பொருந்தாத நியாயம்

By Digital Desk 2

20 Nov, 2022 | 02:40 PM
image

(சத்ரியன்)

 “இந்தோ- பசுபிக்கில் சுதந்திரமான, வெளிப்படையான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் தான் ஜனாதிபதி ரணிலும் அந்த விடயத்தினை வலியுறுத்தி இருக்கின்றார்”

“ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவினத்தில், 11 சதவீதம் தான் கடற்படைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.  நாட்டின் பொருளாதார ஏற்றுமதி இடம்பெறும் கடல்வழிப் பாதையை பாதுகாக்கவே பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்படுகிறது என்றால், கடற்படைக்குத் தான் அதிக நிதியை ஜனாதிபதி ஒதுக்கியிருக்க வேண்டும்”

வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியிருந்தார்.

அதன் போது அவர், அதிக போட்டி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நாடு எதிர்நோக்கியுள்ளதால், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று, வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவினம்- கடந்த 4 தசாப்தங்களாக, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருக்கிறது. 

விதிவிலக்காக ஓரிரு முறை அது குறைந்திருந்தாலும், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாக அதிகரித்திருக்கிறது.

இலங்கையின் பரப்பளவு, சனத்தொகை ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, இந்தப் பாதுகாப்பு ஒதுக்கீடு மிகஅதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு ஒதுக்கீடு, 500 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு என்பது, எப்போதும், நியாயப்படுத்த முடியாத ஒரு செயலாக இருந்தாலும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும், ஆட்சியாளர்களும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பது போன்ற காரணங்களை முன்வைத்து, அதனை நியாயப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.

போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்புச் செலவை அதிகரிக்கும் போது, பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படவில்லை, இன்னமும் அச்சுறுத்தல் உள்ளது, அதனை முழுமையாக முறியடிக்க வேண்டும் என்றே அவர்கள் கூறி வந்திருக்கின்றனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது வேறொரு காரணத்தை முன்வைத்திருக்கிறார். அவர் பயங்கரவாதம் பற்றியோ, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றியே வெளிப்படையாகப் பேசவில்லை.

பொருளாதாரத்துடன், பாதுகாப்பை இணைத்திருக்கிறார். பிராந்தியப் பாதுகாப்புடன் நாட்டின் பாதுகாப்பை இணைத்து நியாயப்படுத்தியிருக்கிறார்.

“நாம் பிறந்த உலகத்தில் இருந்து, இப்போது வேறுபட்டு வாழ்கிறோம். 

நாங்கள் பிறந்தபோது, இந்தியப் பெருங்கடலுக்கான சண்டை இல்லை. அப்போது யாரும் அதை விரும்பவில்லை. இன்று அப்படி இல்லை. 

நாம் உயிர்வாழ வேண்டுமானால், திறன்கள், பாதுகாப்பு திறன்கள், மூலோபாய ஆய்வுகள், அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம் இல்லாதவரை ஏற்றுமதி சார்ந்த தொழில்துறையை நாடு கொண்டிருக்க முடியாது.

பொருட்களை நகர்த்த முடியாவிட்டால், கடல்வழி பயண சுதந்திரம் தடைபட்டால், என்ன நடக்கும்?

2021ஆம் ஆண்டில், மக்கள் நாட்டிலிருந்து வெளியேற முடியாது மற்றும் பொருட்களை தரை வழியாகவோ கடல் வழியாகவோ கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்ட போது என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம்.” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது குரல் மாத்திரமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குரலும் கூட.

இந்தோ- பசுபிக்கில் சுதந்திரமான, வெளிப்படையான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காத்திரமான பங்கை வகிக்க வேண்டும் என்பதே, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கருத்தாகவும் இருந்து வருகிறது.

அதற்காகத் தான், இந்த நாடுகள் இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பதில், கவனம் செலுத்தி வருகின்றன.

அமெரிக்கா, இலங்கை கடற்படையைப் பலப்படுத்துவதற்காக கடந்த இரண்டு தசாப்தங்களில், மூன்று பாரிய போர்க் கப்பல்களை வழங்கியிருக்கிறது.

இந்தியா கொடையாகவும் கடனாகவும், 5 போர்க்கப்பல்களை வழங்கியிருக்கிறது.அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளும், இதே நோக்கத்தில் தான் ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தன. இவற்றுக்குப் போட்டியாகத் தான், சீனா போர்க்கப்பலை வழங்கியது.

இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான, வெளிப்படையான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்குத் தான், இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், இந்தியப் பெருங்கடலை,  பலம்வாய்ந்த சக்திகளின் விளையாட்டு மைதானமாக்க அனுமதிக்க கூடாது, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கூறிக் கொண்டே, இந்தப் பிராந்தியத்தில் தேவையற்ற சக்திகளை தலையீட்டை உருவாக்கிக் கொடுத்தது இலங்கை தான்.

இந்தியப் பெருங்கடலில் இந்திய- சீன ஆதிக்கப் போட்டிக்கு கணிசமான சூழலை உருவாக்கிக் கொடுத்தது இலங்கை அரசாங்கம் தான். அந்தப் போட்டி இன்று பிராந்தியத்தை அமைதியற்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கு மத்தியில், இலங்கை தனது படைகளைப் பலப்படுத்துவதற்கு, மேலதிக நிதி தேவைப்படுவதாக கூறியிருக்கிறார் ஜனாதிபதி.

நாட்டின் பாதுகாப்பே எதிர்காலம் என்றும் பாதுகாப்பு இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலமே இல்லை என்றும் அவர் படை அதிகாரிகளுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறார்.

பாதுகாப்பு மட்டும் இருந்தால் போதாது. அது பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாக இருக்கவும் கூடாது.  விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் விரலையே அகற்றும் நிலை தான் ஏற்படும்.

இலங்கையில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது.   இலங்கையின் பொருளாதாரம் மற்றும் திறன் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு, பொருளாதாரத்தை உறுதிப்படுத்தலும், சுதந்திரமாக ஏற்றுமதியை மேற்கொள்வதற்கும் அவசியம் என்றும் நியாயம் கூறப்படுகிறது.

சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கு கடற்படை தான் முக்கியம். ஆனால் இலங்கையின் படைபலத்தையும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியையும் எடுத்துப் பார்த்தால் அதற்கு நேர்மாறான நிலையே காணப்படும்.

பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதி 539 பில்லியன் ரூபாவாகும்.

இதில் இராணுவத்துக்கு 204.939 பில்லியன் ரூபாவும், கடற்படைக்கு  63.841 பில்லியன் ரூபாவும் விமானப்படைக்கு 46.882 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது. இதன்படி பார்த்தால், கடற்படையை விட இராணுவத்துக்கு மூன்று மடங்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

ஏற்றுமதி பொருளாதாரத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு சுதந்திரமான கடல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிக நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் மூன்றில் ஒரு பங்கைத் தான் கடற்படைக்கு ஒதுக்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவினத்தில், 11 சதவீதம் தான் கடற்படைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.  நாட்டின் பொருளாதார ஏற்றுமதி இடம்பெறும் கடல்வழிப் பாதையை பாதுகாக்கவே பாதுகாப்புச் செலவினம் அதிகரிக்கப்படுகிறது என்றால், கடற்படைக்குத் தான் அதிக நிதியை ஜனாதிபதி ஒதுக்கியிருக்க வேண்டும். மாறாக அவர், இராணுவத்துக்கே அதிகளவு நிதியை ஒதுக்கியிருக்கிறார். 

இராணுவம் நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை எந்த வகையில் பாதுகாக்கிறது என்பதற்கு அவர் தான் விடை கூற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right