'உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம்' - பாதுகாப்பற்ற தொடுகை ஆபத்தானது - பகுதி 6

Published By: Nanthini

23 Nov, 2022 | 03:40 PM
image

(மா.உஷாநந்தினி)

தொடுகையை கற்றுக்கொடுப்பவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்பவர் நற்பண்புடைய ஒருவராக இருக்க வேண்டும் என்பது பிரதான எதிர்பார்ப்பு. 

ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தான் தகாத பாதையில் பயணிப்பவராக ஒருபோதும் இருக்கக்கூடாது. 

கைப்பேசி அல்லது மடிக்கணினி பாவனையாளர் ஒருவர், தனது கைப்பேசியில் அல்லது மடிக்கணினியில் இணைய வழியாக யூடியூப் மற்றும் ஏனைய வலைத்தளங்களுக்கு சென்று ஆபாச புகைப்படங்களையோ வீடியோக்களையோ பார்க்கிறார் என கருதுங்கள்..... அவ்வாறு வீடியோக்களை பார்த்துவிட்டு இணைய தொடர்பை துண்டிக்காமல் கைப்பேசியை அப்படியே ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போய்விடுகிறார் என நினையுங்கள்... 

அடுத்து அந்த இடத்துக்கு வரும் அவரது மகன் அல்லது மகள் தந்தையின் கைப்பேசியை அல்லது மடிக்கணினியை எடுத்துப் பார்க்கிறார் என்றால், எப்படியிருக்கும்? 

அந்தத் தந்தையை பற்றி நல்ல அபிப்பிராயமா தோன்றும்! 

ஒன்றில், தந்தை மீதுள்ள மரியாதை இழக்கப்படும். இல்லையேல், 'தந்தை வழியே தன் வழி' என்று பண்பு பிறழும். 

ஆக, பிள்ளைகளுக்கு நல்லதை போதிப்பவர் நல்லவராக இருந்தேயாக வேண்டும்.... 

சில பிள்ளைகளின் பெற்றோர், தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்பவராக உள்ளபோதும் வெளியிடங்களில் அவர் ஏனைய பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒருவராக இருப்பார். 

ஆகவே, தன் பிள்ளைகளை போல் மற்ற பிள்ளைகளையும் கருதி கன்னியம் காப்பவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும். 

இந்த விடயத்தை பொருத்தவரை, பிறருக்கு கற்பிக்கும்போதே கற்றுக்கொடுப்பவர் முன்பை விட இன்னும் பொறுப்பு மிக்கவராக மாற வாய்ப்புண்டு.

சில சந்தர்ப்பங்களில் பிள்ளைக்கு தொடுகை தொடர்பான விழிப்புணர்வூட்டும் பெற்றோரே அவர்களிடம் எல்லை மீறி நடந்துகொள்வதுமுண்டு. 

குறிப்பாக, அப்பாவே தன் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கொடுமை இன்றும் சில குடும்பங்களில் நடப்பது நாம் அறிந்த விடயமே. பெற்ற அப்பாவின் தகாத செயல்களுக்கு ஆட்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் எத்தனையோ பிள்ளைகள் நம் சமூகத்திலேயே இருக்கிறார்கள். 

சிலர் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கவும் கூடும். அம்மாவிடமே கூட அதைப் பற்றி சொல்ல தயங்கலாம் அல்லது பயம் கொள்ளலாம். 

ஒருவேளை அப்பா தகாத முறையில் தன்னை நெருங்குவது மாதிரியான உணர்வு பிள்ளைக்கு ஏற்பட்டால், அதை அம்மாவிடம் உடனே சொல்லிவிடுவது தான் நல்லது. 

அப்பாவின் செயலை அம்மாவிடம் தெளிவாக கூறி புரிய வைக்க, பிள்ளைக்கு தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் அப்பாவிடமிருந்து பாதுகாப்பான முறையில் ஒதுங்கவும் பிள்ளை முயற்சிக்கலாம்.  

உயிருக்கு ஆபத்து 

தொடுகை குறித்த அறிவையும் தெளிவையும் பெற்றுக்கொள்வதன் மூலம் தங்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பிள்ளைகள் தப்பித்துவிடுவர் என கருத வேண்டாம். 

