மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

23 Nov, 2022 | 11:34 AM
image

 உலகில் மிகவும் முதிய வயதில் இன்னமும் அரசியலில் இருப்பவர் என்றால் அது மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மதுவாகத் தான் இருக்கவேண்டும்.அவருக்கு இப்போது 97 வயது. கடந்த வாரம் மலேசியாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனது சொந்த மாநிலமான கெடாவின் லாங்காவி தீவு தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு கிடைத்த படுதோல்வி இப்போது முக்கியமான ஒரு சர்வதேச செய்தி.

 அந்த தொகுதியில் ஐந்து முனைப்போட்டியில் மஹாதிர் நான்காவதாகவே வரக்கூடியதாக இருந்தது.4,566 வாக்குகளை (6.8 சதவீதம் )மாத்திரமே அவரால் பெறமுடிந்தது. கட்டுப்பணத்தை பெறவேண்டுமானால் 12.5 சதவீத வாக்குகளை பெறவேண்டும். ' நவீன மலேசியாவின் தந்தை ' என்று அழைக்கப்பட்ட அவர் கட்டுப்பணத்தையும் இழக்கவேண்டிய ளவுக்கு  ஒரு தோல்வியைச் சந்திக்கவேண்டியேற்பட்டதற்கான காரணங்கள் குறித்து அரசியல் அவதானிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

மலேசியாவை நோக்கி உலகை திரும்பிப்பார்க்க வைத்த பாரிய பொருளாதார வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக --  செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவராக விளங்கிய அவர் குறிப்பிட்ட  ஒரு காலத்துக்குப் பிறகு அதிகாரத்துக்கு ஆசைப்படாமல் கௌரவமான முறையில்  அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் தற்போதைய அவமானம் ஏற்பட்டிருக்காது என்பதே அவர்களில் பலரின் கருத்தாக இருக்கிறது.

 75 வருடங்களுக்கும் கூடுதலான கால அரசியல் வாழ்வைக்கொண்ட மஹாதிர் கடந்த வாரம் கண்ட தோல்வி 1969 பொதுத்தேர்தலில் அவர் சந்தித்த தோல்விக்கு பிறகு --  அதாவது 53 வருடங்களுக்கு பிறகு -- முதலாவதாகும். 

இந்த தேர்தல் அவர் 2020 ஆகஸ்டில் தொடங்கிய ' தாயகப் போராளிகள் கட்சி ' க்கு (Homeland Fighters' Party ) பாரிய பின்னடைவாகப் போய்விட்டது.222 ஆசனங்களைக் கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் 121 தொகுதிகளில் போட்டியிட்ட அவரின் கட்சி எந்தவொரு ஆசனத்தையும் கைப்பற்றியதாக தெரியவில்லை.எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடியாமல் போய்விட்டது.இவ்வாறாக நேர்ந்தது அந்நாட்டு வரலாற்றில் முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்தகைய நிலையில் கூட்டாட்சி அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.பல

 தசாப்தங்களாக அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மஹாதிர் இன்று எந்தவொரு  செல்வாக்கையும் செலுத்தமுடியாத ஒருவராக நிற்கும் பரிதாப நிலை.

ஒரு வைத்தியரான அவர் 21 வயதில் ஐக்கிய மலாயர்கள் தேசிய அமைப்பில் ( United Malays National Organisation) இணைந்து அரசியலில் பிரவேசித்தார். 1940 களில் அன்றைய மலாயா ஒன்றியத்தில் மலாயர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட  கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த மஹாதிர் கடுமையான தேசியவாத உணர்வைக் கொண்டவர். 1964 ஆம் ஆண்டில் முதற்தடவையாக  அவர்  பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

1969 தனது தொகுதியில் தோல்வி கண்ட மஹாதிர் அன்றைய பிரதமர் துங்கு  அப்துல் ரஹ்மானை விமர்சித்து கடிதம் எழுதியதையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பிறகு அவர் ' மலாயர்களின் திரிசங்குநிலை ' ( The Malay Dilemma ) என்ற சர்ச்சைக்குரிய நூலை எழுதினார். அதில் அவர் மலாயர்கள் சனத்தொகை ஓரங்கட்டப்படுவதாக வாதிட்டதுடன் ஒரு இரண்டாந்தர குடிமக்கள் அந்தஸ்தை மலாயர்கள் மெத்தனமாக ஏற்றுக்கொண்டு வாழ்வதாக கடுமையாக கண்டனம் செய்தார்.

