'வதந்தி - தி ஃபேபிள் ஒஃப் வெலோனி' வலைத்தள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

23 Nov, 2022 | 02:23 PM
image

யக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா முதன்முதலாக கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஒஃப் வெலோனி’ எனும் வலைத்தள தொடரின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. 

அமேசான் ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'சுழல் தி வோர்டெக்ஸ்' எனும் வலைத்தளத் தொடரை தொடர்ந்து, புஷ்கர் - காயத்ரியின் சொந்தப் பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய வலைத்தள தொடர் 'வதந்தி ஃபேபிள் ஒஃப் வெலோனி'.

‘கொலைகாரன்’ படத்தின் இயக்குநர் அண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த புதிய அசல் தமிழ் வலைத்தள தொடரில், வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகியிருக்கிறார். 

இவருடன் எஸ்.ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைத்தள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். 

அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2ஆம் திகதி முதல் வெளியாகவுள்ள அசல் தொடரான 'வதந்தி தி ஃபேபிள் ஒஃப் வெலோனி' எனும் வலைத்தள தொடரின் முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. 

நீண்ட நேர வடிவிலான இந்த வலைத்தள தொடரைப் பற்றி இயக்குநர் பேசுகையில், “வதந்தி இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்குக்கு கண்டுபிடித்த முதல் விடயமே வதந்தி தான் என்று நான் நினைக்கிறேன். 

'யாகாவாராயினும் நா காக்க..' எனும் திருக்குறளில் யார் எதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்கிறது.  இந்த திருக்குறளை இதுவரை வலிமையாகவும் கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாக சொல்லவில்லை. 

ஒருவேளை இதை நேர்த்தியாக சொன்னால்  நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அத்துடன் இதை எப்போதும் சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன். 

தமிழகத்தின் சிறிய நகரமொன்றில் வாழும் இளம்பெண்ணொருத்தி வதந்தியால் எப்படி பாதிக்கப்படுகிறார்? அந்த பெண்ணின் மரணத்துக்கான காரணத்தை வதந்தி மூலம் துல்லியமாக அவதானித்து, குற்றவாளியை கண்டறிய முடிந்ததா, இல்லையா? இவை தான் படத்தின் முழு கதை.

பதினோரு மாதங்கள் இந்த தொடருக்கான திரைக்கதையை எழுதினேன். 

தயாரிப்பாளர்களும் நண்பர்களுமான புஷ்கர் - காயத்ரி இதன் கதையை முழுவதுமாக வாசித்து, ஆங்காங்கே தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 

எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2ஆம் திகதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. 

இந்த தொடர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும், 30க்கு மேற்பட்ட மொழிகளில் உதவிக் குறிப்புகளுடனும், 240 பிராந்தியங்களில் வெளியாகிறது” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right