முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு அவசியம்

By Digital Desk 2

27 Nov, 2022 | 11:27 AM
image

(எம்.எஸ்.தீன்) 

எல்லா ஆட்சியாளர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன் வைப்பதாக தெரிவித்து வந்துள்ளார்கள். அத்தகையதொரு கருத்தையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்குமாறு தமிழ் கட்சிகளும், சர்வதேச நாடுகளும் அவரை வேண்டிக் கொண்டன. அப்போது மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை விடவும் கூடுதலான அதிகாரங்களை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவிருப்பதாகவும் உறுதியளித்தார். ஆயினும் அவர் அதனைச் செய்யவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும் அவரது ஆட்சியில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பலவற்றை பறித்துக் கொள்ளும் நடவடிக்கைகளே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் போது இந்த நாடு பௌத்த சிங்கள மக்களுக்கு மாத்திரமே உரிமையான நாடு என்ற இனவாத கோஷத்தை பௌத்த இனவாத பிக்குகள் மற்றும் பௌத்த மேலாதிக்கவாத அமைப்புகளையும் துணையாக வைத்துக்கொண்டு தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றி கொண்டனர். ஆனால் அவர்களால் கூட எந்தவிதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எடுக்க முடிந்திருக்கவில்லை.

இந்தப் பின்னணியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை முன்வைப்பாராயின் அதனை பாராட்ட வேண்டும். ஆனால் எல்லா காலங்களிலும் எல்லா ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் முன்வைத்த மாதிரியே ரணில் விக்கிரமசிங்கவும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக கருத்துக்களை முன் வைப்பராயின் நாடு இன்னமும் பின்னடைவையே சந்திக்கும் என்பதே யதார்த்தமாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதியென்றினை முன்வைத்தார். அதனை சிறுபான்மை கட்சிகளும் இன்றும் ஓரளவுக்குச் சிறந்ததென தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. சந்திரிகாவின் அரசியல் தீர்வுப் பொதியை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எதிர்க்கட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த தீர்வுப் பொதியை கடுமையாக எதிர்த்தனர். மட்டுமல்லாமல் தீர்வுப்பொதி பிரதிகளை பாராளுமன்ற அமர்வின் போது கிழித்து, தீ வைத்தனர்.

சந்திரிகாவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதியானது மூவின மக்களையும் ஓரளவுக்கு திருப்திப்படுத்தக் கூடியதாக இருந்த போதிலும் அன்றைய எதிர்க்கட்சி காட்டிய எதிர்ப்பின் காரணமாகவும், பௌத்த இனவாதிகளும், பௌத்த இனவாத அமைப்புகளும் நாட்டைப் பிரித்து விடப்போகின்றார்கள் என்று சிங்களவர்களிடையே பிரசாரம் செய்ததன் காரணமாகவும் அந்த தீர்வினை அமல்படுத்த முடியவில்லை. 

அன்று ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாது, கட்சியின் அரசியல் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்பட்டதன் விளைவாக தற்போது வரைக்கும் எந்தவொரு அரசியல் தீர்வினையும் காணமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிற்கின்றது.

இப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச இருப்பதாகவும், குறிப்பாக வடமாகாண தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வுகளை காண இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கிழக்கு மாகாணத்தை கவனத்தில் கொள்ளவில்லை. 

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இனப்பிரச்சினையால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்கள் பல இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆயினும் முஸ்லிம் மக்களைப் பற்றி எந்தவொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்வதில்லை.

இந்த நிலைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் கட்சிகளும் தான் காரணமாகும். ஏனென்றால் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினையை சர்வதேச மையப்படுத்தவும் அல்லது ஆட்சியாளர்களுடன் பேசி முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வு வேண்டுமென்று வலியுறுத்துவதற்கு அவர்கள் தவறியுள்ளனர். 

