அரகலயவுக்கு எச்சரிக்கை

By Digital Desk 2

27 Nov, 2022 | 10:33 AM
image

(கார்வண்ணன்)

“அவுஸ்திரேலிய- இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட குமார் குணரட்ணம், நல்லவரானால், அமெரிக்க- இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட பஷில் எப்படி கெட்டவரானார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜனாதிபதி ரணில்”

வரவு, செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற மறுநாள், பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிய குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரகலய போராட்டக்காரர்களுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் இன்னொரு போராட்டத்தை நடத்த அனுமதிக்கமாட்டேன். அவ்வாறான போராட்டத்தில் இறங்கினால், இராணுவத்தை களம் இறக்குவேன், அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப் படுத்துவேன் என்றெல்லாம் அவர் பகிரங்கமாகவே அச்சுறுத்தியிருக்கிறார். 

அரகலய போராட்டம் தான், ரணில் விக்கிரமசிங்க இப்போது ஜனாதிபதி பதவியில் இருப்பதற்கு காரணம்.

அவர் ஒற்றை உறுப்பினராக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த போது, அரகலய போராட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருந்தார். 

அமைதியான முறையில் போராடும் அவர்கள் மீது கை வைத்தால பொறுத்துக் கொள்ள முடியாது என்றெல்லாம் அப்போது கூறியிருந்தார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக- ஜனாதிபதியாகப் பதவிக்கு வந்த பின்னர், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதற்காக அவர் அவசரகாலச் சட்டத்தையும் பிரகடனம் செய்திருந்தார். இராணுவத்தையும் களம் இறக்கியிருந்தார்.

மீண்டும் அதனைச் செய்வேன் , அதற்குத் தயங்கமாட்டேன் என்று இப்போது கூறியிருக்கிறார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷவினரைப் பாதுகாக்க முனைகிறார் என்பதையும் அந்த உரையில் இருந்து தெளிவாக உணர முடிந்திருக்கிறது.

அவுஸ்திரேலிய- இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட குமார் குணரட்ணம், நல்லவரானால், அமெரிக்க- இலங்கை இரட்டைக் குடியுரிமை கொண்ட பஷில் எப்படி கெட்டவரானார்? என்று அவர் சபையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதன் அர்த்தம் என்ன?- பஷில் ராஜபக்ஷவை நல்லவர் என்று அடையாளம் காட்ட முனைகிறாரா? ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தை வெளியிட்ட அதேநாள், சபையில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, தங்களின் ஆட்சியை சர்வதேச, உள்ளூர் சக்திகள் இணைந்து கவிழ்த்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

சில சர்வதேச சக்திகள், தேசிய வளங்களை குறிவைப்பதாகவும், அதற்கு உள்நாட்டு முகவர்கள் துணை நிற்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பொருளாதாரச் சீரழிவுக்குப் பின்னால் சர்வதேச சக்தி ஒன்று இருப்பதாகவும் அது இன்னமும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கிறார்.

2015இல் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ இதே கருத்தை கூறியிருந்தார்.  தன்னைத் தோற்கடிப்பதற்கு இந்தியப் புலனாய்வுத் துறை தீவிரமாகப் பங்காற்றியது என்றும், அமெரிக்காவும் உதவியது என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் இந்தியாவுடன் முரண்படுவதை தவிர்ப்பதற்காக, அதுபற்றிப் பேசுவதை மஹிந்த ராஜபக்ஷ தவிர்க்க முயன்றார்.

இப்போது அவர் பொருளாதார சீரழிவுக்கு சர்வதேச சக்தியின் மீது பழிபோட்டிருக்கிறார். உக்ரேன் போரும், கொரோனா தொற்றும் பொருளாதாரச் சீரழிவில் தாக்கத்தைச் செலுத்தியது உண்மை தான்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தாங்க முடியாத கடன்களை வாங்கி நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்ட போது நல்லாட்சியின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சபையில் அமைதியாகத் தான் இருந்தார்.

அவ்வாறே வைத்துக் கொண்டாலும், இரண்டரை ஆண்டுகளில் கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தவறான முடிவுகள், அதனால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பேரிழப்புகளை மறைத்து விட்டு- சர்வதேச சக்தி தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று முழுப் பூசினிக்காயை சோற்றில் புதைக்க முயன்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.

கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான முடிவுகள் தான் ஆட்சி கவிழக் காரணம் என்று அவருடன் கூட இருந்தவர்களே கூறுகிறார்கள். 

தவறான நேரத்தில சரியான முடிவை எடுத்தது தான் அவர் செய்த தவறு என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரத்தை சீரழித்ததற்குப் பின்னால் சர்வதேச சக்தி இயங்கியிருப்பதாக கூறுகிறார்.

ராஜபக்ஷவினரால் பொருளாதாரம் சீரழியவில்லை என்கிறார் மஹிந்த. பஷில் எப்படி தவறானவர் ஆனார் என்று கேட்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அவ்வாறாயின், இந்த நான்கு பேரும் ஒரே புள்ளியில் இருக்கின்றனர், இயங்குகின்றனர் என்றே தெரிகிறது.

ரணில் விக்கிரமசிங்க  தவிர வேறெவரும் ஆட்சிக்கு வந்திருந்தால் நாடு மயானபூமி ஆகியிருக்கும் என்று, ராஜபக்ஷவினரின் விசுவாசியான றோகித அபேகுணவர்த்தன அதே சபையில் கூறியிருந்தார்.

றோகித அபேகுணவர்த்தன உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினர் தான், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், மீண்டும் ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வராவிட்டால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று பிரசாரம் செய்தனர்.

2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவைத் தவிர வேறெவராலும் நாட்டைப் பாதுகாக்க முடியாது என்று கூறித் தான் அவர்கள் சிங்கள மக்களிடம் வாக்குகளைக் கேட்டனர். அப்போது, ரணில் விக்கிரமசிங்க, எதிரணியில் இருந்தார், அவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தார்.

இப்போது, ரணில் விக்கிரமசிங்கவை, விட்டால் வேறெவராலும் நாட்டைக் காப்பாற்ற முடியாது என்று ராஜபக்ஷ விசுவாசிகள் கூறுகிறார்கள்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயல்கிறார் என்பது உண்மை. அதற்கான முயற்சிகளை அவர் சிரமப்பட்டு முன்னெடுக்கிறார் என்பதும் உண்மை.

ஆனால், இந்த நெருக்கடிகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நெருக்கடிகளுக்கு காரணமானவர்களைப் பதவியில் இருந்து அகற்றியவர்களுடன் பகைமை பாராட்டுகிறார்.

அவர்களை நாட்டின் எதிரிகளாக- தேச விரோதிகளாக அடையாளப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துகிறார்.

இலங்கையின் வரலாறு கண்டிராத பல அதிசயங்களை நிகழ்த்தியது அரகலய போராட்டம். அந்தப் போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பி விட்டது ராஜபக்ஷவினர் தான்.

அலரி மாளிகைக்குள் இருந்து, பொல்லுகளுடன்  வெளியே வந்த குண்டர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் போராட்டக்காரர்கள் மீது நடத்திய கோரத் தாக்குதலுக்குப் பின்னர் தான்- அந்தப் போராட்டத்தில் வன்முறை ஆரம்பித்தது.

அந்தப் போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பி விட்டதில் அரசியல் தலைமைகளுக்கு இருந்த பொறுப்பை மறைத்துக் கொண்டு ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் வன்முறையாக சித்திரிக்க முயன்றிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

போராட்டத்தில் சில வன்முறைகள் இடம்பெற்றன. அது கண்டிக்கப்பட வேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க எல்லாமே வன்முறைப் போராட்டம் என்பது போல அடையாளப்படுத்தியிருக்கிறார்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்த ஊடகங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். இது ஊடகங்களின் மீது அவர் கை வைக்கப் போகிறார் என்பதற்கான அடையாளம்.

ஊடகங்கள் அந்தப் போராட்டத்தை ஆதரித்ததாக குற்றம்சாட்டும் ரணில் விக்கிரமசிங்கவே, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததை ஒருபோதும் மறைக்க முடியாது. ஊடகங்கள் போராட்டத்தை ஆதரித்தது தவறு என்றால், ரணில் விக்கிரமசிங்க ஆதரித்தது மட்டும் எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்