வெற்றி பெற்றது எப்படி?

By Digital Desk 2

27 Nov, 2022 | 11:07 AM
image

(சத்ரியன்)

"பஷில் ராஜபக்ஷ வரவு,செலவுத் திட்டத்தை வெற்றிபெற வைத்தாரா- அல்லது அது தானாகவே நிகழ்ந்த வெற்றியா என்பது கேள்விக்குரியது” 

"வரவு,செலவுத் திட்டத்துக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களே கடைசியில் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்"

‘காகம் இருக்க பனம்பழம் விழுந்தது போல’, என்றொரு பழமொழி உள்ளது.

‘அரகலய’ போராட்டக்காரர்களால் கபுடா அல்லது காகம் என்று அழைக்கப்பட்ட பஷில் ராஜபக்ஷ, நாட்டுக்குள் வந்த நிலையில், வரவு,செலவுத் திட்டம், 37 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றுவது கடினம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதனைத் தோற்கடிப்பதற்கான காய்களை நகர்த்தி வந்த நிலையில் தான், பஷில் ராஜபக்ஷ மீண்டும் உள்ளே வந்தார்.

வரவு,செலவுத் திட்டத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதற்காகவும், பொதுஜன பெரமுனவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் தான், பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாக, அவரது ஆதரவாளர்கள் தகவல் வெளியிட்டு வந்தனர்.

பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பிய போது, விமான நிலையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, பதவியில் இல்லாத போதும், அரசாங்க வரப்பிரசாதங்களை அவர் தாராளமாகப் பெற்றுக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.

அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் பஷில் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அவரது விசுவாசிகள் உள்ள நிலையில், இவ்வாறான வரவேற்பு உபசாரங்கள் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதுபற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. ஆனால் அரசாங்கம் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.  ஏனென்றால், அரசாங்கத்தின் வரவு,செலவுத் திட்டத்தை வெற்றிபெற வைக்க வேண்டும். அதற்கு பஷில் ராஜபக்ஷவின் உதவி தேவை.

இந்தநிலையில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும், வரவு,செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க அல்லது எதிர்த்து வாக்களிக்காமல் ஒதுங்கி கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

எவ்வாறாயினும், பஷில் ராஜபக்ஷ வரவு,செலவுத் திட்டத்தை வெற்றிபெற வைத்தாரா- அல்லது அது தானாகவே நிகழ்ந்த வெற்றியா என்பது கேள்விக்குரியது. அதேவேளை, ஆரம்பத்தில் இருந்ததை விட அரசாங்கத்துக்கான ஆதரவு குறைந்து வருகிறது.

பஷிலிடம் அல்லது ராஜபக்ஷவினரின் கைகளில் இருந்த ஆசனங்கள் இப்போது குறையத் தொடங்கியிருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் வரவு,செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகள் தான் கிடைத்திருக்கின்றன.

ராஜபக்ஷவினர் நேரடி அதிகாரத்தில் இருந்தபோது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடிய நிலையில்- அதற்கு மிக நெருக்கமான ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருந்தனர்.

இப்போது, வரவு,செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 121 ஆக குறைந்திருக்கிறது. இது பாராளுமன்றத்தில், சாதாரண பெரும்பான்மையை விட, 8 ஆசனங்கள் தான் அதிகம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பஷில் ராஜபக்ஷ உள்ளே வந்திருந்தது உண்மை என்றால், அந்த முயற்சியில் அவர் தோல்வியைச் சந்தித்திருக்கிறார் என்பது உறுதி. அதேவேளை எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையான சூழல் குறைந்திருக்கிறது.

வரவு,செலவுத் திட்டத்துக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்த கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்களே கடைசியில் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் அல்லது வாக்களிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

வரவு,செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்புக்கு வீணாக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை தாங்கள் எதிர்க்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால், கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும், வாக்களிப்பின் போது சபையில் இருக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் வகையில், கூட்டமைப்பு உறுப்பினர்கள், வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் இருக்கவில்லை.

இவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து இந்த முடிவை எடுத்தனரே தவிர, பஷில் ராஜபக்ஷவுடன் எந்த பேரத்தையும் முன்னெடுத்திருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருந்தாலும் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க கூடிய சூழலே காணப்பட்டது. அதேவேளை, பொதுஜன பெரமுனவை உடைவில் இருந்து மீட்கும் முயற்சிகளில் பஷில் ராஜபக்ஷவுக்கு பெரியளவில் வெற்றி கிட்டவில்லை.

ஏனென்றால், பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட, விமல் வீரவன்ச தலைமையிலான சுயாதீன அணியும், ஜி.எல்.பீரிஸ் - அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயாதீன அணியும், வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றன

அவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர அல்லது வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பஷில் ராஜபக்ஷவினால் முடியாது போயுள்ளது.

அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியை அடுத்து சுயாதீன அணியாக பிரிந்து சென்றவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஜோன் செனவிரத்ன, அதாவுல்லா, பிரியங்கார ஜயரத்ன, நிமல் லான்சா, துமிந்த திசநாயக்க, ஜீவன் தொண்டமான், அலி சப்ரி ரஹீம் மற்றும் இராமேஸ்வரன் ஆகியோர், வரவு,செலவுத் திட்டத்தை ஆதரித்திருக்கிறார்கள்.

மொட்டு உறுப்பினர்களான சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, ஜெயரத்ன ஹேரத், அசங்க நவரத்ன, ஹரீஸ் போன்றவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ், வேலுகுமார் ஆகியோரும் வாக்கெடுப்பு நேரத்தில் சபையில் சமூகமளிக்காமல் இருந்தமை கவனிப்புக்குரியது.

இந்த வரவு,செலவுத் திட்டத்தில் கட்சிகள் எடுத்த உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு அப்பால் பல உறுப்பினர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்ததும், தமிழ் காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்ததும், ஐதேக உறுப்பினர் ஆதரித்ததும் மட்டும் தான்- கட்சிகளின் ஒருமித்த முடிவாக இருந்தது.

மற்றபடி பொதுஜன பெரமுனவில் வெற்றி பெற்றவர்கள், ஆதரித்து- எதிர்த்து வாக்களித்தனர், வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன மாத்திரமன்றி, தமிழ் முற்போக்கு கூட்டணியிலும் முரண்பட்ட முடிவுகள் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த வரவு,செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவது ரணில்- ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கியமான தேவையாக இருந்தது.

ஆட்சியை நீடித்துச் செல்வதற்கு வரவு,செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படாமல் இருப்பது அவசியமானது. இல்லையேல் புதிய அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்க நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அதற்குள் பல்வேறு குழப்பங்கள் நேர்ந்திருக்கும். அதைவிட தேர்தலுக்குச் செல்லும் நிலையும் ஏற்படக் கூடும்.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தப்பிப் பிழைத்திருக்கிறது. இது ராஜபக்ஷவினருக்குக் கிடைத்த வெற்றி என்பதை விட ரணிலுக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.

அதேவேளை, பஷில் ராஜபக்ஷவின் வருகை, பொதுஜன பெரமுனவின் மீள் எழுச்சிக்கான ஒரு அடையாளமாக பலர் குறிப்பிட்டிருந்தாலும், அவரை வரவேற்க ராஜபக்ஷ குடும்பத்தினர் எவரும் விமான நிலையத்துக்கு செல்லாதமை முக்கியமானதொரு விடயமாக பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவை மீளக் கட்டியெழுப்புவது இனி ராஜபக்ஷவினரின் குடும்ப முகாமை மீளக் கட்டியெழுப்புவதாக மாத்திரம் இருக்காது. ஏனென்றால் ராஜபக்ஷவினருக்கு எதிரான கிளர்ச்சியே வெடித்தது என்பதால், இனி குடும்ப அரசியலை அவர்களை முன்னிறுத்துவதை தவிர்க்க கூடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56