நெருக்கடிகளால் பறிபோகும் மலையக சிறுவர்களின் கல்வி 

By Digital Desk 2

21 Nov, 2022 | 11:57 AM
image

(செ.லோகேஷ்வரன்) 

பல்வேறு காரணங்களுக்காக இன்று மலையக பெருந்தோட்டப்பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல்கள் அதிகரித்து வருகின்றன. இதை கல்வி அதிகாரிகள் கண்டு கொள்ளாமலிருப்பதானது இந்நிலை அதிகரிப்பதற்கு ஏதுவாக உள்ளது. 

ஜனநாயக நாடொன்றில் பிறக்கும் குழந்தை முதல், வயோதிபர் வரை ஒவ்வொருவரும் அனைத்துவிதமான உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாக இருக்கின்றனர். 

எனினும் எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுவதற்கு முன்பதாகவே பல உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகமாக மலையக பெருந்தோட்டப்பகுதிகள் காணப்படுகின்றன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது ஒவ்வொரு சமூகத்தினரையும் ஒவ்வொரு விதமாக பாதித்துள்ளது.

இதில் சதாரண பிரஜை ஒருவரின் அடிப்படை உரிமை எனும் போது, வாழ்வதற்கான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை, போஷாக்கான/விருப்பமான  உணவை உண்பதற்கான உரிமை என்பன அடங்கும்.

இந்த உரிமைகளில் முக்கியமானதும் மலையக சமூகத்தின் எதிர்கால இருப்பையும் எழுச்சியையும் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக கல்வி விளங்குகின்றது.  ஆனால் அதனை முறையே பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பெரும் மாணவர் படை பாடசாலை இடைவிலகல்களை எதிர் கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தரவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில்   நாட்டை நெருக்கடிக்குள்   தள்ளிய கொவிட் தொற்றின் காரணமாக இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கையை பெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன.  இருப்பினும் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களின் கூற்றுகளின் படி மிகப்பெரிய அளவில் மாணவர்கள் இடைவிலகலை மேற்கொண்டதாக அறிய முடிகின்றது.

நுவரெலியா மாவட்டம்

 மலையக மக்கள் செறிந்து வாழும்  நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா, கொத்மலை மற்றும் அட்டன் கல்வி வலயங்களில் 2021 மற்றும் 2022ஆம் கல்வி ஆண்டில்   பெருமளவிலான இடைவிலகல் சமபவங்கள் பதிவாகியுள்ளன.

பாடசாலை அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் சில தோட்டப்பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுக்கு அமைவாக நுவரெலியா கல்வி வலயத்தில் 12 சதவிகிதம் வரையான மாணவர்களும், கொத்மலை கல்வி வலயத்தில் 10 சதவிகிதம் வரையான மாணவர்களும் அட்டன் கல்வி வலயத்தில் 5 சதவிகிதமான வரையான மாணவர்களும் இடை விலகியுள்ளனர். 

குறிப்பாக நாம் அட்டன் கல்வி வலயத்தை எடுத்து கொண்டால் அங்கு நான்கு கோட்டங்களின் கீழ் 150 பாடசாலைகள் காணப்படுகின்றன.

இவற்றுள் கோட்டம் ஒன்றில் 229 மாணவர்களும், கோட்டம் இரண்டில் 265 மாணவர்களும் கோட்டம் மூன்றில் 271 மாணவர்களும் 35 சிங்கள மொழி பாடசாலைகளை உள்ளடக்கிய கோட்டம் நான்கில் 18 மாணவர்களும் இடைவிலகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டன் கல்வி வலயம் 

மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில்  இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன.  நுவரெலியா மாவட்டத்தின் சில உயர்தர பாடசாலைகளில் , மாணவர்களுக்கு சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பை தொடர விடாமல் பாடசாலை நிர்வாகங்கள் நெருக்கடிகளை தருவது அதிகரித்துள்ளதாக சில மாணவர்களிடம் கதைத்த போது தெரியவந்தது.   

பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்துள்ள ஒரு சில   தோட்டப்புற பாடசாலைகளிலும் , மாணவர்களின்  கல்வியை முன்னிலைப்படுத்தப்படாத போக்கு உள்ளதாக பரவலாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

பொருளாதார காரணி

நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக நாட்டின்  பணவீக்கம்  சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் நாடு பணவீக்கம், மின் தடைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்றவற்றின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. 

