அச்சம் கொள்ளத் தேவையில்லை !

Published By: Ponmalar

22 Nov, 2022 | 02:56 PM
image

‘தாய்மை என்பது எத்தனைப் பெரிய வரம்’ என்று எல்லா பெண்களும் எண்ணுவோம்தானே... அதே போன்று கருவுற்றிருக்கும் காலத்தில் வரக்கூடிய உடல் நலச் சுமைகளையும் குழந்தை பெற்றெடுத்தவர்கள் எளிதில் மறக்க முடியாத அனுபவம்தான்.

இன்னும் சொல்லப் போனால் பிரசவ வலியின் போது முக்கால்வாசி பெண்களுக்கு வரும் எண்ணம், ‘இந்த வலிய அனுபவிக்குறதுக்கு புள்ள பெத்துக்காமலேயே இருக்கலாம்’ என்றுதான்.

அப்படியான அசௌகரியங்களில் ஒன்றுதான் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய முதுகு வலி. குழந்தை பிறந்த பின்பும் கூட இது பலருக்கு தொடங்கக் கூடும். எனவே கர்ப்ப கால முதுகு வலி பற்றிய போதிய விழிப்புணர்வு அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து அதனைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

அதென்ன பிரசவ கால முதுகு வலி...?

நம் மூளையின் அடிப்பகுதியில் அதன் நீட்சியாக நீண்ட தண்டுவடம்  கீழே தொடர்ந்து வந்து இடுப்பில் முடியும். இதனையே மருத்துவத்தில் Spinal Cord என்கிறோம். மண்டை ஓடு எப்படி மூளையை பாதுகாக்கிறதோ அப்படித்தான் இந்த தண்டுவடத்தை சுற்றி தண்டுவட எலும்புகள் பாதுகாக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக சிறு எலும்புகள் கழுத்து முதல் இடுப்பு வரை தொடர்ந்து வரும். ஒவ்வொரு எலும்புகளுக்கு நடுவேயும் ஜெல்லி போன்ற திரவ தட்டுகள் (Disc) இருக்கும். இந்த எலும்புகள் மற்ற இடத்தில் இருக்கும் எலும்புகள் போல ஒன்றோடு ஒன்று இணைந்து சிறு மூட்டுகளாய் இருக்கும்.

இந்த மூட்டுப் பகுதிகளை சுற்றிலும் தசைகள், நரம்புகள், மஜ்ஜைகள் என மற்ற மூட்டுகளைப் போல் வடிவமைந்திருக்கும். அதிக எடையை ஒரு கையில் வைத்து நிற்கும் போது நாம் எப்படி இன்னொரு பக்கம் சாய்ந்து விடுவோமோ அப்படித்தான் கரு முன்னே வளர வளர நம் முதுகு பின் நோக்கி தள்ளப்படும். இதனால் முதுகின் இயல்பு நிலையில் மாறுகிறது அல்லவா? இதுவே கர்ப்பகால முதுகு வலியாகும்.

எந்த மாதத்தில் வரும்...?

*ஆறு மாதத்திற்குப் பின் ஐம்பது சதவிகிதம் தாய்களுக்கு வரும் வாய்ப்புள்ளது. எனினும் சில பெண்களுக்கு மூன்று மாதம் முதலே வலி தெரியும்.

*நாற்பது சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்த மூன்று மாதம் வரை முதுகு வலி இருக்கும்.

*இருபது சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை முதுகு வலி இருக்கக்கூடும்.

காரணங்கள்...

*தாயின் உடல் எடை கர்ப்ப காலத்தின் போது அதிகரிப்பது.

*கருவின் எடை அதிகரிக்கும் போது வயிற்றுப் பகுதி பெரிதாகும். இதனால் வயிற்று தசைகள் சிசு வளர வளர பலவீனமாகும். மேலும் பின்னால் உள்ள உறுப்புகளான முதுகெலும்புகளுக்கு, தசைகளுக்கு, தட்டுகளுக்கு, நரம்புகளுக்கு அழுத்தம் அதிகமாகி வலி வரக்கூடும்.

