(க.கிஷாந்தன்)

தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினால் மலையக பஸ் சேவைக்கு பாதிப்பில்லையென ஹட்டன் டிப்போவின் பரிசோதகர் தெரிவித்தார். 

இந்த பஸ் வேலை நிறுத்ததிற்கு முகம் கொடுப்பதற்காக 88 புதிய பஸ்கள் பிரதான பாதையிலும், குறுக்கு வீதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்களும், தனியார் பஸ் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தினை கைவிட தீர்மானித்ததோடு, தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களில் ஒன்றான இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன ஜனாதிபதியுடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டினை அடுத்து தங்களது சங்கத்தின் போராட்டத்தினை கைவிடப்போவதாகவும், பஸ் சேவைகள் வழமை போல இடம்பெற போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மாகாண மட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதற்கு கால அவகாசம் இல்லாததால் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்ததை போன்றே இடம்பெறுமென தெரிவித்துள்ளது.

எனினும் இன்றைய தினம் சில வீதிகளில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறான போதிலும் தனியார் பஸ் சேவைகள் வேலை நிறுத்தம் காரணமாக அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.