ரொபட் அன்டனி 

மாகாண சபை­களை கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு  வழங்­கப்­ப­டாது   

பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை  வழங்கி ஒத்­தி­சைவு பட்­டி­யலை  நீக்­க­வேண்டும்

பிர­பா­க­ர­னுக்கு அஞ்­சலி  செலுத்­து­வதில் தவ­றில்லை  

மாகாண சபை­களை கலைக்­கின்ற அதி­கா­ரத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­திக்கு வழங்க மாட்டோம். மேலும் ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­வ­துடன் கலைக்கும் அதி­கா­ரத்­தையும் திருத்­துவோம். இந்­தி­யாவைப் போன்று நினைத்­த­வுடன் ஜனா­தி­பதி மாநி­லத்தை கலைக்கும் அதி­காரம் இருக்­காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் செய்­யலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.   

வடக்கு மக்கள் தங்கள் வீரர்­களை நினைவுகூர­வேண்­டு­மானால் ஏனைய இனங்­களை காயப்­ப­டுத்­தாமல் செய்­யலாம். பிர­பா­க­ரனை யாரா­வது நினை­வு­கூ­ர­வேண்­டு­மானால் பிர­பா­கரன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு அநா­தை­யா­கி­ய­வர்கள் காயப்­ப­டாத வகையில் நினை­வு­கூ­ரப்­ப­ட­வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

வீரகேசரி இணையதளத்திற்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே டிலான் பெரேரா இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு

Q:அர­சியல் சூழலை நீங்­களே பர ப­ரப் பாக்­கி­வி­டு­கின்­றீர்கள் போன்று தெரி­கின் றதே? அப்­படி என்­னதான் செய்­து­கொண்­டி­ருக் கின்­றீர்கள்?

தற்­போது கூட பிர­தமர் தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பிர­தான வழி நடத்தல் குழுவின் அமர்வில் கலந்­து­கொண்­டு­விட்டு வரு­கின்றேன். இந்­நாட்­களில் அர­சியல் நிகழ்ச்சி நிரலில் முத­லா­வது விட­ய­மாக அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் விட­யத்தில் அனைத்து கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து எவ்­வாறு செயற்­பட முடியும் என ஆராய்­கின்றோம். அதற்கு மேல­தி­க­மாக மத்­திய வங்கி விவ­காரம் குறித்தும் ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம். இவ்­வாறு செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.

Q:உங்க­ளிடம் இந்தக் கேள்­வியை கேட்­பது பொருத்­த­மாக இருக்கும். அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றுமா?

அடுத்த ஜனா­தி­பதித் தேர்தல் நிச்­ச­ய­மாக நடை­பெறும். அதற்கு மூன்று கார­ணங்கள் உள்­ளன. முத­லா­வ­தாக ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­க­வேண்டும் எனின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­ல­வேண்டும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சென்றால் ஜனா­தி­பதி முறை­மையை மாற்ற விரும்­பு­கின்­ற­வர்­களும் வேறு விட­யங்­க­ளுக்கே வாக்­க­ளிப்பர். இதற்கு உலக உதா­ர­ணங்­களை நாங்கள் பார்க்க முடியும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சென்றால் நிச்­சயம் விடயம் குழம்­பி­விடும்.

இரண்­டா­வ­தாக தற்­போ­தைய ஜனா­தி­பதி வெற்­றி­பெ­றும்­போது நான் மறு­பக்­கத்தில் இருந்தேன். ஆனால் அவரின் தேர்தல் வாக்­கு­று­தியில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாத வகையில் ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் செய்­வ­தா­கவே கூறப்­பட்­டி­ருந்­தது. அது தற்­போது நடை­பெற்­றுள்­ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் மட்டும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை செய்வோம்.

மூன்­றா­வது விட­ய­மாக கடந்த ஜனா­தி­பதித்தேர்­தலில் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆணை வழங்­கினர். ஆனால் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தாக கூறிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கு மக்கள் முழு­மை­யாக வாக்­க­ளிக்­க­வில்லை. அக்­கட்­சிக்கு 113 ஆச­னங்கள் கிடைக்­க­வில்லை. அதனால் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­ற­ம­டைய முடி­யாது. எனவே அடுத்த ஜனா­தி­பதித்தேர்தல் நடை­பெறும்.

