சரிவருமா பொறிமுறை ?

By Digital Desk 2

27 Nov, 2022 | 10:07 AM
image

(ஹரிகரன்)

 “இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கை, வெளிநாட்டுப் போர்க் கலன்களின் வருகைகளை முற்றாக தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது” 

‘ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்’ என்ற நிலையில் இப்போது இலங்கை இருக்கிறது. இந்தியாவும், சீனாவும் தான் இலங்கைக்கு முக்கியமான நெருக்கடியைக் கொடுக்கும் தரப்புகள். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் இருந்தே இலங்கை அணிசேரா கொள்கையில் ஈடுபாடு காட்டி வந்தது. ஆனாலும் அவ்வப்போது சில விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் எடுத்த முடிவுகள், சர்வதேச அளவில் சிக்கல்களை ஏற்படுத்தியது.

1971இல் இந்திய- பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, கிழக்கு பாகிஸ்தானுக்கு (பங்களாதேஷ்) செல்லும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் வசதியை வழங்கியிருந்தது இலங்கை.

இலங்கை மீது இந்தியாவுக்கு பெரியளவில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்திய முதல் நிகழ்வு அது. கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர நாடாக விடுவிப்பதற்கு, இந்தியா போரிட்டுக் கொண்டிருந்த போது, பாகிஸ்தான் படைகளுக்கு இலங்கையைப் பயன்படுத்த இடமளித்தமை பாரதூரமான விடயமாக காணப்பட்டது.

ஆனாலும் இந்தியா அயல் நாடு என்ற வகையில் இலங்கையை அரவணைத்துச் செல்லும் நிலைப்பாட்டை எடுத்தது. வடக்கே சீனா, மேற்கே பாகிஸ்தான், என எதிரி நாடுகளைக் கொண்டிருக்கும் நிலையில், தெற்கிலேயும் இலங்கையுடன் பகைமையை வளர்ப்பதை இந்தியா புத்திசாலித்தனமாக கருதவில்லை.

இன்று வரைக்கும் இந்தியா அதே நிலைப்பாட்டில் தான் இருந்து கொண்டிருக்கிறது.  அது தான் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் அழுத்தங்கள், நெருக்கடிகள், ஆபத்துகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் காரணம்.

இலங்கையுடன் நெருங்கிய உறவைப் பெணுவதன் மூலம், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வது இந்தியாவின் திட்டம். விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி, இலங்கை தனது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டதை இந்தியா விரும்பவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம், அவர்களை வளைக்க முடியாது என்பன போன்ற காரணங்களால் மாத்திரம், விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இந்தியா துணை போகவில்லை. அவர்களைச் சாட்டாக வைத்துக் கொண்டு, தனக்குத் தெற்கே படைவலிமை பெற்ற நாடு  உருவாவதைத் தடுக்கவும் இந்தியா திட்டமிட்டது.

ஏனென்றால், இலங்கையை முற்றுமுழுதாக நம்பக் கூடிய நிலையில் இந்தியா இல்லை. எந்த நேரத்திலும் அது காலை வாரி விடும் என்ற பயம் இந்தியாவுக்கு இன்றைக்கும் இருக்கிறது. போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரும் இலங்கைப் படைகளுக்கு அதிகளவில் பயிற்சிகளை அளிக்கின்ற நாடு இந்தியா தான்.

ஆண்டுக்கு 1400 வரையான இலங்கைப் படையினர் இந்தியாவில் பயிற்சிகளைப் பெறுகின்றனர். இவர்களுக்கு இந்த வசதிகளை கொடுக்காது போனால், அவர்கள் பாகிஸ்தானிடம் அல்லது சீனாவிடம் பெற்றுக் கொள்வார்கள். அது, இந்தியாவுக்கு மறைமுகமானதொரு அச்சுறுத்தல் தான்.

அதைவிட, இலங்கை விமானப்படையில் இருந்த பெரும்பாலான போர் விமானங்கள், கட்டையில் ஏற்றப்பட்ட போது, பாகிஸ்தானிடம் இருந்து, ஜே.எவ் -17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானித்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும் போது அந்த போர் விமான கொள்வனவு உடன்பாடு கையெழுத்திடுவதற்கு தயார் என்ற நிலையில் இந்தியா தலையீடு செய்து அதனைத் தடுத்து நிறுத்தியது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், போர் இல்லாத போது, எதிரி நாடுகளைக் கொண்டிராத போது- இலங்கைக்கு எதற்கு இத்தகைய சக்திவாய்ந்த போர் விமானங்கள், அச்சுறுத்தல் ஏற்பட்டால் அழையுங்கள் இந்தியா விரைந்து உதவும் என்று கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

அதற்குப் பின்னர், தேவையென்றால் இந்தியா தயாரிக்கும் தேஜஸ் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யலாம் என்றும், இந்தியத் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது. 

ஆனால் அதற்கு இலங்கை அரசு ஆளைவிட்டால் போதும் என்று ஒதுங்கிக் கொண்டது. இது நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகியும், இன்னமும், இலங்கை விமானப்படைக்குப் புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இடம்பெறவில்லை.

