ரூபேர்ட் மர்டொக்;: அரசியலை ஆட்டிப்படைக்கும் கோடீஸ்வர ஊடக வர்த்தகர் அடுத்த இலக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவியா?

By Digital Desk 2

20 Nov, 2022 | 04:38 PM
image

(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)

சமகால உலக அரசியலில் சுவாரஷ்யங்களுக்கு குறைவில்லை. கடந்த வார சுவாரஷ்யம் டொனல்ட் ட்ரம்ப். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் அவருக்குள்ள நாட்டத்தை அறிவித்தார். அது தான் சுவாரஷ்யமா? 

ட்ரம்ப் என்றாலே முரண்களின் மூட்டை அல்லவா? எதைச் சொல்வார், எதைச் செய்வாரென அனுமானிப்பது கடினம். சுவாரஷ்யம் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவது அல்ல. ஊடகக் கம்பனிகளின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் ரூபேர்ட் மர்டொக், இடக்கையால் ட்ரம்ப்பை புறந்தள்ளியிருப்பதான்.

ரூபேர்ட் மர்டொக், அவுஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்கர். உலக நாடுகளில் எந்தெந்த பத்திரிகைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் பிரபலமாக இருக்கின்றனவோ, அத்தகைய ஊடக நிறுவனங்களின் சொந்தக்காரர்.

பிரித்தானியாவில் த சன், த ரைம்ஸ் ஆகிய நிறுவனங்களும், அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், நியூயோர்க் போஸ்ட். அவுஸ்திரேலியாவில் ஸ்கை நியூஸ் அவுஸ்திரேலியா, ஆகியன அவருக்குச் சொந்தமானவை.  உலகின் எந்த மூலையிலும், ஏதோவொரு ஊடகத்தின் வடிவில் செல்வாக்கு செலுத்தக்கூடிய வகையில் ரூபேர்ட் மர்டொக்கின் ஊடக சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.

எந்நாட்டில் எவர் அரியணை ஏற வேண்டும், எவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதை எல்லாம் ருபெர்ட் மர்டொக்கின் பத்திரிகைகள் தான் தீர்மானிக்கும். ஒருவரை அரச அதிகாரத்தின் உச்சத்தில் கொண்டு வைக்க வேண்டுமாயின், அந்தப் பத்திரிகைகள் ஆதரவாக செய்தி எழுதும். ஆசிரியர் தலையங்கம் வரையும். 

ஓரங்கட்ட வேண்டுமெனத் தீர்மானித்தால் போதும். ஊடகங்கள் வாயிலாக அவரது பிம்பம் ஒட்டுமொத்தமாக இல்லாதொழிக்கப்படும். டொனால்ட் ட்ரம்பிற்கும் அது தான் நடந்தது.   பொதுவாகவே பழமைவாத (கன்சர்வேட்டிவ்) சிந்தனையுள்ள அரசியல்வாதிகளை ஆதரிக்கும் ரூபேர்ட் மர்டொக்;கின் ஊடகங்கள், ஆரம்பத்தில் ட்ரம்பின் புகழ்பாடியதில் வியப்பில்லை. கடந்த வாரம், அந்தப் பத்திரிகைகளின் போக்கு தலைகீழாக மாறியது.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட பின்னடைவை விமர்சித்தன.  வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை, ‘மிகப்பெரிய தோல்வியாளர்’ என்று ட்ரம்ப்பை வர்ணித்தது. நியூயோர்க் போஸ்ட் பத்திரிகையோ, “ர்ரஅpவல னுரஅpவல” என்ற சிறுவர் பாடலை வைத்து பயங்கரமாக கேலி செய்தது. அந்தப் பத்திரிகையில் “வுசரஅpவல னுரஅpவல hயன ய பசநயவ கயடட” என்று எழுதியிருந்தது.

ஏன் இந்த சடுதியான மாற்றம்? ரூபேர்ட் மர்டொக்; முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை திடீரென வெறுப்பது ஏன்? என்ற கேள்விகள்.