Q: அப்­ப­டி­யாயின் 2020 இல் சுதந் திரக் கட்­சியின் வேட்­பாளர் யார்?

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் எமது கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் எமது கட்­சியின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே இடம்­பெ­ற­வேண்டும்.

Q: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்டும் போட்­டி­யிட மாட்டேன் என்று குறிப்­பிட் டுள்­ளாரே?

ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­யுள்ளார். ஆனால் அவர் சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் நாங்கள் கூறு­வதைக் கேட்­க­வேண்டும். அவர் கட்­சியின் தலை­வ­ராக இருந்­து­கொண்டு நாங்கள் கூறு­வதை கேட்­காமல் இருக்க முடி­யாது. தனது தனி­வி­ருப்­பத்­துக்கு செயற்­பட முடி­யாது. அவர் போட்­டி­யி­ட­மாட்டேன் என திட­மாக கூறினால் மற்­று­மொரு வேட்­பாளர் குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யேற்­படும்.

Q: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்க கடும் முயற் சியை மேற்­கொள்­கின்­றீர்­களா?

நிச்­ச­ய­மாக கடும் முயற்­சியில் இருக்­கின்றோம். அவர் கட்­சியின் தலை­வ­ராக வந்த பிறகு தன்­னு­டைய சொந்த விருப்­பங்­க­ளுக்­கேற்ப செயற்­பட முடி­யாது. கட்சி கூறு­வதை செய்ய வேண்டும். கட்­சியின் மத்­தி­யக்­குழு கூறு­வதை அவர் கேட்­டாக வேண்டும்.

Q: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி சேன முடி­யாது என்று திட­மாக கூறி­விட்டால் வேறு ஒரு­வரை தேட வேண்டும் என நீங்கள் கூறி­னீர்கள். அவ்­வா­றெனின் முன்னாள் பாது காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை சு.க.வின் வேட்­பா­ள­ராக கொண்டு வரும் முயற் சி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­வது உண்­மையா?

சுதந்­திரக் கட்­சியின் ஒரு­சிலர் மற்றும் விமல் வீர­வன்ச, கம்­பன்­பில போன்றோர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அவ்­வாறு கொண்டு வர முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாங்கள் அதனை கடு­மை­யாக எதிர்க்­கிறோம். சுதந்­திரக் கட்சி அதனை கடு­மை­யாக எதிர்க்­கின்­றது. கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கினால் அவரால் ஒரு நாளும் வெற்றி பெற முடி­யாது என சுதந்­திரக் கட்­சிக்கு நன்­றாக தெரியும். அவரால் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்­கு­களை பெற முடி­யாது. தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்­கு­களை பெற முடி­யாத வேட்­பாளர் தோல்­வி­ய­டைவார். கோத்­த­பாய தேர்­தலில் போட்­டி­யிட்டு பாரா­ளு­மன்­றத்தில் சேவை­யாற்ற முடியும். சிங்­கள கத்­தோ­லிக்க மக்­களும் அவ­ருக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள். எனவே தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பெற முடியும் ஒரு­வ­ரையே நாம் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும். மஹிந்த ராஜ­ப­க் ஷ­வி­னா­லேயே தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற முடி­யா­து­விடின் கோத்­த­பா­ய­வினால் முடி­யுமா ?

Q: தற்­போது புதி­தாக உரு­வாக்­கப் பட்­டுள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் சார்பில் கோத்­த­பாய போட்­டி­யிட்டால்?

வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பகு­தி­க­ளிலும் இன­வாதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வடக்கில் இன­வா­தத்தை பரப்­பி­ய­வர்­களும் தெற்கில் இன­வா­தத்தை பரப்­பி­ய­வர்­களும் தோல்­வி­ய­டைந்­தனர். இன­வாதம் மற்றும் மத வாதத்தை பரப்பும் தலை­வர்­க­ளினால் வெற்றி பெற முடி­யாது. அதனால் இன­வா­தி­க­ளுக்குப் பயந்து சில நல்ல திட்­டங்­களை நாங்கள் பிற்­போட்டு விடக் கூடாது. ஜனா­தி­பதி தேர்­தலில் மும்­முனைப் போட்டி இடம்­பெற்­றாலும் தமிழ், முஸ்லிம் வாக்­கு­களை பெறும் வேட்­பா­ளரே வெற்றி பெறுவார்.

Q: ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க போட்­டி­யிட்டால் எவ்­வாறு சமா­ளிப்­பீர்கள்?

மஹிந்த ராஜ­பக் ஷ போன்ற ஒரு­வரை தோற்­க­டித்த மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரை தோற்­க­டிப்­பது ஒரு விடயம் அல்ல.

Q: ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி கவலை­யு­ட­னேயே தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

நாங்கள் அர­சாங்­கத்­திற்குள் கவ­லை­யுடன் இருக்­கின்றோம் என்று கூற முடி­யாது. இது சுதந்­திரக் கட்­சியின் அர­சாங்கம் அல்ல. இது தேசிய அர­சாங்கம். தேசிய அர­சாங்­கத்தில் நாம் தனித்து அர­சாங்கம் அமைப்­பது போல் செயற்­பட முடி­யாது. ஆனால் அதி­காரப் பகிர்­வுக்கும் தேர்தல் முறை மாற்­றத்­திற்கும் தற்­போது இறுதி சந்­தர்ப்பம் கிடத்­துள்­ளது. அந்த இறுதி பஸ்ஸில் ஏறா­விடின் பய­ணத்தை தொடர முடி­யாது.

Q: இந்த அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க சுதந்­திரக் கட்­சிக்கு தார்­மீக உரிமை இருக்­கின்­றதா?

சுதந்­திரக் கட்­சிக்­குத்­தான் அதி­க­மான தார்­மீக உரிமை உள்­ளது. கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க ஆணை வழங்­கு­மாறு மக்­க­ளிடம் கேட்டோம். அந்த ஆணை கிடைக்­க­வில்லை. அதே­நேரம் மக்கள் ஐ.தே.க. தனித்து ஆட்­சி­ய­மைக்­கவும் ஆணை வழங்­க­வில்லை. அதன்­படி மக்­களின் கோரிக்­கையின் பிர­காரம் ஐ.தே.க. தனித்து ஆட்­சி­ய­மைப்­பதை நாங்கள் தடுத்து நிறுத்­தி­யுள்ளோம். நாம் அர­சாங்­க­த்தில் அம­ரா­விடின் ஐ.தே.க. கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்கும். அப்­ப­டி­யாயின் மக்­களின் ஆணையை நிறை­வேற்ற முடி­யாது போய் இருக்கும்.

Q: அதற்­கா­கத்தான் இணைந்து கொண்டீர்­களா?

அதுவும் ஒரு காரணம். இரண்­டா­வ­தாக நீண்­ட­கா­ல­மாக தீர்க்­க­மு­டி­யா­துள்ள பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

Q:ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் பனிப்போர் நில­வு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே?

அதனை ஏன் பனிப்போர் என்று கூறு­கின்­றனர் என்று எனக்குப் புரி­ய­வில்லை.

Q: நேர­டி­யான போர் என்று கூற விழைகி­றீர்­களா ?

இல்லை. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரே கட்­சியில் இருந்­த­போது இந்த நாட்டில் பிரச்­சினை இருக்­க­வில்­லையா? பாரிய பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன. உதா­ர­ண­மாக கடந்த அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரே கட்­சியில் இருந்­தனர். ஆனால் அந்த அர­சாங்­கத்தில் எவ்­வ­ளவு பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன. விமல்­வீ­ர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க போன்­ற­வர்கள் அந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே­றி­யி­ருந்­தனர். ஒரே கட்­சியில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இருந்­த­போதே அவ்­வ­ளவு பிரச்­சினை என்றால் இரண்டு கட்­சி­களில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இருக்­கும்­போது எவ்­வ­ளவு சிக்கல் இருக்கும் என்­பதை புரிந்து கொள்­ளுங்கள். இரண்டு கட்­சிகள் ஆட்­சியில் இருக்­கும்­போது பிரச்­சி­னைகள் வரும். நாம் அதனை சமா­ளித்துப் போகின்றோம். உதா­ர­ண­மாக கடந்த வருடம் வரவு–செலவுத் திட்டம் மோச­மாக இருந்­தது. இம்­முறை நன்­றாக இருக்­கின்­றது.