*கர்ப்ப காலத்தில் ரிலாக்ஸின் (Relaxin) என்னும் ஹோமோன் கர்ப்பிணிகளின் உடலில் சுரக்கும். இதனால் இடுப்பு தசை, தசைநார் மற்றும் இடுப்பு எலும்புகளை தளர்த்தி பிரசவ காலத்தில் இடுப்பையும், பிறப்புப் பாதையையும் அகலமாக்கி குழந்தைப் பிறப்பை எளிதாக்குகிறது. எனவே இந்த தசை தளர்ச்சி ஒரு வகையில் நல்லது எனினும் சிசுவின் எடையை தாங்கும் ஆற்றல் தசைகளுக்கு குறைந்துவிடுவதால் வலி ஏற்படுகிறது.

தீர்வுகள்...

*கர்ப்ப காலத்தின் போது தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்வதனால் சிசுவிற்கு ஏதேனும் சேதம் ஏற்படுமோ என்னும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி அவரவர் உடல் நிலையை பொருத்து உடற்பயிற்சிகள் கற்றுக் கொண்டு பயிற்சி செய்யலாம்.

பிரத்யேகமாக இடுப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தசைகள் வலுப்பெரும் (Strengthening) பயிற்சிகளையும், கால் மற்றும் தொடை தசைகள் இலகுவாக இருக்க Stretching பயிற்சிகளும் வழங்கப்படும்.

*தினசரி நடைப்பயிற்சி செய்வது அவசியம். குறைந்தது இருபது நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

*நீச்சல் குளத்தில் பிரத்யேக பயிற்சிகளை இயன்முறை மருத்துவர்கள் வழங்குவர். இது தரையில் பயிற்சிகள் செய்வதைக் காட்டிலும் சிறந்தது.

*இவை தவிர்த்து முதுகு வலிக்கு மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இயன்முறை மருத்துவ டிப்ஸ்...

*படுத்திருக்கும் நிலையிலிருந்து எழும்போது ஒரு பக்கமாக திரும்பி கைகளை பயன்படுத்தி, உடல் எடையை ஊன்றி எழுந்திருத்தல் முதுகின் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவும்.

*நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நடக்க வேண்டும்.

*உட்காரும்போது  குனிந்தவாறு (Slouched) அமர்வதை தவிர்க்க வேண்டும்.

*திரும்பி ஒரு பொருளை எடுக்க வேண்டுமெனில் முதுகை திருப்பாமல் கால் பாதங்களை திருப்பி எடுக்கலாம்.

*அதிக எடையுள்ள பொருட்களை தூக்கக் கூடாது.

*ஏதேனும் பொருளை கீழேயிருந்து எடுக்க வேண்டுமெனில் அப்படியே முதுகை முன் வளைத்து குனியாமல் கால் முட்டியை மடக்கி கீழ் நோக்கிப் போய் எடுக்க வேண்டும்.

*ஹீல்ஸ் அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தட்டையான (Flat) செருப்புகளை உபயோகிப்பது நல்லது.

*தினமும் வெந்நீரில் இருபது நிமிடங்களுக்கு மேல் ஒத்தடம் வைத்துக் கொள்ளலாம்.

*வாரத்திற்கு மூன்று நாட்கள் நீச்சல் குளத்தில் மார்பளவு தண்ணீரில் நடைப்பயிற்சி செய்யலாம்.

எனவே கர்ப்ப காலம் ஒருவகை சுமையாய் இருந்தாலும் அதனை இன்பமுடன் சுகமாய் மாற்ற இயன்முறை மருத்துவம் கைகொடுக்கும் என்பதையும், அதோடு குழந்தை பிறந்த பின்னால் வரும் முதுகு வலியையும் தடுக்க பெரிதும் உதவும் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right