மாரடைப்பு ஏற்பட்ட சிலருக்கு பேஸ்மேக்கர்கள் பொருத்தப்படும். அவ்வாறான சந் தர்ப்பங்களில், அவர்கள் அதீத கதிர்வீச்சு நிறைந்த இடங்களுக்கு அருகாமையில் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள். ஏனென்றால், அந்தக் கதிர்வீச்சானது, அவரில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரின் இயக்கத்தைக் குழப்பிவிடக் கூடும். இதனால், கைதொலைபேசியைக்கூட 6 செ.மீ அளவிற்கு தள்ளி வைத்தே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் முன்னைய காலங்களில் கதிர்வீச்சு அபாயம் இருந்ததால் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் செய்துகொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் தாக்கத்தால் பாதிப்புறாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இளம் வயதில் பேஸ்மேக்கர்கள் பொருத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் இந்த நவீன பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொள்ளலாம். அதாவது பக்கவிளைகளற்ற பேஸ்மேக்கரைப் பொருத்திக் கொள்ளலாம். இதன்மூலம், எதிர்காலத்தில் அவர்கள் ஏதேனும் காரணத்துக்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் தயக்கமின்றிச் செய்து கொள்ளலாம். அத்துடன் கவனிமின்மை, அலட்சியம், போதிய விழிப்புணர்வின்மை ஆகியவற்றின் காரணமாக ஆண்டுதோறும் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்பதை உணர்ந்து மாரடைப்பு தடுக்கும் முறைகளைப் பற்றி மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனைப் பெற்று அதன்படி நடக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

டொக்டர் ஏ.மாதவன்  MNAMS., DNB(Card).,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்