Q: மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­தர் க­ளினால் புதிய கட்சி ஒன்று ஆரம்­பிக் கப்­பட்டுள்­ளதே ?

புதிய கட்சி குறித்து நான் அதிகம் பேச­வில்லை. அது ஒரு கட்­சியே அல்ல. கடந்த அர­சாங்­கத்தில் அந்த அர­சாங்­கத்தை அபகீர்த்­திக்கு உட்­ப­டுத்­தி­ய­வர்­களும் அந்த அர­சாங்கம் கவிழ்க்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்­களும் இணைந்து உரு­வாக்கிக் கொண்­டுள்ள ஒரு அம்­ப­லமே இது­வாகும். சுதந்­திரக் கட்­சியின் பத்து வீத­மா­ன­வர்­களே இந்த புதிய கட்­சியை கோரு­கின்­றனர். மறு­புறம் இன­வா­தத்தை தூண்­டு­கின்­ற­வர்­களே இதனை ஆத­ரிக்­கின்­றனர்.

Q: புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபு விவகாரம் எவ்­வாறு உள்­ளது?

பிர­தமர் என்ற ரீதியில் அவரின் ஒரு சில செயற்­பா­டுகள் எனக்குப் பிடிக்­க­வில்லை. ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிக்கும் விட­யத்தில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மிகவும் நேர்­மை­யா­கவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கிறார். அதனை கட்­டா­ய­மாக கூறி­யா­க­வேண்டும். அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து இந்த விட­யத்தை அவர் முன்­னெ­டுத்து வரு­கிறார். அந்த கௌர­வத்தை நாங்கள் அவ­ருக்கு கொடுக்க வேண்டும். அடுத்­த­தாக சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு சிறந்த பங்­க­ளிப்பை வழங்கி வரு­கி­றது. பாரிய அர்ப்­ப­ணிப்­பு­டனும் ஆர்­வத்­து­டனும் கூட்­ட­மைப்பு பங்­க­ளிப்பை வழங்­கு­கி­றது. விசே­ட­மாக சுமந்­திரன் எம்.பி. அர்­ப் ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கிறார். இம்­முறை அர­சி­ய­ல­மைப்பில் நாம் அதிக விட­யங்­களை அறு­வடை செய்­யலாம் என நான் நினைக்­கிறேன்.

Q:சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு செல் லக்­கூ­டாது என்­பதை திட­மாக ஏன் கூறுகின் றீர்கள்?

நிச்­ச­ய­மாக கூறு­கின்றேன். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு சென்றால் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யூ­டாக மட்டும் நிறை­வேற்றிக் கொள்ளக் கூடிய அதி­காரப் பகிர்வு கிடைக்­காமல் போய்­விடும்.

Q:நியா­ய­மான தீர்­வுத்­திட்டம் தமிழ் பேசும் மக்­க­ளுக்கு கிடைக்­குமா?

தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் அதி­காரப் பகிர்வே மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அதில் 13 ஆவது திருத்தச் சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒத்­தி­சைவு பட்­டி­யலும் நீக்­கப்­பட வேண்டும். இத­னூ­டாக தமிழ் மக்­க­ளுக்கு அதி­காரம் கிடைக்­கின்­றது. இதனை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யி­னூ­டாக செய்­யலாம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறையை எதிர்க்­கின்­றது என்­பது புரி­ய­வில்லை. காரணம் அந்த முறைமை இருந்தால் கூட்­ட­மைப்­பினர் தேர்தல் காலத்தில் தமது செல்­வாக்­கினை செலுத்­தலாம்.

