அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

By Ponmalar

23 Nov, 2022 | 03:47 PM
image

பி.மாணிக்கவாசகம்

மன்னார் மாவட்டத்தில் ஆற்றல் நுண்கலைக் கல்லூரி ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சந்திரகலா வெற்றிச்செல்வியின் எண்ணக் கருவில் உருவாகிய இந்தக் கலைக்கல்லூரி செயல் வடிவம் பெற்றிருக்கின்றது. சமூகத்தை வலுவாக்க வேண்டும்.

நல்நிலையில் அதனை வைத்திருப்பதற்காக முன்னேற்றங்களை நோக்கிய செயற்படு தளங்களான கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டும். இவற்றின் ஊடாக சக்தியும் செயலாற்றலும் மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்றதன் பின்னணியிலேயே இந்த ஆற்றல் நுண்கலைக் கல்லூரி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவை தொடர்பான எண்ணங்கள் தன்னை உற்சாகமாகச் செயற்படச் செய்திருக்கின்றது என வெற்றிச்செல்வி கூறுகின்றார்.  

வெற்றிச்செல்வி என்ற வேலு சந்திரகலா ஒரு முன்னாள் போராளி. மாற்றுத்திறனாளி. கலை இலக்கியப் படைப்பாளி – நாவலாசிரியை, சிறுகதை எழுத்தாளர், சிறந்த கவிதாயினி. பதின்மூன்று புத்தகங்களை அவர் வெளியிட்டிருக்கின்றார். இவற்றுக்கும் மேலாக பற்றுமிகுந்த சமூகப் போராளி. மாற்றுத்திறனாளிகளினதும், நலிவுற்ற விளிம்பு நிலையிலானோரினதும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான செயற்பாட்டாளர். இது தொடர்பிலான கருத்துக்களை அவர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

போர்மேகம் சூழ்ந்த நிலையினால் அவரது இளமைக்கல்வி பாதிக்கப்பட்டது. அதனையோர் இழப்பாக அவர் நோக்கவில்லை. அவருடைய பார்வையும் நம்பிக்கையும் வித்தியாசமானது. அது குறித்து அவர் இப்படி கூறுகின்றார்:

எனக்கு பாடசாலைக்கல்வியை இழந்துவிட்டதான கவலை எப்போதுமே இருக்கவில்லை. ஏனெனில் வாழ்தலுக்குத் தேவையான அறிவும் ஆற்றலும் தரத்தக்க கல்வியை என் வாழ்நாள் முழுவதும் பெற்றுவருகிறேன். இன்னொருவரின் நிறுவனத்திலோ அரச கட்டமைப்புகளிலோ வேலைசெய்வதற்காகவே கல்வித்தரச் சான்றிதழ் தேவையாக இருக்கிறது. ஆனால் தனித்துவமாக வளர்வதற்கும் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் சேவை செய்வதற்கும் கல்வித்தரச் சான்றிதழ்களின் அவசியம் இல்லை. ஆர்வமும் விடா முயற்சியும் சமூக அக்கறையும் இருந்தால் பாடசாலைக்கல்வியைக் கடந்தும் பல பாடங்களைக் கற்றுக்கொண்டு முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட முடியும் என்று நம்புகிறேன்.  

   கேள்வி: உங்களின் ஆக்க இலக்கிய ஈடுபாட்டு அனுபவத்தை எப்படி பார்க்கின்றீர்கள்? (புத்தகங்கள் பல வெளியிட்டிருக்கின்றீர்கள் தொடர்ந்து எழுதுகின்றீர்கள்)

பதில்: ஆக்க இலக்கியம் என்பது சமகால வாழ்வின் அனுபவங்களை பதிவதாகவே எனக்கு அமைந்தது. போர்நடந்த காலத்தில் பிறந்து வளர்ந்ததாலும் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியதாலும் என் எழுத்துகள் போர் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனது எழுத்து அனுபவம் என்பது என்னையும் என்சார்ந்தவர்களையும் அடிமனதின் பாரங்களில் இருந்து மீட்டுவரும் நம்பிக்கையாகவே பார்க்கிறேன். எழுதிக் கடந்துவரும்போதே எமது வாழ்வின் வலிகளை மட்டுமல்ல திடமான உறுதியான வாழ்வின் பயணத்தையும் பதிவுசெய்ய முடிந்திருக்கிறது. மனவலிமைகொண்ட மனிதர்களது பயணம் வரலாற்றில் எங்குமே தோற்பதில்லை. நானும் தோல்வியற்ற வாழ்வின் நீட்சி என்றே இப்போது என்னை உணர்கிறேன். இலட்சியப் பயணங்கள் சரிந்துவிழுந்து சிதறும்போது சிதறிய ஒரு துண்டிலிருந்து எமது இலட்சியத்தைப் புத்துருவாக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.  

