள் அரசியலை செய்ய வேண்டும். 

மலையக அரசியலிலோ கொழும்பு அரசியலிலோ தலையிடக்கூடாது என்று  இக்கட்டுரையாளரிடமே நேரடியாக  கூறியிருந்தார். 

தமிழ் அரசியல் கட்சிகள் கொழும்பில் போட்டியிட முனைந்தபோதே இக்கருத்துக்களை கூறியிருந்தார்.

அவ்வாறான ஒருவருக்கு வடக்கு, கிழக்கு அரசியலில் தலையிடும் உரிமை இருக்கிறதா?

இரண்டாவது, 1964இல் கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை மனோ கணேசன் கடுமையாக சாடியிருந்தார். 

“இந்தியா முழு மலையகத் தமிழர்களையும் இந்தியாவுக்கு அழைத்திருக்க வேண்டும் அல்லது முழு மலையகத் தமிழர்களையும் இலங்கையில் விட்டிருக்க வேண்டும். ஒரு பகுதியினரை மட்டும் அழைத்து, மறு பகுதியினரை அழைக்காமல் விட்டதனால் மலையக மக்கள் மோசமாக பலவீனம் அடைந்திருக்கின்றனர். இது மலையக மக்களின் இருப்பை அழித்த ஓர் இன அழிப்பு” என்றும் கூறியிருந்தார்.

மலையக மக்களின் இருப்பு இந்தியாவால் பாதிக்கப்பட்டதை மனோ கணேசன் சுட்டிக்காட்டலாம் என்றால் அதே இந்தியாவினால் இலங்கைத் தமிழர்களின் இருப்பு பாதிக்கப்படும்போது சுட்டிக்காட்டக்கூடாதா?

தவிர மனோ கணேசனின் எச்சரிக்கை தமிழ்த் தேசியவாதிகளை நோக்கியே இருந்தது. மனோ கணேசனின் அரசியல் இருப்பை பாதிக்காதா? 

கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுக்கான வாக்குவங்கியில் மூன்றிலொரு பங்கினர் வடக்கு, கிழக்கு வம்சாவளித் தமிழர்கள். 

கொழும்பில் வசிக்கும் வடக்கு, கிழக்கு வம்சாவளி தமிழர்களில் மேட்டுக்குடியினர் மனோ கணேசனை ஆதரிப்பதில்லை.

அதேபோல கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்களும் ஆதரிப்பதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி ஆதரவாளர்கள்.

மனோ கணேசனின் நேரடி ஆதரவாளர்கள் மலையகத்தில் இருந்து கொழும்பில் குடியேறியவர்களும், வடக்கு, கிழக்கிலிருந்து கொழும்பில் குடியேறிய தமிழ்த் தேசிய ஆதரவாளர்களுமே ஆவர்.

தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் ஆதரிப்பதற்கு பிரதான காரணம், தமிழ்த் தேசிய போராட்டத்தின் வலுவான துணைக்குரலாகவும் பாதுகாப்பாளராகவும் மனோ கணேசன் இருப்பார் என்பதற்காகவே ஆகும். 

மனோ கணேசன் பல தடவைகள் இந்த நம்பிக்கையை பாதுகாத்துள்ளார் என்பது மறுப்பதற்கில்லை.

தற்போது மனோ கணேசன் நேரடியாக தமிழ்த் தேசிய சக்திகளை பகைக்கும்போது அவரது அரசியல் இருப்பில் அது பாதிப்பை ஏற்படுத்தாதா? 

மனோ கணேசனின் கருத்துக்கள் தமிழ்த் தேசிய சக்திகளின் இலக்குக்கும் மனோ கணேசனின் நிலைப்பாட்டுக்கும் இடையே நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

இனி மனோ கணேசனின் கருத்துக்களில் உள்ள விவாத விடயங்களுக்கு வருவோம்.

மனோ கணேசனின் முதலாவது குற்றச்சாட்டு 1940களில் கண்டிய சிங்களவர்கள் தர வந்த சமஷ்டியை தமிழ் அரசியல்வாதிகள் எட்டி உதைத்தனர் என்பதாகும். இதில் வரலாற்றுத் தவறு இருக்கிறது. 

கண்டிய சிங்களவர்கள் 1920களில் தான் சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தனர். 1940களில் அல்ல. 

1940களில் கண்டிய சிங்களவர்களும் பெரும் தேசியவாத அலைக்குள் வீழ்ந்துவிட்டனர். அதற்கு பிரதான காரணம், டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் மலையக மக்கள் அரசியல் சக்தியாக எழுச்சியடைந்து வந்ததை தடுப்பதேயாகும்.

1936இல் அவர்களது வாக்குவங்கி குறைக்கப்பட்டது. எனினும், பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இதனால்தான் 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தையும், 1949இல் வாக்குரிமைச் சட்டத்தையும் கொண்டுவந்து மலையக மக்களை அநாதைகளாக்கினர். 

கண்டிய சிங்களவர்களின் அமைப்பான கண்டிய தேசிய சபை கரையோர சிங்களவர்களின் ஆதிக்கம் கண்டியப் பிரதேசங்களில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே 1925ஆம் ஆண்டு தமது மாநாட்டில் சமஷ்டி கோரிக்கையை ஒரு தீர்மானமாக எடுத்தது.

இலங்கை கரையோரப் பிரதேசம், கண்டி பிரதேசம், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் என மூன்று சமஷ்டி பிரதேசங்களாக பிரிக்கப்படல் வேண்டும் எனவும் கூறியிருந்தது.

டொனமூர் விசாரணைக் குழுவினர் 1927ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தபோது அவர்களிடமும் கண்டிய தேசிய சபை சமஷ்டி கோரிக்கையை சமர்ப்பித்தது.