ரூபேர்ட் மர்டொக்;கின் பொறுப்பில் இயங்கும் இன்னொரு வலுவான ஊடகமான பொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்த்தவர்களுக்கு பதில் கிடைத்தது. இடைக்கால தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியாளர் யாரென்றால், அது ப்ளோரிடா மாநிலத்தின் ஆளுனரான டொன் டி-சான்டிஸ் தானென பொக்ஸ்நியூஸ் வர்ணனை செய்தது.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வேண்டாம், ரொன் டி-சான்டிஸ் தான் பொருத்தமானவர் என்று மர்டொக் நினைப்பதை அவரது ஊடகங்கள் பறைசாற்றின. மர்டொக் நினைத்தால் போதுமா? மக்கள் வாக்களிக்க வேண்டாமா? என்று எவரும் கேட்கலாம்.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளின் வரலாற்றை அறிந்தவர்கள் கேட்க மாட்டார்கள். அவ்வளவு பெரிய ‘கிங்’ மேக்கராக ரூபேர்ட் மர்டொக்; திகழ்ந்திருக்கிறார். அவரால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவர். பார்க்க சாதுவாக இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். கேட்டவருக்கு வாரி வாரி கொடுப்பார். தமது பலம் அறிந்து தமது காலடியில் தவம் கிடக்கும் அரசியல்வாதிகள் பற்றித்தெரியும். எனினும், அரசியல்வாதிகளை நம்பமாட்டார். 

இந்த மனிதரால் கிரீடங்கள் இழந்த அரசியல்வாதிகளின் பட்டியல் நீளமானது. 1970களில் அவுஸ்திரேலியப் பிரதமராக இருந்த கொவ் விட்லம்மின் கதையை உதாரணங்காட்டலாம். ஒருமுறை கென்பரா நகரில் உள்ள செம்மறியாட்டுப் பண்ணைக்கு தொழிற்கட்சித் தலைவரான விட்லம் விருந்தாளியாக சென்றார். இவரை இடது-சார்புடைய பத்திரிகையொன்று சிலாகித்து எழுதியது.

அவர் மர்டொக்கை புறக்கணித்தார். பேசுவதை நிறுத்தினார். இருவருக்கும் இடையிலான உறவுகளில் பகைமையின் கறை படிந்தது. மர்டொக் சுரங்க அகழ்வு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்டபோது, விட்லம் அனுமதி மறுத்தார்.

கொஞ்சநாளில், மர்டொக்கின் கோபம் பத்திரிகைச் செய்திகளாக பிரதிபலிக்கத் தொடங்கியது. விட்லம் பற்றி நிதிமோசடிக் குற்றச்சாட்டுக்கள். பாலியல் விவகாரங்கள் என்று பலதரப்பட்ட செய்திகள். பத்து மாதங்களில் அவுஸ்திரேலியாவின் ஆளுனர்-நாயகம் விட்லமை பதவி நீக்கம் செய்தார்.

விட்லமுக்கும், மர்டொக்கிற்கும் இடையிலான பனிப்போர் பற்றிய ரகசியங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. பல பத்திரிகை நிறுவனங்களை நடத்தும் கோடீஸ்வரர். பத்திரிகைகளில் என்ன வெளியாக வேண்டும் எனத் தீர்மானிப்பவரும் கூட.

இன்று இது தான் என்று பத்திரிகை ஆசிரியர்களுக்கு கட்டளையிடுவார். சில கட்டளைகள் அந்தரங்கமானவையாக இருக்கும். விட்லம் விவகாரத்தில் மர்டொக் விடுத்த கட்டளை ‘முடைட றூவைடயஅ”. அதாவது விட்லமை இல்லாதொழியுங்கள் என்பதாகும்.

இதுவே பத்து மாதங்களுக்குள் விட்லம் பதவியை இழக்கக் காரணமாக இருந்தது. விட்லம் மாத்திரமல்ல. அவுஸ்திரேலியாவின் அரசியல் வரலாற்றில் பலரை மண்கவ்வச் செய்த பெருமை மர்டொக்கிற்கு உண்டென்பது பரகசியம். 