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்தை விட அதிகரித்துள்ளது. இலங்கையில் உள்ள  2 கோடியே இருபது  லட்சம் மக்கள்தொகையில் 17 லட்சம் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஜூன் மாதம் ஐ.நா. மதிப்பிட்டு இருந்தது. 

இதன் தொடர்ச்சியான இரண்டு பருவகால மோசமான அறுவடை, அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை அச்சத்தை ஏற்படுத்தும்  அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பெருந்தோட்ட  சமூகம் சொல்லொனா கடினத்தை  அனுபவித்து வருகின்றது.

இதற்கிடையே பாடசாலை உபகரணங்கள், பாடசாலை செல்வதற்கான  போக்குவரத்து செலவு, உள்ளடங்களாக   நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 83,000 ரூபா தேவைப்படுவதாக பேராதனை பல்கலைகழக குழுவொன்று நடாத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அப்படியாயின் பெருந்தோட்ட குடும்பம் ஒன்று இன்றைய நிலைமையில் வீட்டில் இருவர் வேலைக்கு சென்று 30 நாட்கள் உழைத்தாலும் இந்த தொகையை பெற முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

சமூகக் காரணி

 பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மன உளைச்சலுக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இடைவிலகலுக்கு இது ஒரு பெரும் காரணியாக விளங்குகின்றது.  சராசரி புள்ளிகளைப் பெறாதவர்களை மனஉளைச்சலுக்குட்படுத்தி கட்டாய இடை விலகலை மேற்கொள்ளல். கடுமையான தண்டனைகளை வழங்கல்.  பாடசாலைகளின் பெயர்களை பிரபல்யப்படுத்துவதற்காக சராசரி புள்ளிகளை எடுக்காத மாணவர்களை இடைவிலக தூண்டல் போன்றவற்றை கூறலாம்.

இதற்கு உதாரணமாக   அட்டன் கல்வி வலயத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டில் 197 மாணவர்கள் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவில்லை. 2018இல் இத்தொகை 201 ஆக இருக்கின்றது. இதற்கான பின்னணி   குறித்து வலயக்கல்வி பணிமனை தேடுதல்களை மேற்கொள்ளவில்லை. 

அதே வேளை, குறித்த வலயத்தின் பெரும்பான்மை இன பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் 2017 இல்  பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களின் எண்ணிக்கை 09 ஆகவும் 2018 இல்  மாணவர்களின் எண்ணிக்கை 08 ஆகவும் இருக்கின்றது. தமிழ் பாடசாலைகளில் அது முறையே 188 ஆகவும் 193 ஆகவும் இருக்கின்றது. 

அதிலும் மூன்று கோட்டங்களில் உள்ள 12 பாடசாலைகளில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களின் எண்ணிக்கை 128 ஆக இருந்தமை தொடர்பாக   மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருவதை குறிப்பிடலாம்.  

கட்டாய கல்வி அரசாங்கத்தால் சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதேசத்தின் நிர்வாக ரீதியான கல்வி மற்றும் அரச அதிகாரிகள் அது குறித்து அக்கறை கொள்ளாதிருத்தல் வேதனைக்குரியது.  குறிப்பாக தோட்டப்பிரதேசங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றார்களா என்பது குறித்து ஆராயாது இருத்தல், அரசியல் ரீதியான புறக்கணிப்புகள், அலட்சியப்படுத்தல்கள். பாடசாலைகளுக்கு உரிய வளங்களை வழங்காத காரணத்தினால் மாணவர்களுக்கு சந்தோஷமான சூழலாக  பாடசாலைகள் இல்லாமல்  இருத்தல் போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.  இவை தொடர்பான  காரணங்களும் ஆய்விற்குட்படுத்தப்பட வேண்டியதாகவே இருக்கின்றது.

 வீட்டுச்சூழல்

குடும்பத்தகராறுகள். பெற்றோர் மத்தியில் பிரிவினை, முரண். பெற்றோர் பிரிந்திருத்தல். தனிமையில் விடப்படும் சிறுவர்கள்,  உறவினர்கள், அயலவர்களால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படல் மற்றும் தரகர்களால் வீட்டு வேலைக்கு அனுப்பப்படல் உள்ளிட்ட விடயங்கள் இளம் தொழிலாளர் படையொன்று உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது. இதனால் ஏற்படுத்தப்படும் சமூக மாயைகள் , இளம் வயதினரை தொழிலாளர் வலையமைப்பிற்குள் ஈர்க்கச்செய்து  பாடசாலை இடை விலகலை தூண்டுகின்றது.