1920களின் பிற்பகுதியில் தான் பண்டாரநாயக்க லண்டனில் தனது கல்வியை முடித்துவிட்டு இலங்கை திரும்பி அரசியலுக்கு வந்தார். 

சிங்கள அரசியலில் சேனநாயக்க குடும்பம் ஆதிக்கம் செலுத்தியிருந்தமையினால் அவரால் பெரியளவுக்கு கரையோர பிரதேசங்களில் எழுச்சியடைய முடியவில்லை. 

தன்னை மேல்நிலைக்கு கொண்டுவருவதற்காக அவர் இரண்டு தீர்மானங்களை எடுத்தார். கிறிஸ்தவராக இருந்த அவர் பௌத்தராக மதம் மாறினார். டொனமூர் காலத்தில் அவர் மதம் மாறியதால் ‘டொனமூர் பௌத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். இது, அவரது முதலாவது தீர்மானம். 

இரண்டாவது, கண்டிய சிங்கள மக்களின் ஆதரவை பெறுவதற்காக கண்டிய ரஜ குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீமாவை திருமணம் செய்தார். 

கண்டி ரஜ குடும்ப திருமணம் கண்டிய மக்களிடையே அவரது செல்வாக்கை வளர்த்தது.

கண்டிய தேசிய சபையிலும் பண்டாரநாயக்க முக்கிய பிரமுகரானார். சமஷ்டி கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு அதனை யாழ்ப்பாணம் வரை கொண்டு சென்றார்.

எனினும், தமிழ்த் தலைமைகள் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை. 

தமிழ் அரசியல் தலைமைகள் சமஷ்டிக்கு ஆதரவு கொடுக்காமைக்கு பிரதான காரணம், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அன்று பெரிதாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பதுதான்.

1921ஆம் ஆண்டு வரை சிங்கள மக்கள் மத்தியில் தலைவர்கள் பெரியளவுக்கு இருக்கவில்லை. இதனால் தமிழ்த் தலைவர்களே முழு இலங்கைக்கும் தலைமை தாங்கினர்.

சேர்.முத்துக்குமாரசுவாமி, சேர்.பொன். இராமநாதன், சேர்.பொன். அருணாசலம் ஆகியோர் இதில் முன்னிலையில் நின்றனர். படித்த இலங்கையர் பிரதிநிதிக்கான வாக்கெடுப்பில் 1912 மற்றும் 1916இல் சிங்கள மக்கள் சேர்.பொன்.இராமநாதனுக்கே வாக்களித்தனர்.

1919இல் இலங்கை தேசிய காங்கிரஸ் முதலாவது தேசிய இயக்கமாக உருவாக்கப்பட்டபோது அதன் முதலாவது தலைவராக சேர்.பொன்.அருணாசலத்தையே சிங்கள மக்கள் ஏகமனதாக தெரிவுசெய்தனர். இந்த தமிழ்த் தலைவர்களே சிங்கள மக்களின் உரிமைக்காக உலகம் முழுவதும் குரல் எழுப்பினர். 

வெசாக் விடுமுறை, சிங்கள மொழிக் கல்வி, இலங்கைக்கான பல்கலைக்கழகம் என்பவற்றை இவர்களே கொண்டுவந்தனர். இதனால்தான் சிங்கள வரலாற்று ஆசிரியரான கே.எம்.டி.சில்வா “1921 வரை தமிழர்கள் தங்களை சிறுபான்மையோராக கருதவில்லை. சிங்களவரும் ஈழத் தமிழரும் இலங்கையின் பெரும்பான்மையினர். ஏனையோரே சிறுபான்மையினர் என கருதினர்” என குறிப்பிட்டார்.

1921ஆம் ஆண்டில் எழுச்சியடைந்த பிரதிநிதித்துவப் பிரச்சினையும், சிங்கள தலைவர்களின் நேர்மையீனமும் தான் தமிழர்கள் இன அரசியலை ஆரம்பிக்க காரணமாக அமைந்தது. 

1921ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி சேர்.பொன்.அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறி தமிழர் மகா சபையை உருவாக்கினார். அப்போது தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வலுவான தமிழ் அமைப்புக்கள் இருக்கவில்லை.

இதனால், இலங்கை தீவில் வசிக்கும் அனைத்து தமிழர்களையும் இணைத்து 'தமிழ் அகத்தை' பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அருணாசலம் முன்வைத்தார். 

1920களில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவப் பிரச்சினை இருந்ததே ஒழிய இன ஒடுக்குமுறை இருக்கவில்லை. இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கு சிங்கள தரப்பிடம் அரசியல் அதிகாரமும் இருக்கவில்லை. கண்டியர்களின் சமஷ்டி கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்காமைக்கான பிரதான காரணம் இவைதான்.

டொனமூர் யாப்பு அரைப்பொறுப்பாட்சியை இலங்கையர்களுக்கு வழங்கியபோது அது பெரும்பான்மை மக்கள் என்ற அடிப்படையில் அதிகாரத்தை சிங்கள தரப்புக்கு கொடுத்தது. தமிழ் மக்கள் மீதும் ஒடுக்குமுறை பாயத் தொடங்கியது.

எனினும், சோல்பரி யாப்பின்படி முழு அதிகாரமும் சிங்களத் தரப்புக்கு வழங்கப்பட்டபோதே தமிழ் மக்கள் ஒடுக்குமுறையை அனுபவ ரீதியாக அடையாளம் காணத் தொடங்கினர். 

இவ்வாறு மனோ கணேசன் எழுப்பும் விவாத விடயங்கள் ஆழமான தரவுகளை வெளிக்கொண்டு வர தூண்டியிருக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56