Q: நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யினால் மாகாண சபையை கலைத்­து­விட முடியுமே?

இல்லை. இல்லை. அந்த அதி­கா­ரத்தை புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­திக்கு வழங்க மாட்டோம். ஒத்­தி­சைவு பட்­டி­யலை நீக்­கு­வ­துடன் நீங்கள் குறிப்­பிட்ட மேற்­கு­றித்த அதி­கா­ரத்­தையும் திருத்­துவோம். இந்­தி­யாவைப் போன்று நினைத்­த­வுடன் ஜனா­தி­பதி மாநி­லத்தை கலைக்கும் அதி­காரம் இருக்­காது. அதனை நாங்கள் வழங்க மாட்டோம். அவற்றை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் செய்­யலாம்.

Q: ஜனா­தி­பதி பத­வியில் இருப்­பவர் மாகாண சபை­களை கலைக்கும் அதி­கா­ரத்தை எளி­தாக கைவி­ட­மாட்டார். அதனை கைவி­டு­வது ஆபத்­தான விடயம் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டுவார் எனவும் கூறப்­ப­டு­கின்­றதே?

ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு போது­மான அதி­கா­ரத்தை வழங்­கா­விடின் அது மத்­திய அர­சாங்­கத்­திற்கு பாரிய ஆபத்­தாக அமைந்­து­வி­டுமே? எனவே அந்த அதி­கா­ரத்தை எடுத்து விட வேண்டும். அதா­வது இந்­தியா தனது மாநி­லங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ள அதி­கா­ரங்­க­ளையும் தாண்டி நாங்கள் அதி­கா­ரத்தை தமிழ் பேசும் மக்­க­ளுக்கு கொடுக்க வேண்டும். அத்­துடன் கல்வி, சுகா­தாரம் போன்ற விட­யங்­களை முழு­மை­யாக மாகாண சபை­க­ளுக்கே கொடுத்­து­விட வேண்டும். அதில் மத்­திய அர­சாங்கம் கைவைக்­கக்­கூ­டாது.

Q: கடல்­வளம்?

கடல் மத்­திய அர­சாங்­கத்தின் கீழேயே இருக்க வேண்டும். ஆனால் மீன்­பிடி விட­யங்­களை மாகா­ணங்­க­ளுக்கு கொடுக்க வேண்டும். தேசிய பாது­காப்பு விடயம் கார­ண­மாக கடல் மத்­திய அர­சாங்­கத்­திற்கு கீழேயே இருக்க வேண்டும். 

Q: நீங்கள் அடிக்­கடி வடக்கு முதல்­வரை விமர்­சிக்­கின்­றீர்­களே? 2013 ஆம் ஆண்டு நீங்கள் விக்­கி­னேஸ்­வ­ரனை வர­வேற்­றமை எமக்கு ஞாபகம் இருக்­கின்­றதே?  

விக்­கினேஸ்­வ­ர­னுக்கு தற்­போது என்ன நடந்­துள்­ளது? எமக்கு தெரிந்த நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வரன் அல்ல இவர். இவர் ஒரே தட­வை­யாக அடிப்­படைவாதி­யாக மாறி­விட்டார். நான் பார்த்த மத்­த­யஸ்த நிலைப்­பாடு கொண்ட விக்கி­னேஸ்­வ­ரனை இன்று என்னால் காண முடி­ய­வில்லை. சம்­பந்­த­னுக்குப் பின்னர் விக்கி­னேஸ்­வரன் கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக வருவார் என நான் கரு­தினேன். ஆனால் இன்­றைய நிலைமை பயங்­க­ர­மாக இருக்­கின்­றது. சம்­பந்தன் நீண்­ட­காலம் கூட்­ட­மைப்பின் தலை­வா­ராக இருக்க வேண்டும் என பிரார்த்­திக்­கின்றோம். சம்­பந்தன் இருக்­கும்­போது தான் தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான சிறந்த சந்­தர்ப்பம் கிடைக்கும் என நம்­பு­கின்றோம். 