இதுவரை 10 புத்தகங்களும் 3 தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறேன். அவை அனைத்தும் போர்க்கால மாந்தவர்களின் உண்மை வெளிப்பாடுகளே. போருக்குப் பின்னான வாழ்தலுக்கு உதவும் வகையிலான செயற்பாடுகளில் அதிக நேரத்தைச் செலவிடுவதால் தொடர்ந்து புத்தகங்கள் எழுதவில்லை. ஆனாலும் எழுதுவதைக் கைவிடவில்லை. எழுதுவேன். எழுதவேண்டியவை இன்னும் ஏராளம் இருக்கின்றன எனக்குள்ளும் என்னவர்களுக்குள்ளும்.  

கேள்வி: ஆக்க இலக்கியத்துக்கு அப்பால் ஏனைய கலைத்துறைகளில் எந்த அளவில் ஈடுபாடு கொண்டிருக்கின்றீர்கள்? அவற்றில் ஏதேனும் சாதனைகள் புரிந்திருக்கின்றீர்களா?

பதில்: பொதுவாகவே கலையார்வம் கொண்ட எனது உள்ளத்தில் கனவுகள் அதிகம். ஏற்கனவே வாத்தியக்கருவிகளைக் கையாண்டிருக்கிறேன். ஆனால் பாண்டித்தியம் பெறவில்லை. போராளியாக வாழ்ந்த நாட்களில் அணிநடை வாத்தியக் குழுவில் சைட் ட்ரம் வாசிப்பாளராக இருந்தேன். அதன்போது மெலோடிக்கா, எக்கோடியன், பேஸ் ட்ரம், சிம்போல் டினட் ட்ரம் போன்ற அணிநடைக்கான வாத்தியங்களைக் கையாளக் கற்றுக்கொண்டேன். 1993 இல் காயமடைந்து கையை இழந்தபின் வாத்தியங்களை இசைக்கும் வாய்ப்பையும் இழக்க நேர்ந்தது. வாழ்வில் இனி எப்போதுமே சைட் ட்ரம் வாசிக்க இயலாது என்ற உண்மை எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. ஆனால் எத்தனையோபேரை அவ்வாத்தியங்களை இசைக்க வைக்கும் அறிவையும் அனுபவத்தையும் வாழ்க்கை எனக்குத் தந்திருக்கிறது. காயமடைந்தபின்தான் கலைத்துறையில் அதிக ஈடுபாடு காட்டினேன். வீதி நாடகங்கள் எழுதுதல் நடித்தல், நடிக்க வைத்தல், நன்றாக எழுத பேச வாசிக்க வரைய இளையவர்களுக்கு உதவுதலையும் கலையின் கூறுகளாகவே பார்க்கிறேன். போர்முடிந்து புனர்வாழ்வென்ற காலம் கடந்து ஊருக்கத் திரும்பியதிலிருந்து இதை ஒரு சேவையாக செய்கிறேன். மனிதர்களை மனிதர்களோடு இணைத்தே வைத்திருக்கும் சக்தி கலைகளுக்குத்தான் உண்டு. மனதையும் உடலையும் வளங்களையும்; வாழ்வையும் பற்றிச் சிந்திக்கவும் நல்வாழ்வை நேசிக்கவும் செய்யக்கூடிய கலைவளர்க்கும் தளமொன்றை உருவாக்கி இருக்கிறேன். அதனை ஆற்றல் நுண்கலைக் கல்லூரி என்ற பெயரில் மன்னார் மாவட்டம் அடம்பன், பாடசாலை மைதான வீதியில் அமைத்திருக்கிறேன். தொழில்முறையாக இயக்குவதற்காக அதனை வியாபாரப் பதிவும் செய்திருக்கிறேன்.

கலைத்துறைசார்ந்த பின்னணி எதுவுமற்ற ஒருவராக இருந்து கலையில் ஈடுபாடு கொண்டிருப்பதை என்னளவில் சாதனையாகவே கருதுகிறேன். ஆற்றல் நுண்கலைக் கல்லூரியை உருவாக்கியதை நல்லதொரு வெற்றிப்பயணத்தக்கான தொடக்கமாகவே கருதுகிறேன். இக்கல்லூரியில் கற்பதையே சாதனையாகப் பலரும் கொண்டாட வேண்டும் என்பது எனது நோக்கம்.

கேள்வி: எழுத்து, கலை என்பவற்றுக்கு அப்பால் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றீர்களா?

