இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன்.  அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.

பராளுமன்றத்திற்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார்.

பொலிஸ்மா அதிபர் பேசும் வீடியோவை  நானும் பார்த்தேன். அந்த செயற்பாடு மிகவும் தவறானது. இது தொடர்பில் அவரை அழைத்து விளக்கம் கோர இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று காலை நடைபெற்ற கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் உரைநிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவருக்கு  தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்போது பொலிஸ் மா அதிபர், 'கட்டாயமாக அவரை கைது செய்ய மாட்டேன். பொலிஸ் நிதி மோசடி பிரிவில் விசாரித்தேன். எனது அனுமதியின்றி அவரை கைது செய்ய விடமாட்டேன்' என கூறுகின்றார். அந்த  தொலைபேசியில் உரையாடும் காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.