விக்கி­னேஸ்­வரன் பாரிய அடிப்­ப­டை­வாத இன­வாதப் போக்கில் பய­ணிக்­கின்றார். அவர் இறு­தி­யாக விடுத்த கூற்று நல்­லது. ஆனால் இதற்கு முன்னர் அவர் தெரி­வித்த சில கூற்­றுக்கள் தெற்கின் இன­வா­தி­க­ளுக்கு தீனி­போ­டு­வ­தாக அமைந்­தன. என்னைப் பொறுத்­த­வரை விக்கி­னேஸ்­வரன் இன­வா­தி­யாக முடி­யாது. ஆனால் அவ­ருக்கு தற்­போது தலைவர் பத­விக்­கான கனவு வந்­து­விட்­டது போல் தெரி­கின்­றது. இன­வா­தத்­துக்கு தற்­போது இட­மில்லை என்­பது அவ­ருக்கு புரி­ய­வில்லை. தற்­போது சுமந்­திரன் இரண்டு இனங்­க­ளுக்கும் இடையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த பாரிய நட­வ­டிக்கை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார். ஆனால் அதனை வடக்கு முதல்வர் நன்­றாக செய்­தி­ருக்­கலாம். அவர் பதுளை மேல் நீதி­மன்­றத்தில் நீதி­ப­தி­யாக இருந்­த­போது எனக்குத் தெரியும்.

Q: விக்­கி­னேஸ்­வரன் நீதி­ப­தி­யாக இருந் த­போது நீங்கள் வழக்­க­றி­ஞ­ராக செயற்­பட்­டுள் ளீர்­களா?

ஆம். நான் சில தட­வைகள் வழக்­கா­டி­யுள்ளேன்.  

Q: அந்த வழக்­கு­க­ளுக்கு என்ன நடந்­தது?

அவை இணக்­கப்­பாட்­டுடன் முடி­வ­டைந்­தன.

Q: பஷில் ராஜ­ப­க்ஷ­வுடன் இந்­நாட்­களில் ஏன் சண்டை பிடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

அவ­ருடன் எனக்கு அர­சியல் பிரச்­சி­னையே காணப்­ப­டு­கின்­றது. அவர் வர­லாற்றில் பல சந்­தர்ப்­பங்­களில் எமது கட்­சிக்கு எதி­ராக செயற்­பட்­டுள்ளார். குற்­றச்­சாட்­டுக்­களில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டதும் அவ­ருக்கு வருத்தம் வந்­து­விடும். பிணையில் விடு­விக்­கப்­பட்­டதும் அவர் நாடு முழு­வதும் சென்று தேர்தல் பிர­சாரம் செய்வார். பஷில் ராஜ­பக் ஷ என்ன சத்தம் போட்­டாலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை உடைப்­பதே அவர்­களின் நோக்கம். ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து இதனை முன்­னெ­டுக்­கின்­றனர்.

Q:அந்த ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் நீங்கள் இணைந்து ஆட்­சி­ய­மைத்­துள்­ளீர்­களே ?

நாங்கள் ஒரு வேலைத்­திட்­டத்தின் அடிப்­ப­டையில் இணைந்து செயற்­ப­டு­கின்றோம். நாட்டின் தேசிய தேவைக்­காக இவ்­வாறு செயற்­ப­டு­கின்றோம்.

Q:ஜே.வி.பி. யினர் கார்த்­திகை தினத்தை அனுஷ்­டிக்­கின்­றனர். ஆனால் வடக்கில் இறந்­த­வர்­களை நினை­வு­கூரும் போது விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே?

அதில் எந்தத் தவறும் இல்லை. உதய கம்­மன்­பி­லவும் அதனை விமர்­சித்­தி­ருந்தார். ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனது வீரன் உங்கள் வீரன் அல்ல. உங்கள் வீரரை நீங்கள் நிளைவு கூரலாம். ஆனால் ஏனைய இனங்­களின் மனதை புண்­ப­டுத்­தாமல் நினைவுகூர­வேண்டும். வடக்கு மக்கள் தங்கள் வீரர்­களை நினைவுகூர­வேண்­டு­மானால் ஏனைய இனங்­களை காயப்­ப­டுத்­தாமல் செய்­யலாம். பிர­பா­க­ரனை யாரா­வது நினை­வு­கூ­ர­வேண்­டு­மானால் பிர­பா­கரன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட அனா­தை­யா­கி­ய­வர்கள் காயப்­ப­டாத வகையில் நினை­வு­கூ­ரப்­ப­ட­வேண்டும்.

