(சி.சி.என்)
“2023ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் இலங்கையனாக மகிழ்ச்சியடைந்தாலும், ஒரு மலையகத் தமிழனாக கவலையடைகிறேன்” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ 22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது தெரிவித்தார்.
இதன்போது “வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு எதுவும் இல்லை. எனவே, தோட்டங்களை பிரித்துக் கொடுத்து தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே ஒரே வழியாகும்” என இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்க் கட்சிகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணி எதிராகவே வாக்களித்தது.
எனினும், எதிர்ப்பார்த்தது போன்றே இ.தொ.காவின் இரண்டு உறுப்பினர்களும் வரவு - செலவுத் திட்டத்தை விமர்சித்துவிட்டு, அதற்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்திலும் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வரவு - செலவுத் திட்டத்தை ஒருபோதும் விமர்சித்துப் பேசியதேயில்லை. அவர் பாராளுமன்றத்தில் பேசுவதே அபூர்வமாக பார்க்கப்பட்டது.
ஆனால், எப்போதும் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்தே வந்துள்ளார். அதையே இப்போது ஜீவனும் ராமேஷ்வரனும் செய்துள்ளனர்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின்போது, இ.தொ.கா. ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த கட்சியாக இருந்தது.
ஜனாதிபதி ரணில் தனது அமைச்சரவையில் இ.தொ.காவுக்கு அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றார்.
அதை வழங்குவதற்கு முன்னதாக இ.தொ.காவுக்கு சில சோதனைகளை அவர் வைக்கிறார் என்று தான் கூற வேண்டியுள்ளது. இ.தொ.காவும் இதை நிராகரிக்கவில்லை.
ஒரு நேர்காணல் நிகழ்வின்போது “அமைச்சுப் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், அது வழங்கப்படும் அமைச்சை பொறுத்தது” என ஜீவன் தெரிவித்திருந்தார்.
அவர் இராஜாங்க அமைச்சையோ அல்லது வெறும் அமைச்சுப் பதவியையோ எதிர்பார்த்திருக்கவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள தேசிய அமைச்சு ஒன்றையே எதிர்பார்த்துள்ளார் என்பது தெரிகின்றது.
ஆனாலும், தனது தந்தை அமரர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றில் பேசியதை விட ஜீவன் அதிகமாகவே பேசுகிறார். அமர்வுகளில் கலந்துகொள்கிறார்.
ஒரு தடவை பத்திரிகை நேர்காணலொன்றின் போது அமரர். ஆறுமுகனிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
"நீங்கள் ஏன் மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி பாராளுமன்றில் பேசுவதில்லை?" என்று.
அதற்கு அவர் “எல்லாவற்றையும் பாராளுமன்றில் பேசவேண்டிய அவசியமில்லை. அந்த தேவையும் காங்கிரஸுக்குக் கிடையாது. நாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேசி எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம். அந்த பலம் இ.தொ.காவுக்கு உள்ளது” என்று பதிலளித்தார்.
ஆனால், பேசவேண்டிய இடத்தில் தான் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற விடயத்தில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொள்ளவில்லை.
இவ்விடயத்தில் பாராளுமன்றில் அவருக்கு தகுந்த பாடங்களை கற்றுக்கொடுத்தது என்னவோ தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்கள் தான்.
தனி நபர் பிரேரணைகள், அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு, அதை பாராளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளல், சட்டமாக்குதல் என தமது நான்கு வருட கால பாராளுமன்ற காலத்தில் மலையக மக்களுக்காக அவர்கள் பல விடயங்களை பெற்றுக்கொடுத்தது பாராளுமன்றத்தின் ஊடாகத்தான்.
ஆனால், அமரர் ஆறுமுகனின் பாணியை இம்முறை வரவு - செலவுத் திட்டத்தில் ஜீவன் தொண்டமான் பின்பற்றத் தவறவில்லை.
வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட அன்று அது குறித்து பாராளுமன்றில் கருத்துத் தெரிவிக்காத அவர், பிரத்தியேகமாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுடன் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்தார். ஆனால், அங்கும் அவருக்கு சாதகமான பதில்களை ரணில் வழங்கவில்லை.
