வந்தது  டோவலா ? - கோயலா?

By Digital Desk 2

27 Nov, 2022 | 10:25 AM
image

(சுபத்ரா)

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக வரப் போகிறார் என, கடந்த வாரத்துக்கு முந்திய வார இறுதியில் ஆங்காங்கே சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

அவரது பயணத்தின் நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முயன்றவர்கள் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது பற்றிய எந்த தகவலையும் இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

ஆனால், இந்தியப் பிரதமர் செயலகத்தில் இருந்து முக்கியமானதொரு செய்தியுடன், டோவல் கொழும்புக்குப் பயணமாகியுள்ளதாக புதுடெல்லியில் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் கூறின.

கொழும்பு வந்த டோவல் யார் யாரையெல்லாம் சந்தித்தார், என்னவெல்லாம் பேசினார் என்ற எந்த அதிகாரபூர்வ தகவலும், அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

சுயாதீன செய்தி வட்டாரங்கள் மட்டும், அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், ஏனைய பல அரசாங்க முக்கியஸ்தர்கள், மற்றும் அரசியல் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார் என்றும் குறிப்பிட்டன.

இந்தப் பின்னணியில் அஜித் டோவல் உண்மையிலேயே இலங்கைக்கு வந்து சென்றாரா? அவரது பயணம் ஏன் இரகசியமாக வைக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அஜித் டோவலின் கொழும்பு பயணம் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவல்கள் வெளிவந்திருக்காது.

அந்தளவுக்கு அந்தப் பயணத் திட்டத்தில் உயர் இரகசியம் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.

அதையும் மீறி பயண இரகசியம் வெளிப்பட்டிருந்தால், அதனை யார் வெளிப்படுத்தியது என்ற கேள்விக்கு விடையறியும் விசாரணைகளும் நடக்கும்.

அஜித் டோவலின் இலங்கைப் பயணம் பற்றிய தகவல்கள் முதலில் புதுடெல்லியில் இருந்தே கசிந்திருக்கின்றன.

அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து விசேட கடிதம் ஒன்றைக் கொண்டு செல்கிறார் என்ற தகவலும் வெளியானது.

ஆனால் அதிகாரபூர்வமாக அதனை இந்தியா வெளிப்படுத்தவில்லை. இந்தியா சில விடயங்களை இரகசியமான முறையில் நகர்த்த முயற்சித்திருந்தார் அது ஆச்சரியமல்ல.

புதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர்  மிலிந்த மொரகொடவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். கடந்த 12ஆம் திகதியும் கூட இரண்டு பேரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

அந்தச் சந்திப்பு, ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மற்றும் இந்தியப் பிரதமருடனான சந்திப்பை விரைவுபடுத்துவது பற்றியதாகவே இருந்தது என்று கருதப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், ஜப்பானில் இந்தியப் பிரதமருடன் சற்று நேரம் அளவளாவியது தவிர, வேறு நேரடிச் சந்திப்புகள், பேச்சுக்கள் இதுவரை இடம்பெறவில்லை.

இந்தியா இந்தச் சந்திப்பை முடிந்தவரைக்கும் இடித்தடிக்கிறது. தள்ளிப்போட்டு வருகிறது.

இந்தியா இவ்வாறு விலகிச் செல்வதற்கு, தற்போதைய அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையீனம் மற்றும் வெறுப்புணர்வு போன்றனவே காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதனால் இலங்கையைத் தன் காலடிக்குள் கொண்டு வருவதற்காக இந்தியா சற்று விலகியிருக்க முடிவு செய்திருக்கலாம்.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களிலும், இந்தியாவே இலங்கைக்கு அதிகளவில் இருதரப்பு கடன்களை வழங்கியிருக்கிறது.

இந்த ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்த 1073.4 மில்லியன் டொலர்கள் இருதரப்புக் கடன்களில், இந்தியா வழங்கியது, 855.5 மில்லியன் டொலர்கள்.

சீனாவிடம் இருந்து 67.8 மில்லியன் டொலர்கள் இருதரப்புக் கடன் மாத்திரமே இந்த ஆண்டில் இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு போதுமான உதவிகளை வழங்கிய போதும், இந்தியாவின் தேவைகளையோ, அதன் பாதுகாப்பு பற்றிய கரிகனைகளையோ இலங்கை கவனத்தில் கொள்ளவில்லை என்பது தான் புதுடில்லியின் முக்கியமான கவலை.

சீனாவின் ‘யுவான் வாங் -5’ உளவுக் கப்பலை அம்பாந்தோட்டைக்கு அனுமதித்தமை, சீனப் போர்க்கப்பல்களுக்கு ஆழ்கடலில் வைத்து எரிபொருள் நிரப்புவது போன்ற விடயங்களில் இந்தியா தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, இந்தியாவின் பிராந்திய தலைமைத்துவ வகிபாகத்தை இலங்கை கவனத்தில் கொள்ள மறுப்பதும், இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இந்தியா வழமைபோலவே வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்ட போதும், அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு, 13 ஆவது திருத்த அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல் போன்றன குறித்து முன்னரை விட இறுக்கமான முறையில் வலியுறுத்தியிருந்தது.

பிராந்தியத்தில் பதற்றங்கள், குழப்பங்கள், நீடிக்கின்ற போது சில நாடுகள் அதனைச் சாதகமாக்கிக் கொள்வதுண்டு.  இலங்கையில் அவ்வாறான நிலை 1980களில் உருவாகிய போது, இந்தியா அதனை சாதகமாக்கிக் கொண்டு தலையீடு செய்தது.