பதில்: ஆம். நான் வாழும் மாந்தை மேற்கு பிரதேசத்தின் மத்தியஸ்தசபை உதவித் தவிசாளராக கடமையாற்றுகிறேன். போரின் பின்னாக  ஏற்படக்கூடிய உளசமூகப் பிரச்சினைகளால் உருவாகின்ற அதிளவான முரண்பாடுகளைத் தீர்க்கின்ற பணிகளை ஏனைய மத்pயஸ்தர்களுடன் இணைந்து தீர்த்து வைப்பதில் கருத்தாக இருக்கிறேன்.

மக்களுக்கான பயிற்சிகளையும் தொழில் ஆதரவுகளையும் வழங்கும் நிறுவனங்கள் அல்லது கட்டமைப்பினருக்கு இலகுவாக அணுகக்கூடியவராக நான் இருப்பதனால் அவர்களுக்கும் பயனாளிகளுக்குமான இணைப்பை ஏற்படுத்துவதன்மூலம் அதிகளவான சமூகப்பணிகளை ஆற்ற முடிகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கும் என பல தளங்களில் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் உள ஆதரவுகளை வழங்கிவருகிறேன். இயன்றளவு நண்பர்களையும் தன்னார்வலர்களையும் இணைத்தவாறே இப்பயணம் தொடர்கிறது.  

கேள்வி: இந்த வகையில் உங்களுடைய சமூகப் பணிசார்ந்த இலட்சியம் என்ன?

பதில்: தனிமையிலும் இயலாமையிலும் பின்தங்கியிருப்போரையும் திறனிருந்தும் ஆதரவற்றிருப்போரையும் ஊக்குவித்து நிலையான வளர்ச்சியில் நிமிர்ந்து நிற்கச் செய்வதே இலக்கு. ஒருவராக இயலாததை பலர் இணைந்தால் இயலுமாக்க முடியும் என்பதை அனுபவங்களால் அறிவேன். அந்த இயலுமைகளைக் கட்டியமைக்க எனனாலான ஆதரவுகளை வழங்குவதே கடமை என்றுணர்கிறேன்.

கேள்வி: மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கான உங்களது செயற்பாடுகளில் ஆற்றல் நுண்கலைக்கல்லூரியின் பங்களிப்பு என்ன?

பதில்: ஆற்றல் நுண்கலைக் கல்லூரி சகலருக்குமானது. எனினும் பின்தங்கியோராக நிற்கக்கூடியவர்களில் அதிக கவனம் செலுத்தி அவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவர்களை அவர்களுக்கே இனங்காட்டவும் உதவும். ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான களத்தைக் கொடுக்கும். புதியவற்றைக் கற்கவும் புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்பளிக்கும். மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது பிள்ளைகளை கலையில் ஈடுபாடுறச் செய்வதற்கான வாய்ப்புகளை வலிந்தழைத்து வழங்கும்.  

கேள்வி: இந்தக் கல்லூரி பல்வேறு செயற்பாடுகளைக் கொண்டதாகத் தெரிகின்றது. அவற்றின் விபரங்கள் என்ன?

பதில்: ஆரம்பத்தில் மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பாகிய வி.கேன் அமைப்பின் ஆதரவுடன் சைகைமொழிக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டது. சகோ கிரியேசன் ஆதரவுடன் டிஜிடல் மாகெட்டிங் ஏஜென்சி கற்கைநெறியும் நடைபெறுகின்றது. பிரதேசத்தையும் பிரதேசத்தின் வளங்களையும் ஆற்றல்களையும் திறமையான செயற்பாடுகளையும் வெளிக்கொணரவும் ஊக்கப்படுத்தவும் அதனையே தொழிலாகச் செய்து வருமானமீட்டவுமான கற்கைநெறி அதுவாகும். கரம், வல்லாட்டம் டாம் போன்ற விளையாட்டுகளை சிறுவர்கள் மத்தியில் பழக்கவும் பயிற்சியளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம். இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்காக பல சிறுவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள்.  தொடர்ந்து கேக் ஐசிங் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளோம். மனவளக்கலை பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. நாடகம், சங்கீதம், நடனம், வாத்தியக்கருவிகள் இசைத்தல் மற்றும் பாரம்பரிய வாத்தியங்கள் இசைத்தல் போன்ற இன்னோரன்ன பயிற்சி வகுப்புகளை; ஆரம்பிக்கவுள்ளோம். இதற்குப் பொருத்தமான வாத்தியக்கருவிகளை சேகரிக்க வேண்டி இருப்பதனால் நன்கொடையாளர்களை எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம். மேலும் பயிற்சிகளை வழங்குவதற்கான இடம் போதாத காரணத்தால் இட அபிவிருத்திக்கான ஆதரவையும் கொடையாளர்களால்தான் சாத்தியப்படுத்த முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05