கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து : ஆராத் துயரில் மக்கள்...

Published By: Digital Desk 2

23 Nov, 2022 | 10:14 AM
image

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

சாதாரணமான மழை தூரலில் காலை 7.25 மணி இருக்கும், பெரும் சோக சம்பவம் இடம்பெற்றது. அதுவே 2022.11.23 அன்று இடம் பெற்ற கிண்ணியா குறிஞ்சாக்கேணி இயந்திரப் படகு விபத்து சம்பவம். தற்போது அச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்  (23 ) ஒரு வருடமாகின்றது. 

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபை பிரதேச சபையை இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம். இந்த பாலம் புனரமைப்புக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இயந்திரப் படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

அப்போது படகு மூலமே பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் என பலர் பயணித்தார்கள் ஆனாலும் அன்றைய படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டன. 

குறிஞ்சாக்கேணி கரையோரம் இருந்து கிண்ணியா நகர பகுதியை நோக்கி ஆற்றை கடக்கும் போது இவ் இயந்திரப் படகு விபத்து இடம் பெற்றது.

கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயம் ஆற்றை கடந்தால் தெரியும் அப்பாடசாலையில் கற்கும் மாணவர்களும் இதற்கு இரையாகினர். கரைக்கு படகு சேர சுமார் 50 மீற்றர் இருக்கும் போதே படகு கவிழ்ந்துள்ளது. 

இதனால் அன்றைய நாள் கிண்ணியா மட்டுமல்ல முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது . 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமைந்து உள உடல் ரீதியாக பாதிக்கப்பட்டார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு மாணவிகள், கர்ப்பிணி தாய் மகள், தாய், மகன் என எட்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.

ஆனாலும் பாலத்தின் புனரமைப்பு என்ற போர்வையில் இடம்பெற்றாலும் புனரமைப்பு கைவிடப்பட்டு இடிந்து விழும் நிலையில் அதன் வழி ஊடாக மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

தற்போதைய அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் நெடுஞ்சாலை அமைச்சுக்காக 373 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக பேசப்பட்டாலும் இப் பால புனரமைப்புக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. 

இப் பாலம் ஊடாக பலர் நாளாந்தம் பயணிக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என மக்களுடைய கனவு கனவாகவே செல்கிறது.

புனரமைப்பு என்ற போர்வையில் கோத்தபாய அரசின் காலத்தில் அரசியல்வாதிகளால் அடிக்கல் நடப்பட்டது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை, நல்லாட்சி அரசில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போதும் அடிக்கல் நடப்பட்டது அதுவும் கைகூட வில்லை. 

இவ்வாறாக ஏமாற்றப்பட்ட மக்கள் தற்போது இயந்திரப் படகு மூலமான விபத்துக்கு முகங்கொடுத்து தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு எப்போது தீர்வு கிட்டும்.

"வழமையாக நான் தான் பாடசாலைக்கு கூட்டிச் செல்வது ஆனால் அன்றைய தினம் எனது இரு மகள்களையும் பாடசாலைக்கு செல்வதற்காக படகு வரை கூட்டிச் சென்று விட்டேன்.

பிறகு ஐந்து நிமிடங்களும் இல்லை இந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். பாடசாலைக்கு சென்றேன் உடனடியாக ஆசிரியர் ஒருவர் கிண்ணியா வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறினார். அங்கு சென்றால் இளைய மகள் உயிரிழந்து சடலமாக காணப்பட்டார்.

பிறகு மூத்த மகளை தேடிய போது வாயில் நுரை வெளியேற உயிருக்காக போராடிய நிலையில் அவரும் எம்மை விட்டு இறைவன் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்" என இவ் இயந்திர படகு கவிழ்ந்ததில் இரு மகள்களை இழந்த என்.சுஜானா வயது (32) என்ற தாயார் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

இப்படியாக கர்ப்பிணி தாய் மட்டுமல்லாது, அப்பாவி இளம் பிஞ்சு மாணவர்களும் இறையாகினர்.

குறித்த பாலம் புனரமைப்புக்காக மூடப்பட்டுள்ளது என போடப்பட்ட போலி பதாகை அகற்றப்பட்டு மக்கள் அவ் வழி ஊடாக பயணிக்கிறார்கள் " இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் இதன் ஊடாக  பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது" என வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கிண்ணியா பொலிஸார் இணைந்து விழிப்புணர்வு பதாகை மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். 

ஆனாலும் மக்கள் அதன் மூலமாக மீண்டும் பயணிக்கிறார்கள் மீண்டும் ஒரு அபாயகரமான சம்பவம் இடம் பெற்று விடக்கூடாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். இப் படகு விபத்தின் போது உயிரிழந்தவர்களுக்கான நீதியான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் இந்த பாலம் புனரமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும். 

"இந்த குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைக்கப்படாது காணப்படுவது வேதனையளிக்கிறது இதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் என தற்போது பலர் பயணிக்கிறார்கள் மீண்டும் ஒரு விபத்து இடம்பெறா வண்ணம் இந்த பாலத்தை உடனடியாக புனரமைத்து தருமாறு மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்" என கிண்ணியா பொது மகன் றமீஸ் உபை தெரிவித்தார்.

கிண்ணியா மக்கள் பல வருட காலமாக ஏமாற்றப்பட்டே வருகிறார்கள். முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலின் போது கிண்ணியாவில் இடம் பெற்ற கூட்டத்தின் போது  கொடுத்த வாக்குறுதி நிறைவேறவில்லை ஆனாலும் அவர் ஜனாதிபதியாகி பதவிக் காலம் முடியும் வரை ஆட்சி செய்தார் குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைக்கப்படவில்லை . இன்னும் இன்னும் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காது இப் பாலத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்