இந்தியாவைக் கட்டுப்படுத்துகிறதா சீனா ?

By Digital Desk 2

20 Nov, 2022 | 10:23 PM
image

(ஹரிகரன்)

அமெரிக்காவின் இந்தோ- பசுபிக்கும், இந்தியாவின் இந்தியப் பெருங்கடலும் இப்போது, சீனாவின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து நிற்கின்றன.

தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் முயற்சித்து வந்த நிலையில், சீனா தனது கடல் ஆதிக்கத்தை இந்தியப் பெருங்கடலை நோக்கி விரிவுபடுத்தியிருக்கிறது.

இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக பேண வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா பொதுச்சபையில், 1771ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு, முன்னெப்போதும் இல்லாதளவுக்கு, ஆதிக்கப் போட்டி இங்கு உருவாகியிருக்கிறது.

சீனாவுக்கும், அமெரிக்க- இந்தியக் கூட்டுக்கும் இடையிலேயே, இந்தப் போட்டிச் சூழல் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலை இந்தியா தனது ஆதிக்கத்துக்குட்பட்ட பகுதியாக கருதிய காலம் இப்போது மாறி விட்டது.

இந்தியாவின் பொருளாதாரக் கடல் எல்லையைத் தொட்டபடி சீனப் போர்க்கலங்கள், நடமாடத் தொடங்கி விட்டன. அவ்வப்போது, அவை இந்தியாவின் பொருளாதாரக் கடல் எல்லைக்குள்ளேயும் வந்து செல்வதாக இந்தியக் கடற்படையினர் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம், அம்பாந்தோட்டை துறைமுகத்தில், ‘யுவான் வாங்- 5’ என்ற செய்மதி, மற்றும் ஏவுகணைகளின் வழித்தடத்தை கண்காணிக்கும் ஆய்வுக் கப்பலை சீனா, இந்தியாவுடன் மல்லுக்கட்டி தரித்து நிறுத்தியதானது, இந்தப் போட்டியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து, இலங்கையைப் பணிய வைத்து அந்தக் கப்பல் அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது.

இந்தியா எதிர்ப்புத் தெரிவித்த போது, தாங்கள் அந்தக் கப்பலினால் ஏற்படக் கூடிய ஆபத்துக் குறித்த ஆதாரங்களைக் கோரியதாகவும், இந்தியா சமர்ப்பிக்காத நிலையில், கப்பலை அனுமதித்ததாகவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார்.

ஆனால், இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையும் போதே, அதன் கண்காணிப்புக் கருவிகளை நிறுத்தி வைக்குமாறும், அம்பாந்தோட்டையில் தரித்து நிற்கும் போது, எந்தக் கண்காணிப்பு கருவிகளையும் செயற்படுத்தக் கூடாது என்றும், இலங்கை அரசாங்கம் நிபந்தனை விதித்திருந்தது.

குறித்த ஆய்வுக் கப்பலினால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றால், ஏன் இந்த கருவிகளை செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை அரசாங்கம் நிபந்தனை விதித்தது?

இந்தக் கப்பலின் வருகைக்குப் பின்னர், தனது பாதுகாப்பு குறித்து இந்தியா அதிகம் கரிசனை கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இலங்கையை முழுமையாக நம்ப முடியாது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறது.

அதேவேளை, இலங்கையில் தன் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் சீனா, இப்போது. இந்தியப் பெருங்கடலில், நேரடியாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் விட ஆரம்பித்திருக்கிறது.

கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில், இந்தோனேசியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்துக்கு மேலாக, விமானங்களின் பயணங்களை தவிர்க்குமாறு இந்தியா சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது.

ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து, அக்னி எவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை இந்தியா சோதனை செய்வதற்காகவே, இந்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டது.

இதனை அறிந்து கொண்ட சீனா, ‘யுவான் வாங் -6’ என்ற செய்மதி, மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பலை இந்தோனேஷியாவின் பாலி தீவு கடற்பகுதிக்கு அனுப்பியிருந்தது.

இதனால் திட்டமிட்டபடி இந்தியா அந்த ஏவுகணைச் சோதனையை நடத்தவில்லை. சீனாவின் ஆய்வுக் கப்பல் பரிசோதிக்கப்படும் ஏவுகணையின் திறன், செல்லும் தூரம் போன்றவற்றைத் துல்லியமாக கணிப்பிடும் ஆபத்து இருந்தது.

சோதனை நடத்தப்பட்டிருந்தால், இந்தியாவின் ஏவுகணை இரகசியங்கள் சீனாவின் விரல் நுனிக்குச் சென்றிருக்கும். இந்த நிலையில், 23ஆம், 24ஆம் திகதிகளில் குறித்த பிரதேசத்தில் விமானங்களின் பயணத்தை தவிர்க்குமாறு, இந்தியா மீண்டும் அறிவித்திருக்கிறது.