Q:விஜே­வீர அவ்­வா­றுதான் நினைவுகூரப்­ப­டு­கின்­றாரா?

அவ்­வாறு தான் நினைவுகூரப்­ப­டு­கின்றார்.

Q:இம்­முறை வடக்கில் நடை­பெற்ற நினை­வு­கூரல் பற்றி?

அதில் எந்தத் தவ­றையும் நான் காண­வில்லை. விளக்கு பற்ற வைப்­பதன் மூலம் என்ன தவறு நடக்கும்?

Q:அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஹெல உறு­ம­யவும் அதனை எதிர்த்­துள்­ளதே?

ஹெல உறு­மய அதற்கு எதிர்க்­கா­விடின் தான் அதி­சயம்.

Q:புலி­களை தோற்­க­டித்து 7 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. நீங்கள் எதிர்­பார்த்த பெறு­பேறு கிடைத்­ததா?

கடந்த ஏழு வரு­டங்­களில் முதல் மூன்று வரு­டங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக யுத்தம் செய்­யப்­ப­ட­வில்லை என்று காட்­டி­யி­ருக்­கலாம். அதனை செய்யவில்லை. அதனை கடந்த ஆட்சியாளர்கள் செய்யாமல் தமிழ் மக்களை காயமடைய செய்தனர். பின்னர் முஸ்லிம் மக்களையும் கோபப்படுத்திக்கொண்டனர். இறுதியில் முழு உலகத்தையும் பகைத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி வீட்டுக்கு சென்றார்.

Q:யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியடைவில்லையா?

யுத்தம் இருந்த காலத்தைவிட நான் கவலையடைந்த காலமாக யுத்தத்துக்குப் பின்னரான ஐந்து வருடங்களை குறிப்பிடலாம். எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் நிலைமை மாறியது. இன்று எமது ஜனாதிபதி தமிழ் மக்களின் இதயங்களை வென்றுள்ளார். ஒரு சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்காக அரசாங்கம் செய்வதாகவே உணர்கின்றனர். எனவே இறுதி இரண்டு வருடங்களும் சிறந்ததாக அமைந்துள்ளன.

Q:ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் நீங்கள் மஹிந்தவை எதிர்க்கவேயில்லையே?

நான் எனது கட்சியின் தலைவரை ஏச மாட்டேன். அது எனது கொள்கையாகும். சில இடங்களில் மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்தேன். அதிகாரங்களை பகிரும் அலகுகள் மாவட்டமாக அமையவேண்டும் என்று கடந்த அரசாங்கம் கூறியபோது நான் அதனை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எனது கட்சித் தலைவருடன் இருப்பேன். அது எனது கொள்கையாகும்.

Q: 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேன வெளியே வந்தபோது நீங்கள் உங்கள் மனச்சாட்சியின் படி யாரை ஆதரித்தீர்கள்?

ஸ்ரீலங்கா கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன வெளியே வந்தபோது கவலையடைந்தேன். அவர் என்னை தன்னுடன் வருமாறு அழைக்கவில்லை. அழைத்திருந்தாலும் போயிருக்கமாட்டேன். அப்போது மஹிந்த வெற்றிபெறவேண்டும் என்று கருதினேன். நாங்கள் கூறியதை கேட்காததால் அவர் தோல்வியடைந்தார்.

Q: நீங்கள் ஏன் தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளக பொறிமுறையின் தலைமை நீதிபதியாக செயற்பட வேண்டும் என்று கூறுகின்றீர்கள்?

அதனூடாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் நம்பிக்கை வரும். அவர் அதற்கு தகுதியானவர். நாட்டில் நாங்கள் அனைவரும் இலங்கையர் என்று உணர வழி வகுக்கும்.