இந்தியாவை மீறி அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இலங்கை இருக்கிறது. திருகோணமலையில், சீன விமான நிறுவனம், விமானங்களைப் பழுது பார்க்கும் மையத்தை அமைக்க முயன்ற போதும் இந்தியா அதனைத் தடுத்து நிறுத்தியது.

கொழும்பில் சீன நீர்மூழ்கிகள் தரித்துச் சென்ற பின்னரும், கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து, சீனாவின் ‘யுவான் வாங்-5’ ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்துச் சென்ற பின்னரும், மீண்டும் இவை இலங்கைத் துறைமுகங்களில் அனுமதிக்க கூடாது என இந்தியா அழுத்தமாக அறிவித்திருக்கிறது.

தனது பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கலன்களை இலங்கை அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவுடன் இலங்கை நெருங்கிய உறவைப் பேணுகிறது.  இவ்வாறான நிலையில் இந்தியாவைக் காரணம் காட்டி, சீனக் கப்பல்களை இலங்கைத் துறைமுகங்களுக்கு வரக் கூடாது எனத் தடுப்பதை சீனா விரும்பவில்லை.

சீனாவுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய நட்புறவு இருக்கிறது. அதுமாத்திரமன்றி, பெரியளவில் கடன்கள், பொருளாதார உதவிகளையும் வழங்கியிருக்கிறது அந்த நாடு.

இவ்வாறான நிலையில், சீனாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. இந்தியாவையும் எதிர்க்க முடியாது என்ற நிலையில் இலங்கை அரசாங்கம் திரிசங்கு நிலையில் இருக்கிறது.

‘யுவான் வாங்-5’ என்ற சீன ஆய்வுக் கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்துச் சென்ற போது அது உளவுக்கப்பல் என்று இந்தியா கூறியது. ஆனால் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியது.

இதனால் ஏற்பட்ட இராஜதந்திரக் குழப்பங்கள் இன்று வரை தீராமல் உள்ளன. உதாரணத்துக்கு, கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று வரை புதுடில்லியில் கால் வைக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

பகிரங்கமான மோதல்கள் இல்லாவிட்டாலும், உள்ளுக்குள் புகைச்சல்கள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த புகைச்சலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இந்தியத் தரப்பு அழுத்தமான போக்கில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்தநிலையில் தான் அவசர அவசரமாக அரசாங்கம், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள், விமானங்கள், இலங்கைத் துறைமுகங்கள், விமான நிலையங்களை அணுகுவதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறை ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில், அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் மேற்பார்வையில், சட்டமா அதிபர் திணைக்களமும், முப்படை உயர் அதிகாரிகளும் இணைந்து இந்த செயற்பாட்டு நடைமுறையை உருவாக்கியிருப்பதாகவும் விரைவில் அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது என்ன செயல்முறை என்பதை அரசாங்கம் இன்னமும் வெளிப்படுத்தவில்லை. இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம்மிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கை, வெளிநாட்டுப் போர்க் கலன்களின் வருகைகளை முற்றாக தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

அதேவேளை அணிசேராக் கொள்கையையும் விட்டுக் கொடுக்க முடியாது. அதேநேரத்தில் இந்தியாவினதோ சீனாவினதோ பகைமையையும் சம்பாதிக்க முடியாது.

இவற்றுக்கெல்லாம் தீர்வு வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை உருவாக்கிக் கொள்வதில் அரசாங்கம் வெற்றி பெற்றால் அது நிச்சயம் ஒரு முக்கியமான அடைவாகத் தான் இருக்கும்.

அந்தப் பொறிமுறையை இந்தியாவோ, சீனாவோ, ஏற்றுக் கொள்ளாது போனால் மீண்டும் சர்ச்சைகள் உருவாவது தவிர்க்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொருளாதார நெருக்கடியால் சவால்களுக்குட்படுத்தப்படும் மலையக மாணவர்களின்...

2023-02-07 15:27:56
news-image

இலங்கையை முன்னிலைப்படுத்தி முரண்படும் சீனா –...

2023-02-07 12:18:17
news-image

துருக்கி பூகம்பம்- அலறல்கள்- அந்த நிமிடங்கள்...

2023-02-07 07:37:30
news-image

தீர்வு குறித்த ரணிலின் நகர்வை உன்னிப்பாக...

2023-02-06 15:49:00
news-image

எங்கள் குடும்பத்தின் இதயத்தையும் ஆன்மாவையும் இழந்துவிட்டோம்...

2023-02-06 15:23:56
news-image

பாடம் கற்குமா தமிழ்க் கட்சிகள்?

2023-02-03 13:35:17
news-image

அதிகரிக்கும் அழுத்தங்கள்

2023-02-03 13:06:01
news-image

ஏமாற்றும் பொறுப்புக்கூறல்

2023-02-03 12:56:39
news-image

சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

2023-02-03 12:48:50
news-image

பிரதமர் ஜெசிந்தாவின் இராஜினாமா ஜனநாயக மாண்பின்...

2023-02-03 12:45:34
news-image

ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின்...

2023-02-03 12:34:21
news-image

சுதந்திரம்

2023-02-03 12:16:56