மேற்குலகின் பதில் என்ன?

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 02:40 PM
image

(கார்வண்ணன்)

பிரித்தானிய பாராளுமன்றத்தில் அண்மையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் ஒரு விவாதம் இடம்பெற்றிருந்தது.

பின்வரிசை உறுப்பினர்களின் வர்த்தக குழுவின் ஏற்பாட்டில் நடந்த அந்த விவாதத்தின் போது – இலங்கை தொடர்பாக கடுமையான முடிவுகளை பிரித்தானியா எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர்கள் பிரித்தானிய அரசாங்கம் இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறையை - பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருந்தனர்.

போர்க்குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக மக்னிட்ஸ்கி (Magnitsky) பாணியிலான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

ஜெனரல் சவேந்திர சில்வா, ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்த தடைகளை விதிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டோனா கோரிக்கை விடுத்திருந்தார்.

ரிஷி சுனக்

அடுத்து, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் போதாது என்றும், இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், போர்க்குற்றங்களை உண்மையாக விசாரிக்கவும், குற்றவியல் பொறுப்புக்கூறலைத் தொடரவும் ஒரு பொறிமுறையை வழங்குவதற்குத் தவறியுள்ளதைக் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பேர்ண்,

போர்க் குற்றங்களைச் செய்தவர்கள், அவர்களைத் தண்டிக்க அரசு விரும்பாததால் அல்லது அவர்களைத் தண்டிக்க முடியாத காரணத்தால், விலக்குரிமையை அனுபவிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இலங்கையின் வறுமை இயற்கையான விளைவு அல்ல, தீவின் அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மெக்டோனல், குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் ஊழலை வேரறுப்பதற்கும், பகுத்தறிவற்ற பாரிய இராணுவ செலவினங்களைக் குறைப்பதற்கும், கடுமையான முயற்சிகளுடன் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து எந்தவொரு பிணையெடுப்பையும் உறுதி செய்வதற்கான வழியை பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தெரேசா வில்லியர்ஸ், வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரராக பிரித்தானிய அரசாங்கம் இருக்கும் நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவிக்கு நிபந்தனைகளை முன்மொழிய வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மற்றும் இராணுவத்திற்கான அதிக செலவினங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மீட்டெடுக்கும் திட்டத்துடன் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு இந்த விவாதம் மகிழ்ச்சி அளிக்க கூடிய ஒன்று அல்ல.

போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச குற்றவியல் விசாரணை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு கட்டுப்பாடு, போர்க்குற்றங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை போன்ற விடயங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான விடயங்கள் அல்ல.

ஜோன் மெக்டோனல்

மற்றைய விடயங்களை ஒதுக்கி வைத்து விட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற விடயம், சிக்கலானது.

பிரித்தானியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கிறது. அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார்.

அவர் முன்னர், லிஸ் ட்ரஸ்சுடன் கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்த போது, தமிழ் கொன்சர்வேட்டிவ்களைச் சந்தித்திருந்தார்.

அப்போது அவர்களிடம், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது போன்ற விடயங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் பிரதமராகியிருக்கும் சூழலில், சர்வதேச அரங்கில் தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி உள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கையை வழிக்கு கொண்டு வருவதற்காக தடைகளை விதித்தல், பொருளாதார கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்தல் போன்ற ஆயுதங்களை அவர் கையில் எடுக்க கூடும்.

ஆனால், பிரித்தானிய பாராளுமன்ற பொதுச்சபையில், நடத்தப்பட்ட விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய இராஜாங்கத் திணைக்களத்தின், வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பாராளுமன்ற துணைச் செயலர், லியோ டோச்சர்டி, சர்வதேச நாணய நிதியத்தினால், பொருளாதாரக் கொள்கையுடன் இணைந்த நிபந்தனைகளை மட்டுமே விதிக்க முடியும் என்றும், அரசியல் அல்லது மனித உரிமைகள் தொடர்பான நிபந்தனைகள் விதிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்குவதற்கு மனித உரிமைகள் அல்லது அரசியல் ரீதியான நிபந்தனைகளை விதிக்க முடியாது என்பதை அவர் குறிப்பிட்டிருப்பதானது, இந்த விவகாரங்களில் பிரித்தானியா தலையிடாது என்பதையே குறிப்பிடுகிறது. இது இலங்கைக்கு ஆறுதல் அளிக்க கூடிய விடயம்.

ஆனால், நிச்சயமாக மனித உரிமைகளின் முன்னேற்றம் பொருளாதார முன்னேற்றத்துடன் இணைந்தாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,  நிலைமைகளை ஆராய்ந்து மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவோம் என்று, லியோ டோச்சர்டி, உறுதி அளித்திருக்கிறார்.

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவோம் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே பிரித்தானியா இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஜெனிவாவில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது.

ஆனால் அது போதாது என்று ஆரம்பத்திலேயே தமிழர் தரப்பினால் வலியுறுத்தப்பட்டது. அதற்கு அப்பால் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.

லியோ டோச்சர்டி

அப்போதெல்லாம் அதனை யாரும் கருத்தில் கொள்ளவில்லை. இப்போது, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களே,  ஜெனிவா தீர்மானங்கள் போதாது என்றும், அதற்கு அப்பால் சென்று பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக கொண்டு செல்வதற்கான அழுத்தங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.

அதற்கு பிரித்தானிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது, எவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கப் போகிறது என்படுத்த அடுத்தடுத்த கேள்விகளாக உள்ளன.

பொருளாதார ரீதியாக தடைகளை விதிப்பது, அதற்கான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அவ்வாறான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துடன், குற்றமிழைத்தவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு துணை நிற்பவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மட்டும், இலங்கையை மீட்பதற்குப் போதுமானதல்ல. எனவே சர்வதேச நாணய நிதியம் மனித உரிமைகள் தொடர்பான நிபந்தனைகளை முன்வைக்க முடியாது என்பதால், அதிலிருந்து இலங்கை தப்பித்து விட முடியும் என்று அர்த்தமல்ல.

அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அமெரிக்க தூதுவர், அமெரிக்காவின் உதவிகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தினுள் ஆழமான பல விடயங்கள் பொதிந்து கிடந்தன.

தெரேசா வில்லியர்ஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கும், தனிப்பட்ட ரீதியாகவும் அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்ற போதும், கடுமையான முடிவுகளை இலங்கை எடுக்க வேண்டும் என்ற அமெரிக்க தூதுவரின் கருத்து, பொருளாதார ரீதியான தீர்மானங்களுக்கும் அப்பால் அமெரிக்கா நிபந்தனைகளை விதிக்க கூடும் என்பதையே வெளிப்படுத்துகிறது.

வெளிநாட்டு நிதியுதவிகள், கடன்களை விட முதலீடுகளையும் அதிகளவில் இலங்கை எதிர்பார்க்கிறது.

ஆண்டுக்கு 3 பில்லியன் வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

இவ்வாறான நிலையில், பிரித்தானியா,அமெரிக்கா போன்ற நாடுகள், வெளிநாட்டு முதலீட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தினால் ஆச்சரியப்பட முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22