உயிர்த்த ஞாயிறு தின சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களா ? : ' ரிமோர்ட் ' ஊடாகவும் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Published By: Digital Desk 2

24 Nov, 2022 | 09:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஆம் ஆண்டு ஏபரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என ஏற்றுக்கொள்வதற்கு குறித்த தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  பிரதிவாதிகள்  மறுப்பு வெளியிட்டனர். 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம்  தாக்கல் செய்துள்ள வழக்கில், சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த ஏற்புகளில், ' தற்கொலை குண்டு தாரிகள் ' என குறித்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் அடையாளடுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, நெளபர் மெளலவி உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்காக ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இது தொடர்பில் முதலில்  ஆட்சேபனம் வெளியிட்டார்.

இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையில் வியாழக்கிழமை ( 24) வழக்கு விசாரணைகள்  இடம்பெற்ற போதே அவர் இதனை முன் வைத்தார்.

முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடுநரால் 239 பக்கங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான முன்மொழியப்பட்ட ஏற்புகள் இருவட்டொன்றூடாக (CD) பிரதிவாதிகள் தரப்புக்கு கையளிக்கப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் நேற்று  கலந்துரையாடப்பட்டது. இதன்போது வழக்குத் தொடுநரால்  நூற்றுக்கணக்கான ஏற்புகள் முன் மொழியப்பட்ட போதும் அதில்  எதனையும் ஏற்றுக்கொள்ள பிரதிவாதி தரப்பினர் எவரும்  இணங்கவில்லை.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை குண்டுதாரிகளால் முன்னெடுக்கப்பட்டதாக  வழக்குத் தொடுநர் கையளித்த ஏற்புகளில் முன் மொழியப்பட்டிருந்தன.

எனினும் பிரதிவாதிகளுக்கு, குறித்த தாக்குதல்கள் தற்கொலை தாக்குதல்களா அல்லது வேறு வடிவங்களைக் கொண்டனவா என்பது தொடர்பில்  தெரியாது என,  அரச தரப்பால் பிரதான பிரதிவாதியாக குற்றம் சுமத்தப்படும்  நெளபர் மெளலவி சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் குறிப்பிட்டார். 

குறித்த குண்டுகள் தற்கொலை குண்டுதாரிகளால் வெடிக்கச் செய்யப்படாமல், தொலைவிலிருந்து இயக்கி வெடிக்கச் செய்யும் கருவி ( ரிமோர்ட் கொண்ட்ரோல்) ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சுட்டிக்காட்டினார். 

எனவே தற்கொலை குண்டுதாரிகளால் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டது என்பதை  வழக்குத் தொடுநர் நிரூபிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த ஏனைய பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளும் அந்த விடயத்துடன் ஒன்றிப் போகும் விதமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தினர்.

அத்துடன், வழக்குத் தொடுநருக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர,  குறித்த வசனங்கள் தொடர்பில் உடன்பாடுகள் இல்லாவிட்டால்,  அது தொடர்பில்  மீள் பரிசீலனை செய்ய தயார் எனவும், அதற்காக பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்றாக கலந்துரையாட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இந் நிலையில், இவ்விடயங்கள் தொடர்பில் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் எந்த நேரத்திலும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபரை சந்தித்து கலந்துரையாட முடியும் என நீதிபதிகள் திறந்த மன்றில் தெரிவித்தனர்.

இதனையடுத்து,  வழக்கின் குற்றப்பத்திரிகையை வாசித்தல் தொடர்பில் சட்ட மா அதிபரால் நீதிமன்றுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி 25 பிரதிவாதிகளுக்கு மன்றில் குற்றப்பத்திரிகைகள்  கையளிக்கப்பட்ட நிலையில் 23, 270 குற்றச்சாட்டுக்கள் அதில் அடங்கியிருந்தன. அவற்றை தனித்தனியாக வாசித்துக் காட்டுதல் என்பது நடைமுறை சாத்தியம் அற்றது என்பதால், அவற்றை வாசித்துக் காட்ட பொருத்தமான முறைமை ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டது.

அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தரவும் அவருடன் ஆஜரான குழுவில் உள்ளடங்கிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சஜித் பண்டாரவும் அது குறித்து திரை ஒன்றினை பயன்படுத்தி நீதிபதிகளுக்கு விளக்கமளித்தனர். அதன்படி சுமார் 250 குற்றச்சாட்டுக்களாக அவற்றை சுருக்கி வாசித்துக் காட்ட முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.  அது தொடர்பில் திருப்தியடைவதாக நீதிபதிகள் குழாமும் அறிவித்தது.

இந் நிலையில், வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் முன் வைத்த எந்த ஏற்புகளையும் பிரதிவாதிகள் ஏற்காத பின்னணியில், வழக்கை சாட்சி விசாரணைகளுக்கு எடுக்க தீர்மானித்த நீதிபதிகள், குற்றச்சாட்டுக்களை வாசித்துக் காட்டுதல் மற்றும் விசாரணைக்காக வழக்கினை எதிர்வரும் 2023 ஜனவரி 4,5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தனர்.

மேலும், கடந்த தவணையின் போது பிரதிவாதிகள் 25 பேர் சார்பிலும்  பிணைக் கோரி எழுத்து மூல சமர்ப்பணங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு ஆட்சேபனை தெரிவித்து சட்ட மா அதிபரும் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைத்துள்ள நிலையில்,   பிரதிவாதிகள் சார்பில் அதற்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. 

பிணை தொடர்பில் வாய்மொழி மூல சமர்ப்பணங்கள் எதனையும் எந்த தரப்பும் செய்வதில்லை என நேற்று மன்றுக்கு அறிவித்த நிலையில், எழுத்து மூல சமர்ப்பணங்களை மையப்படுத்தி நீதிமன்றின் தீர்மானத்தை அடுத்த தவணையின் போது அறிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

பாதுகாப்பு பலப்படுத்தல்:

கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  பொலிசாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுகதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாள்ர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனைச் செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும்

வியாழக்கிழமை (நவ. 24)நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின்,  அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில்  அவர்கள்  அழைத்து வரப்பட்டனர்.

இன்று (நவ. 24) மன்றில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் , ருஷ்தி ஹபீப் , சட்டத்தரணிகளான   ஜி.கே. கருனாசேகரவும்,  விஜித்தாநந்த மடவலகம, சுரங்க பெரேரா, ரிஸ்வான் உவைஸ் , அசார் முஸ்தபா, இம்தியாஸ் வஹாப்,  சச்சினி விக்ரமசிங்கவும்  உள்ளிட்டோர் ஆஜராகினர்.

சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சஜித் பண்டார உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர்  சார்பில் சட்டத்தரணி மனுஷிகா குரே உள்ளிட்ட சட்டத்தரனிகள் ஆஜராகினர்.

வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:

1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி 2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும்  மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை

3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்

4.  அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம்  சாதிக் அப்துல்லாஹ்

5.  அபூ பலா எனப்படும்  மொஹம்மட் இப்ராஹீம்  சாஹித்  அப்துல் ஹக்

6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்

7. அபூ மிசான் எனப்படும்  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்

8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்

9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி

10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி

11.  ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்

12.அபூ தவூத் எனப்படும்  மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்

13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்

14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்

15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்

16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்

17. யாசின் பாவா அப்துல் ரவூப்

18. ராசிக் ராசா ஹுசைன்

19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்

20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்

21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்

22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி

23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்

24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி

25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02