கடந்த  2014 இறுதியில் அமைச்சரவை அனுமதியின்றி 1859 கோடி ரூபா பெறுமதியான 251,210 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறித்து  நிதி மோசடி பிரிவும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டுவருதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன் சபையில் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் மன்னார் மாந்தை உப்பளம் தனியார் மயப்படுத்தப்படமாட்டது என்பது பொறுப்புடன் கூறுவதாகவும் சபையில் அமைச்சர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில்  2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது.இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துன்நெத்தி தெரிவித்த விடயத்துக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

சுனில் ஹந்துன்னெத்தி  

திறைசேரி முறி மோசடியை ஒப்பான  பாரிய மோசடி வெளிநாட்டிலிருந்து அரிசி கொள்வனவு செய்வதில் பாரிய இடம் பெற்றுள்ளது உள்நாட்டு விவசாயிகள் தமது உற்பத்தியை விற்ற முடியாமல் வீதியில் இருக் கையில் பெருமளவு அரிசி வெ ளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2015 காலப்பகுதியில் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து 46,698 மெற்றிக் தொன் மட்டும் கொள்வனவு செய்யப்படுகையில் வெளிநாட்டிலிருந்து 2,75,693 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9734 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 5ஆயிரம் வீதம் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்வதற்கு தான் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

2014 ஒக்டோபர் 15 ஆம் திகதி திறைசேரி பிரதி செயலாளரினால் சதொசவுக்கு அனுப்பிய கடிதத்தில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் பொன்னி அரிசியும் 50 ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசியும் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. இந்திய ஏ.சி.பி நிறுவனத்தினூடாக இவற்றை கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி வழங்க தயாராக இருப்பதாக குறித்த நிறுவனம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அமைச்சரவை அனுமதியோ கொள்முதல் நடவடிக்கையோ இன்றியே மோசடியாக அரிசி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 17ஆம் திகதி அரிசி இறக்குமதிக்காக கொள்வனவு அறிவிப்பு  குறித்த கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குப்பின்னரே ச.தொ.சவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி இதற்காக 591 கோடி பெறுமதியான வங்கி கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பெரும் மோசடி இடம் பெற்றுள்ளது.

ஒரு மில்லியன் அரிசியையும்  பரீட்சிக்காது சுங்கத்திலிந்து விடுவிக்க கீரீன் பரீசோதனை உத்தரவு நவம்பர் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரிசி 10 மாதங்கள் சுங்கத்திலும் 9 மாதங்கள் தனியார் களஞ்சியத்திலும் வைக்கப்பட்டிருந்தது. 809 கொள்களன்கள் எதுவித பரிசோதனையும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளது.

அரிசி அனுப்பிய கம்பனி அரிசி உற்பத்தி கம்பனியன்றி இரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யும் கம்பனியாகும். இந்தநிலையில் இதனால் சுங்கத்திற்கு தாமதக்கட்டணமும் தனியார் களஞ்சியத்திற்கு 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூட 54 கொள்களன்கள் களஞ்சியங்களில் இருக்கிறது.

விவசாயிகள் தமது நெல்லை விற்கமுடியாமல் இருக்கும் நிலையில் இவ்வாறு மோசடியாகயாரின் தேவைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. 2015 நவம்பர் 14ஆம் திகதி மேலும் 60ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதோடு பங்களாதேஷிலிருந்து 25 ஆயிரம் மெற்றிக்தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 251,210 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது 18,597 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிலோ 75 ரூபா வீதம் தருவிக்கப்பட்ட பொன்னி அரிசி 60 ரூபாவுக்க விற்கப்பட்டுள்ளது உணவுக்கு உகந்ததல்ல என 38 ரூபா படியும் அரிசி விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 2359 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு உபாயங்களை பயன்படுத்தி மக்கள் பயன்படுத்தக் கூடிய அரிசி விலங்கு உணவுக்கு என 38 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.இதற்கு தற்போதைய அமைச்சு பொறுப்பு கூற வேண்டும்.கணக்காய்வாளரின் உதவியுடன் கோப் ஊடாக இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த இருக்கிறோம்.

இரசாயனம் உற்பத்தி செய்யும் கம்பனியூடா அரிசி இறக்குமதி செய்தது எவ்வாறு?  கடந்த அரசு  இறக்குமியூடாகவும் இந்த அரசு விற்பனையூடாகவும் பயன் பெற்றுள்ளது எனக் கூறினார். 

இதன்போது குறித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்  குறிப்பிடுகையில்  

இந்த அரிசி பாவனைக்கு உகந்ததா அல்லது இல்லையா என ஆராய குழு அமைத்தேன். உணவுக்கு உகந்தது என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதனை விற்பனை செய்வதற்கு திறந்த கேள்வி மனு கோரினேன். 75 ரூபாவிற்கு வாங்க முன்வந்தனர். ஆனால் சுகாதார பரிசோதகர்களும் வேறு தரப்பினர் களஞ்சியத்தை சீல் வைத்தனர். நாம் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்ற முடிவு கிடைக்க 3 மாதங்கள் சென்றன. அதன்போது அரிசியை விற்பனை செய்யாது பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பரிசேதனையின் பிரகாரம் உணவிற்கு இந்த அரிசி உகந்ததல்ல என நீதிமன்றம் அறிவித்ததோடு விலங்கு உணவாக விற்குமாறும் பணிக்கப்பட்டது. 

வாழ்க்கை செலவு அமைச்சரவை குழுவின் முடிவின் படி 38 ரூபா படி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது தேவைப்படி ஒரு கிலோ கூட விற்கப்படவில்லை. தற்போது இந்த இறக்குமதி மற்றும் விற்பனை தொடர்பாக  மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகிறது என்றார். 

அதனைத்தொடர்ந்து உரையைத் தொடர்ந்த சுனில் கந்துன்நெத்தி எம்.பி,

அமைச்சர்கள் ஒன்றைக் கூறுகின்றனர். வரவு செலவுத்திட்டத்தில் வேறொன்றிருக்கிறது. சமுர்த்தி திட்டத்தின் பெயரை மாற்றுவதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அதனை மாற்றுவதில்லை என சமூக வலுவூட்டல் அமைச்சர் கூறுகிறார். மாந்தை உப்பளத்தை தனியாருக்கு வழங்குவதாக வரவு செலவுத் திட்டத்தில் கூறப்படுகையில் அதனை தனியார் மயப்படுத்த மாட்டேன் என அமைச்சர் சொல்கிறார். அதேபோன்று தான் கனியவளம் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது என்றர்.

அமைச்சர் ரிஷாட் குறிப்பிடுகையில்  நீங்கள் அவ்வாறு கூறுகின்றீர்கள். வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் இவை தனியார் மயப்படுத்தப்படாது என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன் என்றார்.

தொடர்ந்து ஹந்துன்நெத்தி எம்.பி,  குறிப்பிடுகையில் பொதுமக்களினதும் அமைச்சர்களினதும் கருத்தை பெற்றே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வரவு செலவுத் திட்டத்திலுள்ள விடயங்களை அமைச்சர்கள்; மறுக்கின்றனர். 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அமைச்சர்களின் கருத்துக்கள் பெறாமலே தயாரிக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றார்.