அந்ந வகையில் இந்த பொருளாதார நெருக்கடியும் அதனுடன்   உருவாக்கப்பட்ட சில திட்டமிட்ட செயற்பாடுகளும் மலையகத்தில் உள்ள சிறுவர்களின்   வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கேள்விக்குறியாகியுள்ளமை தெளிவாகின்றது.

இது மிகவும் பாரதூரமான விடயமாகும். ஆனால் ஏற்கனவே மலையக சமூகத்தினர் மாற்றாந்தாய் பிள்ளைகள் போன்று நடத்தப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் தாண்டி குறித்த மாணவர்களின் இடைவிலகலுக்காக ஒரு அரசியல் காரணியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதனுடன் இணைந்தபடி அப்படியொரு அரசியல் காரணி இருக்குமானால், கல்வி அதிகாரிகள், அதிபர்கள்  மற்றும் ஆசிரியர்கள் ஊடாக இயக்கப்படுகின்றதா என்பதும் ஆராயப்படவேண்டிய ஒன்றே.  

ஐ.நா.  விசேட அறிக்கையும் யதார்த்தமும்

இலங்கையில் ஏனைய   சமூகங்கள் வாழும் வாழ்க்கை முறைமை இந்த மக்களுக்கு கிடைக்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இதனையே    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் அடிமைத்துவத்தின் சமகால வடிவமாக மலையக தமிழர்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஓபொகாடா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கல்வி கற்பதற்கான உரிமை, இருப்பதற்கு பாதுகாப்பான  வீடு, உண்ண ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தொழிலுக்கு ஏற்ற ஊதியம்   என எதுவும் இன்றி இன்னமும் அடிமை வாழ்கையையே மலையக மக்கள் வாழ்கின்றனர்.இந்நிலையிலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்த மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அவதானிப்புகளை நேரடி களவிஜயம் மூலம் ரொமோயா ஓபொகாடா அறிக்கை படுத்தி ஐநாவில் சமர்ப்பித்து நிலைமையின் பாரதூரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 நடவடிக்கைகள்

இன்றைய காலகட்டத்தில் மலையக இளம் தலைமுறையினர் ஒரு இளம் தொழிலாளர் படையாக ஏனைய சமூகத்தினர் மத்தியில் அடையாப்படுத்தப்படும் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை இந்த அடையாளத்தை மாற்றுவதற்காக கற்பிக்கும் சமூகம் நீண்ட ஒருபோராட்டத்தை மேற்கொண்டே வருகின்றது.

இதற்கு வலிமை சேர்க்கும் பொறுப்பை பெரும்பான்மையான அதிபர்களும் ஆசிரியர்களும் ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாய மாத்திரமன்று, அது ஒரு ஆரோக்கியமான சமூக உருவாக்கத்திற்கான அடித்தளமுமாகும்.

அத்தோடு ஒவ்வொரு பாடசாலைகள்தோறும் உருவாக்கப்பட்டுள்ள கட்டாய கல்விக் குழுவின் செயற்திறன் விருத்தியை மேம்படுத்தி மாணவர் கட்டாய கல்வியை நிவர்த்திப்பதற்கான சூழலை ஏற்படுத்தல், பாடசாலைகளே (அதிபர் மற்றும் ஆசிரியர்) மாணவருக்கான பொறுப்பை ஏற்று அவர்களது வருகையை உறுதிப்படுத்தல் வேண்டும்.

அத்தோடு பெற்றோரும்   பொருளாதார சிக்கல் என்ற காரணிக்கு அப்பால் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு செயற்படவேண்டும்.

மலையக தமிழர்கள் இலங்கை வந்து, அடுத்த வருடத்துடன் 200 வருடங்கள் ஆகின்றன. இந்த நிலையில் மலையகத்திற்கான தனிப் பல்கலைகம் குறித்தும் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாடசாலை இடைவிலகல் வீதம் அதிகரித்து செல்லுமேயானால் இவ்வாறு உருவாக்கப்படும் பல்கலைகழகத்தில் பயில்வதற்கு மாணவர்கள் எங்கிருந்து பெறப்படுவார்கள் என்பதும் கேள்விக்குறியான விடயமாகிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right