சமீபத்தைய வரலாற்றில் மெல்க்கம் டேர்ன்புல், ஜோன் மேஜர் ஆகியோரையும் அவர் பதவி விலக வைத்தார் என்பதை மர்டொக்கின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய மைக்கல் வூல்வ் விபரிப்பார். 

பிரித்தானியாவிலும் ஓர் உதாரணம் உண்டு. 1979ஆம் ஆண்டு தொடக்கம் மர்டொக்கின் ஆதரவுடன் பிரித்தனை ஆட்சி செய்த பழமைவாத (கன்சர்வேட்டிவ் கட்சி) 1990களின் மர்டொக்கின் மஞ்சள் பத்திரிகைகள் திடீரென தொழிற்கட்சியின் தலைவர் ரொனி ப்ளேயரின் புகழ்பாடத் தொடங்கின. 1997இல் ப்ளேயர் வெற்றி பெற்றார். அதன் பின்னர் மர்டொக்கிற்கு விசுவாசமாக இருந்தார்.

இவர் தான் அரசாள வேண்டும் என்று மர்டொக் எப்படித் தீர்மானிக்கிறாரென யாரும் கேட்கலாம். இந்த மனிதர் உணர்ச்சி வசப்படுபவர் அல்லர். கோபத்தில் திடீரென முடிவெடுப்பவரும் அல்லர். மர்டொக்கைப் பொறுத்தவரையில், அரசியலில் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டும், பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களின் வியாபாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

ஒரு மனிதரின் தேவை நாட்டுக்குத் தேவையில்லை என்று நினைத்தால், தமது ஊடகங்கள் வாயிலாக அவருக்கு எதிரான கருத்தை விதைத்து, மக்களின் சிந்தனையை தாம் விரும்பும் திசையில் செல்ல வைப்பார். ஆனால், ஒருவர் பற்றிய கருத்து மக்கள் மத்தியில் வலுவாக இருக்கிறதென்றால், அந்தக் கருத்தை மாற்றுவது தமது பிஸ்னஸிற்கு நட்டம் தருவது என்பதையும் மர்டொக் அறிவார். 

ஒருவர் வெல்லக்கூடியவராக இருக்கிறார் என்று மக்கள் உறுதியாக நம்புவார்களாயின், அந்தக் கருத்தை மாற்றக்கூடியவாறு தமது ஊடகங்களை வழிநடத்தினால், தமது பத்திரிகைகளில் இருந்து நேயர்களும், தமது தொலைக்காட்சிகளில் இருந்து இரசிகர்களும் விலகி விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

கோடீஸ்வர வர்த்தகரான மர்டொக் என்ற மனிதருக்கு தமது வணிகத்தைப் பாதுகாப்பது முக்கியமானது. அரசியல், ஊடகம், வணிகம் என்ற மூன்றும் பின்னிப்பிணைந்து, தமக்குள் சமரசம் செய்து கொள்ளும் நடைமுறையின் மிகச்சிறந்த உதாரணம் ரூபேர்ட் மர்டொக் தான்.

ஆனால், உலகம் முழுவதும் ரூபேர்ட் மர்டொக்;கின் இரத்த உறவில்லாத வாரிசுகள் இருக்கிறார்கள். இந்த வாரிசுகள் அரசியலைத் தீர்மானிக்கிறார்கள். அதன்மூலம் தமது இலாபத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல. மக்கள் தான் பாவம். ஊடகம் என்பது ஜனநாயகத்தின் காவல்நாய்;. தகவல்கள் மூலம் சமுதாயத்தை அறிவூட்டி ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் நான்காவது தூண் என்றெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்குள் சுதந்திர ஊடகம் என்பதெல்லாம், எல்லாமே முழுமை பெற்றிருக்கும் புதிய உலகின் கற்பனைத் தீவு பற்றி 1516இல் சேர் தோமஸ் மோர் எழுதிய 'ருவழியை’ என்ற புத்தகத்தில் மாத்திரமே சாத்தியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right