தகாத தொடுகையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை நாம் என்னதான் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தாலும் சம்பவம் நிகழும் சந்தர்ப்பத்தில், அவ்வழிமுறைகளை கையாள்வதில் பிள்ளை சிக்கல்களை எதிர்கொள்ளலாம். 

யாரேனும் முறையற்ற விதத்தில் தொட்டுவிட்டாலோ அல்லது பலாத்காரம் செய்ய முயன்றாலோ எதிர்த்து சத்தம் போட, உரிய இடத்திலிருந்து தப்பி ஓட முடியாதளவுக்கு பிள்ளை இக்கட்டான நிலைக்கு தள்ளப்படலாம். 

பாதுகாப்பான ஒருவரை நாடி உதவி கேட்கும்போது, எதிர்பாராத விதமாக உதவி கோரப்படுபவரும் (தீயவராக இருப்பின்) பிள்ளைக்கு பாதிப்பை உண்டாக்கலாம். 

சில சந்தர்ப்பங்களில் எதிராளியிடம் தனது எதிர்ப்பை காட்டும்போது, பிள்ளைக்கு உயிராபத்தும் நேரிடலாம். 

சொல்லிக்கொடுக்காமல் மட்டும் இருந்துவிடாதீர்கள், பெற்றோரே!

என்னதான் நாம் பிள்ளைக்கு சொல்லிக் கொடுத்தாலும், ஆபத்தான சூழலில் பாதுகாப்பினை தேடிக்கொள்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாலும், சில சமயங்களில் பிள்ளைக்கு வரக்கூடிய ஆபத்தை தடுத்து நிறுத்த இயலாமற்போய்விடும். ஏன், உயிருக்கே கூட உத்தரவாதம் கிடையாது. 

ஆக, தொடுகை குறித்த முன்னறிவை பிள்ளைக்கு வழங்குவது, முழுமையாக பாலியல் தொல்லைகளுக்கு தீர்வாக அமையாது. 

ஆனாலும், குற்றம் நிகழ்வதை ஆரம்ப நிலையிலேயே தடுக்க, பிள்ளை தன்னாலான நுட்பங்களை கையாள்வது, முன்பாதுகாப்பாக அமையும். 

இதனால் பெற்றோர், பிள்ளைக்கு தொடுகை பற்றி படிப்படியாக சொல்லித்தர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறார்கள். 

வளர்ந்த பின்னரும் தொடரும் சிக்கல்கள்

சிறு வயதில் பெற்றோர் பிள்ளைக்கு சொல்லித் தராவிட்டால் அவர்கள் வளர்ந்து, பருவ வயதை அடைந்த பின்பும் தொடுதல் விடயத்தில் அக்கறை காட்டாதிருந்துவிடுவர். எப்படியெனின், 

பருவ வயதுடைய ஆணையோ பெண்ணையோ நபரொருவர் காம எண்ணத்தோடு தீண்டினால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். 

நபரின் பிடியிலிருந்து விடுபட முற்படாமல் உடன்படுவது போல் இணங்கவும் கூடும். 

ஆண் அல்லது பெண்ணின் இந்த அறியாமையை பயன்படுத்தி எதிர்நபர் உடலுறவுக்கு உட்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

'மிலிட்டரி'யில் ஒரு காட்சி

நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவான 'மிலிட்டரி' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். 

அதில் ஐந்து தங்கைகள்... தாய், தந்தையை இழந்தபின் தங்கைகளை தனித்து வளர்க்கும் அண்ணன்... 

மூத்த தங்கை பகுதி நேர வகுப்புக்குச் சென்றிருந்தபோது அங்கே தனிமையை பயன்படுத்தி ஆசிரியர் அவளிடம் தகாத முறையில் நடந்துகொள்வார். 

அதை கேள்விப்பட்டு அண்ணன் (சத்யராஜ்) ஆசிரியரை அடிக்க, அப்போது ஆசிரியர் சொல்வார், "நான் தொடும்போது உன் தங்கச்சி சத்தம் போடலய்யா.... அவ சத்தம் போட்டு என்ன தள்ளிவிட்டிருந்தா இந்த தப்பு நடந்திருக்காது..." என்று. 