காலத்திற்கு காலம் வரும் அரசாங்கத்தோடு ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களை புகழ்ந்து பேசுவதும், முஸ்லிம் மக்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும் என்ற தோரணையில் ஆட்சியாளர்களை புகழ்ந்து பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கருத்துக்களை முன்வைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகையதொரு வரலாற்று பின்னணியில் தான் பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான நசீர் அஹமட் ஜனாதிபதி ரணில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதற்கு உளத்தூய்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்று புகழ்ந்துள்ளார்.

ஜனாதிபதி இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கின்ற போது அது முஸ்லிம் மக்களுக்குமான தீர்வாக அமைய வேண்டும். காலங்காலம் ஏமாற்றுவதை போன்று இம்முறையும் ஏமாற்றுவதற்கானகருத்தாக அமையுமாயின் அது மிகவும் கவலைக்குரியதாக அமையும். 

முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எந்தவொரு  திட்டத்தையும் வைத்திருப்பதாக தெரியவில்லை. முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகள் குறித்து புள்ளி விபரங்களை வைத்திருப்பதாகவும் நமக்கு அறிய முடியவில்லை. முஸ்லிம் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைப் பற்றியும், அதனுடைய அவசியத்தை பற்றி உணர்ந்ததாக தெரியவில்லை.

முஸ்லிம்களுடைய பிரச்சினைக்கான தீர்வாக முஸ்லிம் மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்குமாவின் அத்தகையதொரு அரசியல் அதிகாரத்தின் ஊடாக முஸ்லிம் சமூகத்தினுடைய எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்றதொரு கணிப்பைக் கூட செய்ய முடியாதவர்களாகவே முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் இருந்து கொண்டுதான் காலத்துக்கு காலம் ஆட்சியாளர்களை புகழ்ந்து துதிபாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளிடையேயும், பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயும் எதிர்க்கட்சியில் இருக்கின்ற போது ஒரு நிலைப்பாடும், ஆட்சியாளர்களுடன் இணைந்துகொண்டிருக்கின்றபோது இன்னொரு நிலைப்பாடும் கொண்டிருக்கின்றார்களே அல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வு குறித்து எந்த ஒரு கொள்கையையும் முஸ்லிகளுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. 

கட்சிவாதம், பிரதேசவாதம் போன்றவற்றை முன்வைத்து தமது அரசியல் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்குரிய நகர்வுகளை மேற்கொள்கின்றார்களே அல்லாமல் முஸ்லிம் சமூகத்தினுடைய எதிர்காலம் குறித்தான நகர்வுகளை மேற்கொள்வதற்கு யாரும் இல்லை என்பது தான் முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் வெற்றிடமாகும்.

முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்களின் ஒடுக்குதல்களாலும், இனப் பிரச்சினையாலும், பௌத்த இனவாதிகளினுடைய நெருக்குவாரங்களினாலும் இழந்தவை ஏராளமாகும். அவ்வாறு இழந்தவற்றில் ஒரு சதவீதத்தைக் கூட முஸ்லிம்கள் இன்று வரை பெற்றுக் கொள்ளவில்லை. முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு சில வீதிகளை அபிவிருத்தி செய்வதும், ஒரு சில கட்டிட நிர்மாண வேலைகளையும் செய்வதும்தான் முஸ்லிம்களுடைய உரிமைகள் என்று மக்களுக்கு காட்டுகின்ற பித்தலாட்டக்காரர்களாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் காணப்படுகின்றார்கள்.

இத்தகையதொரு நிலையை முஸ்லிம் அரசியலில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு  முஸ்லிம் சமூகம் தமது நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு முஸ்லிம்கள் புதியதொரு வழியினை காண வேண்டும். புதிய சிந்தனையில் தங்களுடைய கவனத்தைச் செலுத்த வேண்டும். முஸ்லிம்களின் எதிர்காலம் சுபிட்சமாக அமைய வேண்டுமாயின் அந்த கடமையை இன்றைய முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்வார்கள் என்று நம்புவதற்கில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56