பின்னர் இரண்டாம் வாசிப்பின் மீதான இறுதி நாள் விவாதத்தில், “நாட்டுக்கு நல்ல வரவு - செலவுத் திட்டம். ஆனால், வீட்டுக்கு ஒன்றுமில்லை” என்ற ரீதியில் அவர் உரையாற்றியிருந்தார்.
இங்கே நாட்டின் தேசிய உற்பத்தியில் பங்களிப்பு செய்வதே பெருந்தோட்டத்துறை தான் என்ற விடயத்தை அவர் ஏன் மறந்தாரோ தெரியவில்லை.
எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் போன்று முகத்துக்கு நேரே கருத்தை முன்வைக்கும் தைரியம் ஜீவனுக்கு இல்லை.
“மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு ஒன்றுமே இல்லாத இந்த வரவு - செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன்” என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் அன்று பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா கட்சிகளும் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக பாராளுமன்றில் உரையாற்றிய ஜீவன், இதில் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதியிடம் வரவு - செலவுத் திட்டம் குறித்த தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த மனோ கணேசன், ஜனாதிபதி மலையகத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அவர் மலையகத்துக்கு வந்து என்ன சொல்லப்போகின்றார் என்பதை அறிய ஆவலாய் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
மனமாற்றத்துக்கு என்ன காரணம்?
ஸ்திரமான ஒரு அரசாங்கம் இல்லாததை விமர்சிக்கும் எதிரணியினர் பாராளுமன்றத்தை கலைக்கும்படி அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுத்து வருவது என்னவோ உண்மை.
மார்ச் மாதத்துக்குப் பிறகு ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை முன்வைத்தே அவர்கள் அவ்வாறு கூறி வருகின்றனர்.
நாட்டு மக்களின் ஆதரவோடும் முழுமையான அதிகாரங்களுடனும் ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதையே நாட்டு மக்களும் விரும்புகின்றனர். ஆனால், கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் பாராளுமன்றில் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடியும் வரை தான் அதை கலைக்கப்போவதில்லை என அவர் உறுதியாக தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக அமைச்சுப் பதவியை ஏற்பதா, இல்லையா என்ற குழப்ப நிலையில் இருந்தவர்களுக்கு ஒரு தெளிவு பிறந்துள்ளது. அது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் பொருந்தும்.
ரணிலின் ஆட்சி அடுத்த சில ஆண்டுகளுக்கு இப்படியே நகரும் என்பதை அறிந்தவர்கள் எப்படியும் அவருக்கு ஆதரவு வழங்குவதையே விரும்புவர்.
அமைச்சுப் பதவியொன்றை எதிர்ப்பார்த்திருந்த இ.தொ.காவுக்கு இந்த செய்தி காதுகளில் தேன் பாய்ந்ததை போல் இருந்திருக்கும்.
தமக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் அரசாங்கங்களை எச்சந்தர்ப்பத்திலும் விமர்சிக்காத போக்கையே இ.தொ.கா கடந்த 45 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றது.
இப்போதும் அது அவ்வாறே பயணிக்க தீர்மானித்துவிட்டதாகவே தெரிகின்றது.
வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கு வாக்களித்த மக்கள் பற்றி ஒரு வரியேனும் இல்லை என்பதை தெரிந்தும், அதற்கு ஆதரவு அளித்தமையே இதற்கு சிறந்த உதாரணம்.
"சிங்கள பேரினவாதத்தை திருப்திப்படுத்தும் வகையில் இலங்கையனாக பெருமையடைகிறேன்; இதேவேளை சிறுபான்மை மக்களை சாந்தப்படுத்துவதற்காக மலையகத் தமிழனாக வேதனை கொள்கிறேன்" என்றும் ஜீவன் தொண்டமான் கூறும் கருத்துக்களை இப்போதைய சூழ்நிலையில் மக்கள் காதில் போட்டுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்பதை இ.தொ.கா உணர்ந்துகொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM