வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா நகரசபை 

Published By: Nanthini

27 Nov, 2022 | 11:26 AM
image

(பாலநாதன் சதீஸ்)

வ்வொரு மாவட்டத்திலும் அமைவு பெற்றுள்ள உள்ளூராட்சி அமைப்பான ஒவ்வொரு நகரசபைக்கும் உரித்தான காணிகள், கடைகள் வியாபார நோக்கம் கருதி சபையினர் வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்காக குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டு, அதிலிருந்து சபையினர் வருமானங்களை ஈட்டி, அதனை நகரின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது வழக்கமான செயற்பாடாகும். 

அந்த வகையில் வவுனியா நகர சபையினர் நகருக்குட்பட்ட பத்து வட்டார பகுதிகளிலும் தமக்குரிய காணிகள் மற்றும் கடைகளை வாடகைக்கு கொடுத்து, அதில் கோடிக்கணக்கான வருமானங்களை பெற்று வருகின்றனர். 

சபையினரின் எல்லைக்குட்பட்ட வவுனியா ஹொறவப்பொத்தான வீதியில் 18, கண்டி வீதியில் 2, யாழ் வீதியில் 8, VP Lot 30, பஜார் வீதியில் 16, தர்மலிங்கம் வீதியில் 21 என மொத்தமாக 95 காணிகள் ஒப்பந்தம் மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சபையினர் கோடிக்கணக்கான வருமானங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

அதேபோன்று வவுனியா பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 118 கடைகள், நவீன சந்தை - 97 கடைகள், சந்தை சுற்றுவட்ட வீதி - 46 கடைகள், சின்ன புதுக்குளம் - 12 கடைகள், குருமன்காடு - 4 கடைகள், பூந்தோட்டம் - 4 கடைகள், கந்தசாமி கோவில் வீதி - 3 கடைகள், கோவில் குளம் - 7 கடைகள், கருவாட்டு கடை - 2, தினச்சந்தை - 35 கடைகள், சந்தை கோழிக்கடை - 2 என்பதாக மொத்தம் 334 கடைகள் சபையினரால் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. 

அத்தோடு சபையினருக்கு சொந்தமான காணிகள், கடைகள் ஒப்பந்தம் மூலமே வாடகைக்கு விடப்படுகின்றன. 

சபையினருக்கு உரித்தான ஒவ்வொரு காணிகளும் கடைகளும் 5 வருட குறுகிய கால ஒப்பந்தம் மூலமே வழங்கப்படுகின்றது. 

ஐந்து வருடகாலம் முடிவடைந்ததும், மீள் ஒப்பந்தம் செய்து, வாடகைக்கு விடவேண்டும். இதுவே சபையினரின் கடமையும் பொறுப்புமாகும். ஆனால், சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகள், காணிகளில் 239 கடை மற்றும் காணிகளுக்கான மீள் ஒப்பந்தத்தினை இதுவரை மேற்கொள்ளவில்லை. 

எடுத்துக்காட்டாக, கணக்காய்வு திணைக்களத்தினரால் 2017ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் கடை வாடகைகள் அறவிடப்படும் 82 கடை உரிமையாளரிடம் வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் கடை வாடகை அறவிடப்பட்டுவரும் 276 கடை உரிமையாளர்களிடம் மீள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

கணக்காய்வு திணைக்களத்தினரால் 2018ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், சபைக்கு சொந்தமான 58 கடைகள் வாடகைக்கு விடப்பட்டும், கடந்த 47 ஆண்டுகளாக அவற்றுக்கான வாடகை ஒப்பந்தம்  தயாரிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வாடகைக்கு வழங்கப்பட்ட சபைக்கு சொந்தமான 315 கடைகள் மற்றும் காணிகளுக்கான வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்து 33 ஆண்டுகள் கடந்தும் மீள் ஒப்பந்தம் செய்யப்படாமல் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 

அதேபோன்று கணக்காய்வு திணைக்களத்தினரால் 2019ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், சபைக்கு சொந்தமான வாடகைக்கு வழங்கப்பட்டிருந்த 58 கடைகள் தொடர்பில் கடந்த 47 ஆண்டுகளாக வாடகை ஒப்பந்தம் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி, வாடகை ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். 

அதற்கு சபையின் கணக்கீட்டு உத்தியோகத்தர், ஒப்பந்தம் செய்யப்படாத கடைகளில் அதிகமானவை கைமாற்றப்பட்டுள்ளன. நகரசபைக்கு அறிவிக்காமல் கடைகள் விற்கப்பட்டு அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அத்துடன் சிலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும்  அறியக்கூடியதாக உள்ளது. இதனால் வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. 

அத்துடன் எமது அனுமதியின்றியும் எமக்கு அறிவிக்காமலும் மேற்கொள்ளப்பட்ட உரிமைமாற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை இவ்வேளை அறியத்தருகிறேன் என பதிலளித்திருந்தார். 

அதே ஆண்டு குறித்த அறிக்கையில் பின்வருமாறும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

சபையினரால் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்த 315 கடைகள் மற்றும் காணிகளுக்கான வாடகை ஒப்பந்த காலம் நிறைவடைந்து, 33 ஆண்டுகள்  கடந்த நிலையிலும், அவை தொடர்பில் மீள் ஒப்பந்தம் செய்யப்பட்டிராமல் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருந்தது என்பதை சுட்டிக்காட்டி, மீள ஒப்பந்தம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.  

அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் ஒப்பந்தம் செய்யப்படாத கடைகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவித்தல் வழங்கி, ஒப்பந்தங்களை புதுபித்து வழங்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என பதிலளித்திருந்தார்.

அதேபோல கணக்காய்வு திணைக்களத்தினரால் 2020ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், சபைக்கு சொந்தமான வாடகைக்கு விடப்பட்டிருந்த 58 கடைகள் தொடர்பில் 47 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதற்கு கணக்கீட்டு உத்தியோகத்தர் பதிலளிக்கையில், ஒப்பந்தம் செய்யப்படாத கடைகள் தொடர்பில் அறிவித்து, ஒப்பந்தங்களை புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

குறித்த விடயம் தொடர்பாக கட்டுரையாளர் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் வாடகைக்கு விடப்பட்ட, வாடகை ஒப்பந்தம் முடிவடைந்த காணிகள் மற்றும் கடைகளின் விபரங்கள், ஒப்பந்தம் செய்யப்படாமைக்கான காரணங்கள் தொடர்பாக வினவியபோது, 

239 கடைகள் மற்றும் காணிகள் இதுவரை மீள் ஒப்பந்தம் செய்யப்படவில்லை எனவும், 2022ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒப்பந்த காலம் முடிவடையும் காலப்பகுதிகளில் இன்று வரை 60 கடைகள் மற்றும் காணிகளுக்கான மீள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனவும்,  வவுனியா நகரசபையினரால் வாடகைக்கு வழங்கப்பட்ட கடைகள், காணிகளுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒப்பந்தம் செய்யப்படாத கடைகளில் அதிகமானவை கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

நகரசபைக்கு தெரியப்படுத்தப்படாமல் கடைகள் விற்க அல்லது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அத்துடன் சிலர் வெளிநாடு சென்றுள்ளனர். இதனால் வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என  பதிலளித்திருந்தார். 

ஆகவே, கணக்காய்வு திணைக்களத்தினரின் அறிக்கையினையும் கட்டுரையாளரால் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2017 - 2020 வரையான கணக்காய்வு திணைக்களத்தினரின் கணக்காய்வு அறிக்கையில் தொடர்ச்சியாக சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகள் மற்றும் காணிகளின் மீள் ஒப்பந்தம் தொடர்பாக சுட்டிக்காட்டியும்,  சபையினர் மீள் ஒப்பந்தம் செய்யப்படாத கடைகள், காணிகளுக்கான ஒப்பந்தத்தினை இதுவரை செய்து முடிக்கவில்லை.  

பல வருடங்களை கடந்தும் ஒப்பந்தம் மேற்கொள்ள பல காரணங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றார்களே தவிர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. 

அது ஒருபுறமிருக்க, சபையினரால் வாடகைக்கு விடப்பட்ட கடைகளிலிருந்து சபையினர் சரியான முறையில் இதுவரை வாடகைப் பணத்தினை அறவிடவில்லை. இதனால், சபையினருக்கு கிடைக்கவேண்டிய வருமானம் இல்லாமல் போகின்றது. 

இவ்வாறான சபையினரின் வருமான இழப்புக்கு சபையினரின் அசமந்தப்போக்கும், அவர்களின் பொறுப்பற்ற செயலுமே காரணமாக அமைகின்றது. 

எடுத்துக்காட்டாக, கணக்காய்வு திணைக்களத்தினரால் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொழிப்பு அறிக்கையில், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் வியாபார அனுமதிப்பத்திரம் திருத்தம் செய்யப்பட்டு வாடகை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமையின் அடிப்படையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.  

அத்தோடு சபைக்கு சொந்தமான கடைகள் பல வருடங்களுக்கு முன் 'கேள்வி கோரல்' மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட 265 ஒப்பந்தக்காரர்கள், குறித்த கடைகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததுடன், சிலர் அதிக தொகையில் வாடகைக்கு கொடுத்ததனால் சபைக்கு கிடைக்க வேண்டிய 6,18,00,000 ரூபா கிடைக்காமல் உள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர். 

இது தொடர்பாக கணக்காய்வு திணைக்களத்தினரால் 2018ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில் அறவிடப்பட வேண்டிய வாடகை 5,434,907  ரூபா குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக சபையினரால் அறவிடப்பட, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியிருந்தனர். 

அதேபோன்று கணக்காய்வு திணைக்களத்தினரால் 2019ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், அறவிடப்பட வேண்டிய வாடகை 2,71,8408 ரூபா குறித்து சபையினர் கடந்த 5 ஆண்டுகளாக அறவிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளுக்குமான வாடகை தொகையை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என கூறியமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர், அறவிடப்பட வேண்டிய வாடகை, குத்தகைகளின் நிலுவைகளில் 2018.12.31 திகதி வரை 5,300,770 ரூபாவும், 2019.04.30 வரை 2,582,362.45 ரூபாவும் அறவிடப்பட்டதோடு, மிகுதி நிலுவையை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறியிருந்தார். 

கணக்காய்வு திணைக்களத்தினரால் 2020ஆம் ஆண்டு வெளிவந்த பொழிப்பு அறிக்கையில், அறவிடப்பட வேண்டிய வாடகை தொகை  3,513,223 ரூபாவை சபையினர் அறவிட கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதற்கு சபையினரின் கணக்கீட்டு உத்தியோகத்தர் அறவிடப்பட வேண்டிய வாடகை, குத்தகை நிலுவை தொகையாக  1,765,167 ரூபா அறவிடப்பட்டுள்ளது எனவும் மிகுதி நிலுவையை அறவிட நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இது தொடர்பாக கட்டுரையாளர் சபையினருக்கு சொந்தமான வாடகைக்கு விடப்பட்ட கடைகளின் வாடகை நிலுவை தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி வினவியபோது 2,57,750 ரூபா நிலுவை அறவிடப்படாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஆகவே, கணக்காய்வு திணைக்களத்தினரின் கணக்கறிக்கையையும், தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலையும் ஒப்பிட்டு நோக்கும்போது சபையினரால் அறவிடப்பட வேண்டிய வாடகைகள் இதுவரை சபையினரால் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், 2021ஆம் ஆண்டுக்கான கடைகள் மற்றும் காணிகளுக்கான வாடகை நிலுவை இதுவரை சபையினரால் முழுமையாக அறவிடப்படவில்லை. 

இதனை கணக்காய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் சபையினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகின்றனரே தவிர, இதுவரை காணிகள், கடைகளுக்கான வாடகை அறவிடப்படவில்லை என்பதே தொடர்ச்சியான உண்மை.  

இவ்வாறு சபையினர் தமது கடமையில் அசண்டையீனமாக செயற்படுவதே அவர்களுக்கு  கிடைக்கவேண்டிய வருமான இழப்புக்கு காரணமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு...

2023-03-03 13:17:57
news-image

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை...

2023-02-28 10:37:11
news-image

ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: ...

2023-02-22 15:18:51
news-image

பயிற்சியளிக்காமல் சுகாதார தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்...

2023-01-30 18:11:10
news-image

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா...

2022-11-27 11:26:50
news-image

வடக்கில் கடலட்டை மாபியா !

2022-10-13 15:48:06
news-image

வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை

2022-09-27 10:32:07
news-image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு...

2022-08-22 11:00:02
news-image

கட்டுப்படாத வவுனியா நகரசபை

2022-08-02 16:29:14
news-image

நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய...

2022-07-30 20:45:34
news-image

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு...

2022-07-23 15:19:14