பொதுபலசேனா அமைப்பினர் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்டமொன்றினை தடுக்கும் முகமாக பொலிஸார் ரிஜிதென்ன  பகுதியில்  அமைத்துள்ள தடுப்பு காவலை அகற்றுமாறு சர்ச்சைக்குரிய பிக்கு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரிடம் முரண்பட்டு வருகின்றமையால் குறித்த பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளது.

ஏற்பட்டுள்ள இப் பதற்றநிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கலகம் அடக்கும் பொலிஸாரும் குறித்த பிரதேசத்துக்கு வருகைத்தந்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு சென்றுள்ள ஞானசார தேரர் உட்பட்ட பொதுபலசேனா அமைப்பினர் மங்களராமய ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் கரடியனாறு பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பொலிஸார்  பொதுபலசேனா அமைப்பினரை குறித்த பகுதிக்குள் நுழைய விடாமல் தடுப்புக் காவலொன்றை அமைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த பகுதிக்குள் பொதுபலசேனா அமைப்பினரை  உள்நுழைய விடுமாறு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமையால் குறித்த பகுதிக்குள் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.