யுத்தத்தின் போது பாகிஸ்தானில் இருந்து ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மூலமே ஆயுதம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான விமான சேவையை தனியார் மயப்படுத்த வேண்டாம். விமான சேவையின் நடவடிக்கை எவருக்கும் தெரியாது. பஸ்ஸி – ரத்தி என்பவர்களே தீர்மானம் எடுக்கின்றனர். இது குறித்து அமைச்சர்கள் அமைச்சரவைக்கு கொண்டுவர வேண்டும் என ஐ.ம.சு.மு ஒன்றிணைந்த எதிரணி எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  வரவு– செலவு திட்டத்தின் வணிக கைத்தொழில், ஆரம்ப கைத்தொழில், அரச தொழில் முயற்சி அமைச்சுகளின் செலவினம்   குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

ஸ்ரீலங்கா எயார் லைன் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிஹின் லங்கா நிறுவனம் இறுதி தருவாயில் இலாபம் ஈட்டி வந்தது. அதன் சேவையையும் நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான தீர்மானங்கள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு தெரியாது. ஆனால் இது தொடர்பான தீர்மானங்களை பஸ்ஸி – ரத்தி என்போரே எடுக்கின்றனர்.   3 விமானங்கள் இலங்கைக்கு கிடைக்கும் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டமை ஊடாக 98 பில்லியன் நட்ட ஈடு செலுத்த வேண்டியுள்ளது.

நாம் தவறு செய்தால் கைது செய்யுங்கள். ஆனால் அரச உடைமைகளை விற்க வேண்டாம். இதனை வைத்து இலாபம் ஈட்டுங்கள்.  

ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் நிறுவனம் எமது உடைமை . இதனால் எமக்கு பெருமை. இறுதி யுத்தத்தின் போது பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் எயார் லைன்ஸ் மூலமே கொண்டு வரப்பட்டது.