இப்போது இந்தியா இத்தகைய குழப்பங்கள், நீடிப்பதை விரும்பவில்லை. முடிந்தளவுக்கு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, நிலையான அமைதி உருவாக்கப்படுவதையே புதுடில்லி விரும்புகிறது.

காரணம், இந்த குழப்பங்கள், விவகாரங்களை காரணமாக வைத்து புறச்சக்திகளின் தலையீடு இலங்கையில் அதிகரிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி விடலாம் என்று இந்தியா கருதுவதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதனால் இந்தியா, இலங்கையில் உள்ள பிரச்சினைகளை சுமுகமான முறையில் விரைவாகத் தீர்க்கப்படுவதை எதிர்பார்க்கிறது.

அதற்கு இலங்கை சாதகமான முறையில் செயற்படவோ பதிலளிக்கவோ இல்லாத நிலையில் - இந்தியா இராஜதந்திர கடும்போக்கை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கின்ற ஒரு முயற்சியாகவே அஜித் டோவலின் இந்தப் பயணம் இருக்கலாம் என்றும் சிலர் நம்புகின்றனர்.

அஜித் டோவல் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாவதற்கு இரண்டு சில நாட்களுக்கு முன்னதாகவே, இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான பாதுகாப்பு உயர் அதிகாரிகள் குழுவொன்று பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தது.

கராச்சியில் நடந்த Defense Expo IDEAS-22 கண்காட்சியில் பங்கேற்பதற்காக, கடந்த 16, 17ஆம் திகதிகளில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது இலங்கை குழு.

இந்தக் குழுவின் பயணத்துக்கான முழு ஒழுங்குகளையும் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  மேஜர் ஜெனரல் உமர் பருக் புரூகி மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பயணத்தின் போது, பாகிஸ்தான் – இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்புக் கலந்துரையாடலின் மூன்றாவது கட்ட பேச்சு இடம்பெற்றது.

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் ஹமூட் உஸ்சமான் கானுடன் ஜெனரல் கமல் குணரத்ன நடத்திய பேச்சுக்களில், 

“அனைத்து பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளிலும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து ஆதரவளிப்பது, பாதுகாப்பு, இராணுவப் பயிற்சி, கூட்டுப் பயிற்சி, உயர்மட்டப் பயணங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு தொடரும்” என்று இணக்கப்பாடு காணப்பட்டது.

இந்தப் பயணம் மற்றும் சந்திப்புகள், இணக்கப்பாடுகள் குறித்த எந்த தகவலையும், இன்னமும் இலங்கை அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ வெளிப்படுத்தவில்லை.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகமும், பாகிஸ்தான் ஊடகங்களும் தான் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டன.

இவ்வாறான இரகசியப் பாதுகாப்பு உறவுகள், ஒத்துழைப்புகளை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை வைத்துக் கொள்வதை, இந்தியா விரும்புவதில்லை.

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் செயற்பாடுகள் இந்தியா எப்போதும் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், அஜித் டோவலின் இலங்கைக்கான இரகசியப் பயணத்தின் உண்மையான நோக்கம் இத்தருணம் வரை வெளிவரவில்லை.

இந்த நிலையில் டோவல் இலங்கைக்கு வரவில்லை, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக சமந்த் குமார் கோயல் தான் கொழும்புக்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்து விட்டுப் போயிருக்கிறார் என்ற மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.

இதுவும் கூட உறுதிப்படுத்தப்படாத தகவல் தான்.

2015 ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்தி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க காரணமாக இருந்தவர் என்று இலங்கை அரசாங்கத்தினால் குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கப்பட்ட ‘றோ’ அதிகாரி இளங்கோவும், கோயலும்  போட்டியில் இருந்த போது, 2019இல் ‘றோ’வின் தலைவராக நியமிக்கப்பட்டவர், தான் சமந்த் குமார் கோயல்.

அவர், கடந்த ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் நேபாளத்துக்கு மேற்கொண்டிருந்த இரகசியப் பயணம் சர்ச்சைக்குள்ளாகியது.

நேபாளத்தில் பொதுத்தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு மாதம் முன்னதாக, அந்தப் பயணம் இடம்பெற்றது. நேபாள வெளியுறவு அமைச்சுக்கு கூட தெரியாமல் அவர், பிரதமர் சர்மா ஒலியைச் சந்தித்து பேசியிருந்தார்.

அந்த தகவல்கள் வெளியான பின்னர், நேபாள பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘றோ’ தலைவர் கோயல், நேபாளம் - இந்தியா இடையேயான நட்புறவை நிலைத்திருக்க செய்யவும், இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவும், மேலும் இருதரப்பு ஒத்துழைப்பிற்கும் உறுதியளித்தார் என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நடந்த தேர்தலில், இந்தப் பத்தி எழுதப்படும் போது 40 சதவீத வாக்குகள் மட்டும் எண்ணப்பட்ட நிலையில், பெரும்பான்மையைப் பெறுவதற்கு பிரதமர் சர்மா ஒலிக்கு இன்னும், 44 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலை காணப்படுகிறது.

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் அண்மையில் சீராக இல்லாத நிலையில் தான் கோயல் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையுடனும் தற்போது சீரான உறவுகள் இல்லாத நிலையில், கோயல் அவ்வாறானதொரு பயணத்தை கொழும்புக்கு மேற்கொண்டிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன.

எவ்வாறாயினும், இந்தியாவோ, இலங்கையோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத வரையில், இத்தகைய ஊகங்களும், வதந்திகளும் தான் உலாவரும்.

வந்தது யாராக இருந்தாலும், இந்தியா இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு எதையோ ஒன்றை கூற முன்வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56