“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருக்கு அமைய நாடு பூராகவும் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 

அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அதிபர், ஆசரியர் இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளன என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நேற்று ஹட்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

நாடு பூராகவும் தற்பொழுது கடமையில் இருக்கின்ற 5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களும், 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசரியர்களும் 2016ஆம் அண்டு முதல் இடமாற்றம் செய்யவுள்ளனர்.

தற்பொழுது பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஒரு சில பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்களும், ஒரு சில பாடசாலைகளில் குறைவான ஆசிரியர்களும் கடமையாற்றுவதால் இதன் மூலம் ஒரு சில பாடசாலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சமவள பகிர்வையும், சம ஆசிரியர் பகிர்வையும் முன்நிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றம் போல் அன்றி எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த இடமாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

மலையகத்திற்கு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அனைவரினதும் வேண்டுக்கோளாக இருக்கும் பட்சத்தில் 2016ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.

சீருடை துணிகள் பெறுவதற்கு வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

எனினும் இலங்கை முழுவதற்குமான அறிமுகமே இந்த வவுச்சர் முறை தனியாக மலையகத்திற்கு மட்டும் மாற்றுத்திட்டங்கள் கொண்டு வர முடியாது. ஆகையால் இதற்கான நடவடிக்கைகள் முதற்கட்டமாக வவுச்சர் பெற்றுக்கொண்டு மேலதிகமாக பணத்தை அறவிடும் வியாபாரிகளுக்கு அடுத்த முறை வவுச்சர்கள் அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்பதினை உறுதியாக தெரிவித்தார்.

குறிப்பாக ஒரு சில பெற்றோர்கள் குறித்த வவுச்சர்களை வியாபார ஸ்தாபனங்களில் கொடுத்து அதற்கான பணத்தை மாத்திரம் பெற்றுகொள்ள முயற்சிக்கின்றனர். அதற்கு தற்போது இடமளிக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஒரு சில பெற்றோர்கள் இந்த வவுச்சர் முறையை எதிர்க்கின்றனர்.

எனவே இந்த இலவச சீருடைகள் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதினாலேயே இந்த புதிய வவுச்சர் முறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்தோடு இலங்கையில் பாரிய கல்வி மாற்றம் இடம்பெறவுள்ளது. கல்வி மாற்றத்தை மேற்கொள்ளவதற்கு அதிகளவிலான நிதி எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதனைக்கொண்டு 2016ம் ஆண்டு முதல் இலங்கையில் பாரிய கல்வி மாற்றத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் மேலும் இவர் தெரிவித்தார்.