அதற்கு மேல் பேச முடியாமல், அங்கிருந்து புறப்பட்டு தங்கையை காண வீட்டுக்குச் செல்வார், அண்ணன். 

நடந்ததை பற்றி தங்கையிடம் விசாரிக்க, அவள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டு குற்ற உணர்வில் கதறி அழுவாள். 

அப்போது அண்ணன் தங்கையிடம் சொல்வார்:

"இதுல உன் தப்பு ஒன்னுமில்லம்மா... ஒருத்தன் உன்ன தொட்டுட்டா எப்படி நடந்துக்கணுங்கிறத சொல்லித் தராம உன்ன நா வளத்துட்டேன்... அம்மா இருந்திருந்திருந்தா உனக்கு இதெல்லாம் சின்ன வயசுலயே சொல்லிக் கொடுத்திருப்பாங்க..." என்று. 

ஆக, ஆண் அல்லது பெண்பிள்ளைக்கு அந்தந்த வயதில், சொல்லிக்கொடுக்க வேண்டிய விடயங்களை சொல்லியேயாக வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை என்பதை புரிந்துகொள்ளுங்கள், பெற்றோரே! 

முறையற்ற தொடுகைக்குள் அடங்காத செயல்கள் 

முறையற்ற தொடுகை பற்றியும், அதனால் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் பற்றியும் பார்த்துவிட்டோம். 

பாலியல் துஷ்பிரயோகம் அல்லாத, உடல் ரீதியாக செய்கிற துஷ்பிரயோகம் என சிலவற்றை குறிப்பிடலாம். 

பிள்ளையை அடிப்பது, கன்னத்தில் அறைவது, கிள்ளுவது, தலையில் குட்டுவது, விரல்களை மடக்கிக் குத்துவது அல்லது பிள்ளைக்கு வலிக்கும்படியாக பொருளொன்றினால் குத்துவது, அடிப்பது, மிதிப்பது.... என உடலால் துன்புறுத்தப்படுவதும் ஒரு விதம். 

இதுபோன்ற துஷ்பிரயோகங்களிலும் 'தொடுதல்' என்கிற செயலை காண முடிகிறது. எனினும், இவற்றை 'முறையற்ற தொடுகை' என கூற முடியாது. இவை உடலளவில் செய்யும் மோசமான சித்திரவதைகள். 

உதாரணமாக, ஊசியால் பிள்ளையின் கையை குத்துவது சித்திரவதை. பொருளொன்றால் பிள்ளையின் அந்தரங்க உறுப்பை உராய்வது பாலியல் குற்றமாக பார்க்கப்படும் 'முறையற்ற தொடுகை'. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. 'முறையற்ற தொடுகை' என்பது பாலியல் துஷ்பிரயோகம் என்கிற ரீதியிலேயே பார்க்கப்படுகிறது. 

உளப் பாதிப்புகள் 

தகாத தொடுகையை பிரயோகித்த பின்னர், பிள்ளைகள் உடலளவில் பாதிக்கப்படுவதை விட மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

* மன அழுத்தம் ஏற்படும்.

* சோர்வடைவர்.

* எந்நேரமும் பதற்றத்தில் இருப்பர்.

* யாரைப் பார்த்தாலும் பயந்து நடுங்குவர். 

* இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை என சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிடுவர். 

* தனிமையை வெறுப்பர். 

* நண்பர்களோடு பழகுவதை குறைத்துக்கொள்வர் அல்லது முற்றாக விலகிவிடுவர். 

* மொத்தத்தில், பிள்ளைக்கு ஒருவர் உடல் மற்றும் மனதளவில் செய்யும் எல்லா கொடுமைகளும் முடிவில் மிகப் பெரிய பாதிப்பை கொடுப்பது உள்ளத்தில் தான். இதனால் பிள்ளைகள் எல்லையற்ற மனத்தாக்கங்களுக்கு ஆளாவதே கொடுமையிலும் கொடுமை! 

இந்த கட்டுரையின் பகுதி 1ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 2ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 3ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

இந்த கட்டுரையின் பகுதி 4ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். 

இந்த கட்டுரையின் பகுதி 5ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்