195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக உத்தரபிரதேச பொலிஸார் தெரிவிப்பு

Published By: Sethu

24 Nov, 2022 | 06:27 PM
image

195 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில பொலிஸார் கூறியுள்ளனர். 

கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா இவ்வாறு எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சாட்சியமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கஞ்சா தொடர்பான வழக்கின்போது நீதிபதி சஞ்சய் சௌத்திரி உத்தரவிட்டார்.

அப்போது பதிலளித்த பொலிஸார் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை எலிகள் 'அழித்துவிட்டதாக' கூறினர்.

எலிகள் சிறிய பிராணிகள், பொலிஸாருக்கு அவை பயப்படுவதில்லை. அவற்றிடமிருந்து கஞ்சாவை பாதுகாப்பது கடினம் எனவும் பொலிஸார் கூறினர். 

உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கஞ்சா மழையினால் அழிந்ததாக கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவில் பொலிஸ் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த அரைத் தொன் கஞ்சா காணாமல் போனமைக்கு எலிகளே காரணம் எனக் கூறிய பொலிஸ் அதிகாரிகள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக அப்போது நிபுணர்கள் கூறுகையில், கஞ்சாவை எலிகள் உணவாக உட்கொள்ள வாய்ப்பில்லை எனவும், பெரும் எண்ணிக்கையான எலிகள் அதிக கஞ்சாவை உட்கொண்டிருந்தால் களஞ்சியசாலைகளுக்கு அருகில் அவை உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருக்கும் எனவும் கூறியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்