சிறுவர்களை பாதுகாக்கும் முயற்சியில் நாம்...

By Nanthini

20 Nov, 2022 | 04:15 PM
image

சிறு பிராயம் என்பது ஒருவரது வாழ்க்கையில் மிகவும் தீர்க்கமான பகுதி. இவ்வுலகில் உள்ள அனைவரும் சிறு பருவ நிலைகளை கடப்பது, ஆரோக்கியமான நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதற்கே ஆகும். 

சிறு பிராயத்தில் ஏற்படும் எதிர்மறை ஆபத்துக்கள் ஒருவரின் வாழ்வை நிலைகுலைய வைப்பதோடு, அழிவுப் பாதைக்கும் வழிகோலுகிறது. 

சிறுவர்களுக்காக - சிறுவர்களோடு இணைந்து வேலை செய்யும் பல நிறுவனங்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்தவாறே காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் 1959ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டதும், 1989இல் சிறுவர் உரிமை சமவாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நவம்பர் 20ஆம் திகதியிலேயே. 

அன்று முதல் இன்று வரை சர்வதேச பங்குதாரர்களின் ஒருங்கிணைப்புடன் சிறுவர்களை வலுப்படுத்தும் நோக்கில் அனைத்துலக சிறுவர்கள் தினம் நவம்பர் மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. 

எனினும், சில நாடுகளில் சட்ட வரையறைகளுக்கு அமைய, தேசிய சிறுவர் தினம் மாறுபடுகின்றது. உதாரணமாக, இலங்கையில் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறிருக்க UNICEF இவ்வருடத்துக்கான கருப்பொருளாக “ஒவ்வொரு சிறாரையும் உள்ளடக்குதல்" என அறிவித்துள்ளது. இது சிறுவர்களுக்கான வளமான எதிர்காலம் மற்றும் பாகுபாடற்ற உலகை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 

சிறுவர்களுடன் நேரடியாக தொடர்பிலிருக்கும் பெற்றோர், ஆசிரியர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், இளைஞர் யுவதிகள் போன்றோரின் கடமைகளை இந்நாள் சுட்டிக்காட்டுகின்றது. இப்பொறுப்பில் இருப்பவர்கள் தமது கடமைகளை சரிவர செய்ய தவறும் பட்சத்தில் சிறுவர்களுக்கான ஆபத்துக்கள் எல்லை மீறுகின்றன. 

இலங்கையில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரியாக 40 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப் பெறுகின்றன. 

உலக வரைபடத்தில் கடுகளவு இருக்கும் நாட்டிலேயே நாளொன்றுக்கு 40 முறைப்பாடுகள் என்றால், ஏனைய நாடுகளில் சிறுவர்களின் நிலையை பற்றி சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் அளவிட முடியாதவை. சிறுவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையை கவனத்திற்கொண்டு அவர்களுக்கான வரைவிலக்கணம் உருவாக்கப்பட்டுள்ளது. 

அது '18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் சிறுவரே' என்பதாகும். 

அதனால் 18 வயது வரைக்கும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அனைத்து மட்டத்தினரதும் தலையாய கடமையாகும். இதை பற்றியே சிறுவர் உரிமை சாசனத்தின் 43 தொடக்கம் 54 வரையான உறுப்புரைகள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் சமூகத்தில் சிறுவர்களை சார்ந்து காணப்படும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பாக பீஸ் திகழ்கின்றது.

'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' பீஸ் அமைப்பானது (PEaCE/ ECPAT Sri Lanka) சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டல்களை இல்லாதொழித்தலை தன் பிரதான வேலைத்திட்ட தொனிப்பொருளாக கொண்டுள்ளது. 

சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கடத்தல், சிறுவர் ஆபாச வெளியீடு, தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறையில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்துதல், நேரலை ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துதல், சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்தல் மற்றும் பால்ய அல்லது கட்டாய விவாகம் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சிறார்களை அந்நிலையில் இருந்து மீட்டெடுத்தல், அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல் மற்றும் சமூகமயமாக்கத்துக்காக விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. 

இவற்றை நடைமுறைப்படுத்த பீஸ் அமைப்பு தேசிய மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் உதவியுடன் பல செயற்திட்டங்களை அமுல்படுத்திக்கொண்டு வருகின்றது. 

இச்சேவையின் மூலம் பல இடங்களில் உள்ள சிறுவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், சிறுவர்களோடு அல்லது சிறுவர்களுடன் இணைந்து வேலை செய்யும் அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளின் ஆற்றலை வலுப்படுத்தவும் பீஸ் அமைப்பு பங்களிப்பு செய்துள்ளது. 