மஹாதிரின் இந்த நிலைப்பாடு ஐக்கிய மலாயர்கள் தேசிய அமைப்பின் இளம் தலைவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டு 1974 மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானார் ; கல்வியமைச்சராவும் நியமிக்கப்பட்டார்.அடுத்த நான்கு வருட காலத்திற்குள் கட்சியின் துணைத்தலைவராக வந்த அவர் 1981 பிரதமராக பதவியேற்றார்.

முதலில்  மஹாதிர் 1981 தொடக்கம் 2003 வரை 22 வருடங்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவி வகித்தார்.ஓய்வில்  இருந்த அவர் மீண்டும் 2018 மீண்டும் அரசியலுக்கு வந்து தனது முன்னாள் அரசியல் எதிரியான அன்வர் இப்ராஹிமுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக -- தனது 93 வது பிறந்த தினத்துக்கு இரு மாதங்கள் முன்னதாக -- பிரதமராக வந்தார் ; ' உலகின் மிகவும் முதிய சமகால பிரதமர் '(World's oldest current prime minister) என்று கின்னஸ் புத்தகத்தில் பதிவாக உலக சாதனையையும் படைத்தார்.

அன்றைய பிரதமர் நஜீப் ரசாக் அரச நிதியை சூறையாடி படுமோசமான ஊழலில்  ஈடுபட்டதனால் ஆட்சிமுறையில் இருந்து  ஊழலைக் களையவே மீண்டும் அரசியலுக்கு வந்ததாக மஹாதிர் அப்போது கூறினார்.இப்போது ரசாக்கும் மனைவியும் சிறையில் இருக்கிறார்கள்.

மஹாதிரின் புதிய அரசாங்கத்தினால் உட்பூசல்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் போன நிலையில் அன்வர் இப்ராஹிமுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அவர் 2020 பெப்ரவரியில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து அங்கு அரசியல் குழப்பம் உருவானது. உறுதியளித்ததன் பிரகாரம் இரு வருடங்களில் பிரதமர் பதவியை அன்வர் இப்ராஹிமிடம் கையளிக்க மஹாதிர் தவறியதும் அந்த குழப்பநிலைக்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

பொருளாதாரத்தைச் சீர்செய்வதாகவும் வெளிநாட்டு முதலீடுகளை  கொண்டுவருவதாகவும் அரசாங்கத்தில்  ஊழலை  இல்லாதொழித்து வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாகவும் உறுதியளித்துக்கொண்டே கடந்த வாரத்தைய தேர்தலில் அவரின் புதிய கட்சி போட்டியிட்டது.ஐக்கிய மலாயர்கள் தேசிய அமைப்பில் இருக்கக்கூடிய முன்னாள் பிரதமரின் அரசியல் நேசசக்திகள் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுவிடுவார் என்றும் பிரசாரங்களின்போது மஹாதிர் மக்கள் மத்தியில் எச்சரித்தார்.அரசாங்கத்தில் ஊழலை ஒழிக்க தான் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக வரவேண்டியது அவசியம் என்பதே அவரின் வாதமாக இருந்தது.

