'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

Published By: Nanthini

24 Nov, 2022 | 09:50 AM
image

(மா. உஷாநந்தினி)

வள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருப்பதை கண்ணால் பார்த்தும் ஏதும் செய்ய முடியாமல் கையறு நிலையில் கணவன் நிற்கிறான்.

மரணப் படுக்கையில் இருக்கும் மனைவிக்கு கடைசியாக வாயில் ஊற்றவேனும் ஒரு சொட்டுப் பால் இல்லை.

அப்படியே அவளது பிராணனும் அடங்கிவிட்டது. இறுதிக் கிரியை செய்ய கையில் பணமில்லை... 

அந்த நேரத்தில் தன் ஆறு வயது மகனும் சுகவீனமுற்றுவிடுகிறான். வைத்திய செலவுக்கும் வழியில்லை. எத்தனை கஷ்டங்கள்...!

துக்கம் தொண்டையை அடைத்தாலும், அழுதுகொண்டு மூலையில் உட்கார்ந்திருக்க இது நேரமில்லை.

வெளியே செல்ல முடியாத சூழ்நிலை. ஆங்காங்கே ஷெல் விழும் சத்தம் கேட்கிறது... கிபிர் விமானங்கள் வட்டமடிக்கின்றன, அதுவும் ஸ்கந்தபுர வட்டாரத்துக்கு பக்கமாகவே...

வேறு வழியின்றி, இருள் சூழ்ந்த அவ்விரவுப் பொழுதில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உறவுகளை தேடிச் செல்கிறான், மனைவியின் மரணச் செய்தியை தெரிவிக்க.

...........................................................

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம்பெறும் முதலாவது சிறுகதையின் முன்கதைச் சுருக்கம் தான் இது.

இலங்கையில் நிகழ்ந்த இரு தரப்பு யுத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் சிக்கி சிதைந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கைப் போராட்டத்தின் கொடுமை கதாபாத்திரங்களின் வாயிலாக சித்திரிக்கப்பட்டுள்ளன.

90களிலும் 2001, 2002களிலும் வீரகேசரி, தினக்குரல், ஈழநாடு, வெளிச்சம், நாற்று, ஞானம் ஆகிய இதழ்களில் பிரசுரமான 12 சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

இவற்றில் ஒன்றைத் தவிர ஏனையவை யுத்த கால வாழ்க்கை முறை, வடக்கு மக்கள் சந்தித்த இடப்பெயர்வுகளை நினைவூட்டுகின்றன.

மேலும் உலகளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும் கதைக் கட்டமைப்புக்குள் கொண்டு வரும் எழுத்தாளரின் திறமைக்கு 'நாளைய செய்தி' சிறுகதை தக்க சான்று.

60களில் வியட்நாமின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அமெரிக்க இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற்றிய வியட்நாம் போராளிகளின் இலட்சிய வெறி இதில் புலப்படுகிறது.

வியட்நாமின் மீது சீனாவின் தாக்கம் அதிகம் உண்டு என்பது வரலாற்றுத் தகவல். அதனால் தான் இக்கதையில் வரும் ரிச்சி து வான், எமி ஜோ லான், சாலி தராப், பப்புல் கங்... முதலிய கதாபாத்திரங்களின் பெயர்கள் சீனர்களின் பெயர்களாகவே உள்ளன.

ஹனாயின் நகரத்தில் அமெரிக்க இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலை பற்றி வியட்நாமின் புரட்சித் தலைவரான ஹோ சி மின் பேசுவதாகவும் இக்கதையில் ஒரு புனைவு உண்டு.

பிற நாட்டுச் சம்பவமாக இருப்பினும் காட்சிகளை நகர்த்திச் செல்ல கையாளும் மொழி நடை, போராட்டத்துக்கு மத்தியில் தோன்றும் அன்பு, எதிர்கால கனவு, திருமணம் பற்றிய உரையாடல்கள் எளியோரையும் வாசிக்கத் தூண்டுவதாகவே உள்ளன.

இடப்பெயர்வு, மக்களின் இன்னல்களை அடியொற்றி எத்தனை படைப்புக்கள் உருவானாலும் 'அனைத்தும் ஒரே சாயல்' என்ற கருத்து மறைந்து, அம்மக்கள் வாழ்ந்து நொந்த சிதைவுகளுக்குள் நாமும் நம்மை அறியாமல் உள்வாங்கப்படுவதை இச்சிறுகதைகளை வாசித்தால் மட்டுமே உணர முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right