1991 முதல் சிறுவர்களின் பாதுகாப்பு மட்டத்தில் காணப்படும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், இளைஞர், யுவதிகள் சமூக தலைவர்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள், அரச சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்கள், சுற்றுலாத்துறை நிறுவனங்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியுள்ளது. இதன் மூலம் பல மைல்கற்கள் எட்டப்பட்டன.

இலங்கை 1991இல் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமை சமவாயத்தில் கைச்சாத்திட்டது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பீஸ் அமைப்பினால் செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன், 1994இல் பீஸ் அமைப்பினால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகம் நிறுவுவதற்கு பரிந்துரை விடுக்கப்பட்டது. 

1995இல் பீஸ் அமைப்பு குரல் எழுப்பியதன் முயற்சியால் இலங்கையின் தண்டனை சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

1997 முதல் 1998 வரையான காலப்பகுதியில் சிறுவர் தடுப்பு ஜனாதிபதி பணிக்குழுவோடு இணைந்து தேசிய சிறுவர் அதிகார சபை (NCPA) நிறுவுவதற்கு அத்திவாரமாக இருந்தது. 2006இல் சுற்றுலாத்துறையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை இல்லாதொழித்தலுக்காக பீஸ் அமைப்பு இரண்டு வருட தேசிய செயற்திட்டத்தில் இணைந்து செயல்பட்டது. 

2010ஆம் ஆண்டில் நேரலையில் இடம்பெறும் சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக 970 ஆபாச வலைப்பக்கங்களை முடக்குவதற்கு தலையீடு செய்தது. 

2017இல் சுற்றுலாத்துறையில் இடம்பெறும் சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு அதில் உள்ள வணிக பங்குதாரர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு பொறுப்புடைமையை உறுதிப்படுத்தும் தேசியளவிலான ஆலோசனை அரங்கொன்று ஏற்பாடு செய்தது. 

இதை தொடர்ந்து 2018 முதல் 2019 வரையான காலப்பகுதியில் நேரலையில் சிறுவர்களுக்கு ஏற்படும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலை இல்லாதொழிப்பதற்கு மகளிர் சிறுவர்கள் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சோடு இணைந்து தேசிய செயற்திட்டம் ஒன்றை உருவாக்கியது. அதுமட்டுமன்றி, 2022ஆம் ஆண்டில் தன்னார்வ சுற்றுலா பயணத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய ஆலோசனை அரங்கொன்றை நடாத்தியது.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இலங்கை முழுவதிலும் நடத்தியுள்ளது. குறிப்பாக, சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பல்வேறுபட்ட தரப்பினருக்கு நடத்தியது. விழிப்புணர்வின் பின்னர் பல சிறுவர்கள் தமது வலுவிழந்த நிலைமையை உணர்ந்து பீஸ் அமைப்பின் ஆதரவை நாடியுள்ளனர். அவர்களை உரிய பொறுப்பான அதிகாரிகளோடு அல்லது நிறுவனங்களோடு இணைந்து அவர்களை முறையாக கண்காணித்தது. 

இதை தவிர சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பல பயிற்சி நிகழ்வுகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி நிகழ்வுகளை நடத்திக்கொண்டு வருகின்றது.

இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்தவர்கள் பலர். அதுமட்டுமன்றி, வெளிப்படுத்தப்படாத பல விடயங்களை பீஸ் அமைப்பின் ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. 

குறிப்பாக, ஆண்பிள்ளைகளுக்கு ஏற்படும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் இலங்கையின் சட்டத்தில் காணப்படும் இடைவெளிகளை பற்றிய பகுப்பாய்வு என்பன உள்ளடங்கும். 

பல சிறுவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பீஸ் அமைப்பின் பங்களிப்பும் இன்றியமையாதது.

ஒவ்வொரு சிறாரின் உரிமைகளை பாதுகாத்து, மேம்படுத்தி, உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பான சூழலொன்றை உருவாக்கிக் கொடுப்பதே பீஸ் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். இப்பயணம் தற்காலத்தில் மேலும் வேகமாகியுள்ளது. ஏனெனில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்களும் அச்சுறுத்தல்களும் சடுதியாக அதிகரித்துள்ளன. 

ஆபத்துகளால் ஆட்கொள்ளப்பட்டு அவற்றுக்கு பழக்கப்பட்டு அவற்றில் இருந்து மீண்டு வர முடியாமல் பல சிறார்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. அதனால் சிறுவர்களை பாதுகாக்க எந்நேரமும் எப்பொழுதும் விழிப்பாக இருப்போம்.

- விவேதா குணரெட்னம்,

திட்ட அலுவலர் - 'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும் அமைப்பு' (PEaCE/ ECPAT Sri Lanka)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right