 ஆனால்,மஹாதிரின் காலம் கடந்துவிட்டது.அவர் மூன்றாவது தடவை பிரதமராக வருவதற்கான வாய்ப்பு இல்லை.இரண்டாவது தடவை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.அவர் அதையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் குளறுபடியாக்கிவிட்டார் என்று அவதானிகள் தேர்தலுக்கு முன்னர் தெளிவாகக் கூறினர்.2 கோடி 10 இலட்சம் வாக்காளர்களில் 60 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புதிய வாக்காளர்கள்.அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். தேர்தல் முடிவுகளில் அவர்களின் வாக்குகள் கணிசமான  தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.மஹாதிரின் பிரசாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

தீவிர தேசியவாத உணர்வுகளையும் பிரசாரங்களின்போது அவர் கிளறினார்.அதுவும் பலிக்கவில்லை." பொதுத்தேர்தலில் நான் என்ன தேவைக்காக போட்டியிட வேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எனது நீண்ட ஆயுள் மதத்துக்காகவும் இனத்துக்காகவும் தேசத்துக்காகவும் தொடர்ந்து போராடுவதற்கான  ஒரு  வாய்ப்பை எனக்கு கொடுக்கிறது.ஆண்டவன் கிருபையால் நான் இன்னமும் உயிருடன் இருக்கிறேன்.மதம்,இனம் மற்றும் தேசத்துக்காக போராடுவதை விட சிறந்த போராட்டம் வேறு எதுவும் இல்லை" என்று ஒரு தடவை அவர் முகநூலில் பதிவுசெய்தார்.

"ஒரு தலைவர் என்ற வகையில் வெறுமனே அமர்ந்திருந்து எதையாவது செய்யுமாறு  மற்றவர்களுக்கு நான் உத்தரவிட முடியாது. நானாகவே அவற்றை செய்யாமல் இருக்கமுடியாது.எனது போராட்டம் ஒரு வழிபாடு போன்றது.அத்தகைய போராட்டத்தில் ஓய்வுக்கு   இடமில்லை.போராட்டத்தை தொடருவது ஒரு வழிபாடேயாகும். நான் உயிரடன் இருக்கும்வரை  இந்த போராட்டத்தை தொடருவேன்.போராட்டம்  இன்னமும் முடிந்துவிடவில்லை " என்றும் அவர் கூறினார்.

 அண்மைய நேர்காணல் ஒன்றில் மஹாதிர் 100 வயதுவரை தீவிர அரசியலில் தான் இருப்பார் என்று நினைக்கவில்லை என்றும் தனது அனுபவங்களை இளம் தலைவர்களுடன் பகிர்ந்துகொள்வதே முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.

 எது எவ்வாறிருப்பினும், தனது போராட்டம் ( அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவது)  முடிந்துவிடவில்லை என்று அவர் கூறினாலும், கடந்த வாரத்தைய பொதுத்தேர்தலில் மக்கள் அவரையும் அவரது கட்சியையும் நிராகரித்துவிட்டார்கள்.மஹாதிர் போன்ற ஒரு முதுபெரும் தலைவர் கட்டுப்பணத்தைக்கூட காப்பாற்றமுடியாமல் போய்விட்டது என்பது சாதாரண தோல்வியல்ல.தேர்தல் முடிவுகள் அவர் இனிமேலும் ஓய்வு பெறாமல் அரசியலில் இருப்பதில் அர்த்தமில்லை என்பதையே உணர்த்திநிற்கின்றன.

ஆனால்,அவரிடமிருந்து இதுவரையில் ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மலேசிய தேர்தலில் மஹாதிரின் அனுபவம் இலங்கையிலும் நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்துவிட்ட போதிலும் அரசியலில் இருந்து ஓய்வுபெற மறுக்கும் அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்ல, மக்களுக்கும் ஒரு பாடத்தைப் புகட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-23 11:34:18
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01
news-image

அரசின் வரவும் - செலவும் மக்களின்...

2022-11-21 13:15:25
news-image

நல்லிணக்கம், பாதுகாப்பு, இராஜதந்திரம் குறித்து அரசின்...

2022-11-22 09:04:27
news-image

ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ்...

2022-11-18 16:33:06
news-image

தமிழ்ப்படகு மக்கள் 

2022-11-15 13:31:24
news-image

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை...

2022-11-22 09:41:24
news-image

பெருந்தோட்டப்பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணங்கள் என்ன...

2022-11-13 12:01:47
news-image

தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை ...

2022-11-12 12:25:24
news-image

இரட்டைக்குடியுரிமையும் பாராளுமன்ற உறுப்பினர்களும்

2022-11-10 11:02:34