உள்ளுராட்சி தேர்தல்:  சவால்களை எதிர்கொள்ளும் முஸ்லிம் கட்சிகள்

By Digital Desk 2

20 Nov, 2022 | 01:26 PM
image

(எம்.எஸ்.தீன்) 

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் நடாத்த இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அவர், இவ்வாறு மார்ச் மாதம் தேர்தலை நடத்தவுள்ளதாக தெரிவித்தாலும் ஆளுங்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். 

ஏனென்றால் பொதுஜன பெரமுன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மக்களை பல்வேறு அசௌகாரியங்களுக்கு உள்ளாக்கியுள்ளன. குறிப்பாக வாழ்க்கைச் செலவு உச்சத்தை அடைந்துள்ளது. மக்கள் போதிய வருமானமின்றி கஷ்டப்படுகின்றார்கள்.  இதனால் மக்கள் தற்போதைய ஆட்சியாளர்களை வெறுத்தவர்களாக, ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்கின்ற நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதனால் ஆளுந்தரப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை வெற்றி கொள்வது என்பது அவர்களுக்கு நிச்சயமாக சிரமமானதொரு காரியமாகவே அமையும் என்பதில் ஐயமுமில்லை. இதனால் உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் தவிசாளர் கருத்துக்களை தெரிவித்தாலும், ஆளுங்கட்சியினர் எப்படியும் தேர்தலை தள்ளிப் போடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதே யதார்த்தமானது.

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலைப் பொறுத்தவரை பேரினவாதக் கட்சிகள் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகள் என்று இருந்த போதிலும் அக்கட்சிகளுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் தமது கட்சியின் சார்பில் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் கட்சிகளுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இருபதாவது திருத்தச்சட்ட முதல் எல்லா வகையான திருத்தச் சட்டமூலங்களுக்கும் ஆதரவு அளித்தவர்கள் என்ற அடிப்படையிலும், நாட்டினுடைய பொருளாதார நிலைமைக்கு அவர்களும் காரணம் என்ற அடிப்படையிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெறுத்தவர்களாக இருக்கின்றார்கள்.

இதனால் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் தங்களது தொகுதியில் உள்ளுராட்சி மன்றங்களை தேர்தலை வெற்றி கொள்வது என்பதும் கூட கடின பணியாக அமையப் போகின்றது. ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம் ஹரிஸ், பைசால் காசிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியவர்கள் கட்சியினுடைய கட்டுப்பாட்டை மீறிச்செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள். 

இந்தப் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸினுடைய பேராளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோர் மன்னிப்புகோரிவிட்டார்கள் என்று கூறப்பட்டு மீண்டும் கட்சியில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கு பழைய பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் இன்னும் தமது மன்னிப்பு கோரிக்கையை முன் வைக்கவில்லை.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியது கட்சியினுடைய தலைவருடைய விருப்பத்தின் அடிப்படையில் என்பதே ஹரீஸின் நிலைப்பாடாகும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடக்குமாக இருந்தால் அந்தத் தேர்தலை எதிர்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் என்று தான் கூற வேண்டும். 

ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கு தடையாக செயல்படுவார்கள். 

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஒருவராக இருக்கின்றார். இவர் கட்சியில் இடைநிறுத்தப்பட்டதடை இன்னும் அமுலில் இருக்கின்றது. அவர் மன்னிப்பு கோராத நிலையில் கல்முனை மாநகர சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்துகின்றபோது அந்த வேட்பாளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் ஆதரவு அவசியமாகும். 

அவ்வாறில்லாமல் அவரை கட்சியிலிருந்து நீக்கி அந்த நிலையிலே கல்முனை மாநகர சபைக்கான தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ளுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸிற்கு பின்னடைவுகள் ஏற்படலாம். கல்முனைத் தொகுதியை பொறுத்தவரை ஹரீஸின் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கை குறைத்து மதிப்பிட முடியாது.

இதனால் கல்முனை தொகுதியிலும் காங்கிரஸ் இன்னும் தமது மக்கள் ஆதரவை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். கட்சியில் இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் காரணமாக மக்களின் செல்வாக்கை இழந்த நிலையில் இருக்கின்றார்கள.; அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியது கட்சியினுடைய ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

மறுபுறத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே கட்சியோடு இல்லை. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய எதிர் நடவடிக்கைகளையும், அவர்களுடைய சவால்களையும் சந்திக்க வேண்டிய ஏற்படும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் தமது பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு புதிய திட்டங்களை வகுக்க வேண்டி இருக்கிறது. தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக தாங்கள் எடுத்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தி மக்கள் அதை சரி காணுகின்ற ஒரு நிலை ஏற்படுத்துகின்ற போது மாத்திரமே கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆகவே முஸ்லிம் கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களுடைய தேர்தல் நடத்துவதில் வெளிப்படையாக விருப்பத்தை தெரிவித்துக் கொண்டாலும், கட்சிக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தொடர்பிலும் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டிய ஒரு கட்டான சூழலில் இருக்கின்றன. 

கட்சிக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே காணப்படுகின்ற முரண்பாடுகள், அவர்களை கட்சியிலிருந்து நீக்கி இருக்கின்ற நிலைமையில் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேசத்துக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுதியான ஒருவரை நியமிக்க வேண்டிய ஒரு கட்டாயம் முஸ்லிம் கட்சிகளுக்கு இருக்கின்றது.

அப்போதுதான் கட்சியினுடைய ஆதரவை மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆயினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவாளர்களை வைத்து முஸ்லிம் கட்சிகளின்; வெற்றியை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள்.  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றினதும், அவற்றின் தலைர்களுக்கும்  அத்தகையதொரு தேர்தல் களம பரிசோதனையாக அமையும். 

ஏனென்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோரி கட்சியுடன் இணைந்து கொண்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் கட்சிக்கு வெளியே இருக்கின்றார்கள். கட்சியினுடைய தலைமைத்துவ செயற்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை கொண்டு இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்துக்கு தனியான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த பின்னணியில் மக்களுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர்.

முஸ்லிம் கட்சிகளை பொறுத்தவரையில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதில் வெற்றி கொள்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் இன்னும் செல்வாக்கு இழக்கவில்லை என்பதனை காட்டுவதற்கும், கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அத்திவாரமிடுகின்றதாக இருக்கும்.

ஆகவே இவ்வாறு முஸ்லிம் கட்சிகள் 2023 மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடக்கும் போது தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளினால் தேர்தலை எதிர்கொள்வதில் சவால்களை சந்திக்க உள்ளன. அந்த சவால்களை அவர்கள் வெற்றி கொள்வதற்கு எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன என்பது தான் இப்போது இருக்கின்ற கேள்வியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right