ஏவுகணைச் சோதனையை நடத்துவதற்காகவே இந்தியா இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ள நிலையில், அம்பாந்தோட்டையில் தரித்துச் சென்ற ‘யுவான் வாங் -5’ ஆய்வுக் கப்பலையும், இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது சீனா.

இப்போது சீனாவின் இரண்டு ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பல்கள், இந்தியப் பெருங்கடலில் தரித்து நிற்கின்றன. இவை, 110 நாள் பயணமாக புறப்பட்டவை. இப்போது தான் மூன்று வாரங்கள் கடந்துள்ளன.

எனவே, நீண்ட நாட்கள் தரித்து நின்று, அவை கண்காணிப்பை மேற்கொள்ளக் கூடும். இது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. சீனாவின் கண்காணிப்புக் கப்பல்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டே, ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.

அது எப்படிச் சாத்தியப்படும் என்பது தான் முக்கியமான கேள்வி. இந்தியாவின் பொருளாதார கடல் எல்லையான 200 கடல் மைலுக்கு அப்பால் நின்று கொண்டே, இந்தியாவின் கரைகளை கண்காணிக்க கூடிய திறன் சீன ஆய்வுக் கப்பல்களுக்கு உள்ளது.

எனவே, இனிமேலும் ஏவுகணைச் சோதனைகளை சீனாவின் கண்களில் இருந்து மறைத்து நடத்த முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம்.

நிலவுக்கு அஞ்சி பிற தேசம் போக முடியாது என்பது போல, சீனாவின் கண்காணிப்புக்கு அஞ்சினால் இந்தியா ஏவுகணைச் சோதனைகளையே நடத்த முடியாமல் போகலாம்.

வடகொரியாவைச் சுற்றி அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என்று பல நாடுகள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டுத் தான், வடகொரியா, தொடர்ச்சியாக ஏவுகணைச் சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

வடகொரியா சோதனை ரீதியாகவே இத்தனை ஏவுகணைகளை செலுத்துகிறது என்றால், அதன் மொத்த ஏவுகணைத் திறன் எவ்வளவு என்று திகைக்கும் நிலை உள்ளது.

இது ஒரு வகையில் கண்காணிக்கும் நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தும் விடயமும் கூட. ஆனால் இந்தியா அவ்வாறு பீதியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை.

அதேவேளை தனது ஆயுத வல்லமை பற்றிய இரகசியங்கள் சீனாவிடம் சிக்கி விடக் கூடாது என்று எதிர்பார்க்கிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு இப்போது பலம் வாய்ந்த போட்டி நாடாக இருப்பது சீனா தான்.  பாகிஸ்தானை எதிரியாக குறிப்பிட்டாலும் சீனாவை அவ்வாறு இந்தியா குறிப்பிடுவதில்லை.

ஆனால் சீனாவுடன் கொண்டுள்ள நீண்ட தரை வழி எல்லையும் அது தொடர்பாக நீடிக்கும் சர்ச்சைகளும், இந்தியாவை மிஞ்சிய படைபலமும், சீனாவின் ஆதிக்க கொள்கையும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

இந்த நிலையில், தமது பாதுகாப்பு பற்றிய குறை மதிப்பீட்டை செய்து விடக் கூடாது என்பதில் இந்தியா கரிசனை கொண்டிருப்பதில் நியாயம் உள்ளது. அதனால் தான் சீன கண்காணிப்புக் கப்பல்களின் கண்களில் சிக்கிக் கொள்ளும் வகையில் தனது ஏவுகணை சோதனையை நடத்துவதற்கு இந்தியா தயங்குகிறது.

இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பல்கள் தரித்து நிற்கும் வரை, இந்தியா தனது சோதனைகளை நீண்டகாலத்துக்கு தள்ளிப் போட முடிவெடுத்தால், அது இந்தியாவின் பலவீனமாகவே கருதப்படும். சீனா தொலைவில் நின்றே இந்தியாவின் சில தொழில்நுட்பத் திறன்களை மறைமுகமாக கட்டுப்படுத்த முனைகிறது.

தொழில்நுட்ப ரீதியாக இந்தியா இந்த சவாலை எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கப் போகிறது என்பது அடுத்த சில நாட்களிலோ வாரங்களிலோ தெரியவரும்.

அதேவேளை, இந்தியாவை ஒரு மூலோபாயப் போட்டியாளராக சீனா கருதவில்லை என்று, பங்களாதேஷில் உள்ள சீனத் தூதுவர் லீ ஜிம்மிங் அண்மையில், கூறியிருந்தார்.

அவ்வாறு போட்டியாளராக இந்தியாவைக் கருதவில்லை என்றால், சீனா ஏன் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவைச் சுற்றி வியூகம் வகுக்கிறது? என்பது புரியாமல் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right