தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சுயமரியாதை நரம்பு இருக்கின்றதா ?

By Digital Desk 2

20 Nov, 2022 | 01:16 PM
image

(சி.அ.யோதிலிங்கம்)

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் இதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். 

இங்கு ஜனாதிபதி வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசவிருப்பதாகக்கூறினாரே தவிர வடக்கு - கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசவிருப்பதாகக் கூறவில்லை. இதிலும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் பேசவிருப்பதாகவும் கூறினாரே தவிர தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் பேசவிரப்பதாகவும் கூறவில்லை. அவர் மிகக் கவனமாக தனது வழமையான தந்திரங்களுடன் விவகாரத்தை அணுகியுள்ளார்.

ரணில் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மட்டும் பேசவிருப்பதாகக் கூறியமைக்குக் காரணம் இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்குவதற்காகத் தான். ரணில் மட்டுமல்ல தென்னிலங்கையின் பிரதான கட்சிகளிடமும் அமொpக்கா தலைமையிலான மேற்குலகத்திடமும் இந்தநிலைப்பாடே உள்ளது. 

கிழக்கை சேர்த்தால் வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்க்க வேண்டி வரும். அதுபெருந் தேசியவாதத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதாலேயே  இலாவகமாகத் தவிர்க்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 2009க்கு பின்னர் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை மேற்கொண்டதனால் இக்கருத்து நிலைக்கு பின்னாலேயே இழுபட்டுச் சென்றது.

ஜனாதிபதியின் இந்தத் தந்திரம் வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒரு போதும் துணை போகக் கூடாது. அரசுடன் இடம்பெறும் எந்தப் பேச்சுவார்த்தையாக இருந்தாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்குஇ கிழக்காக அதாவது தமிழர் தாயகமாகவே அணுக வேண்டும்.

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும் கூட்டுரிமையையும் கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லையென்றால் தமிழர் தாயகம் இல்லை. தமிழர் தாயகம் இல்லையென்றால் தமிழ்த்தேசியம் இல்லை தமிழ்த்தேசியம் இல்லையென்றால் தமிழர் அரசியலில் அர்த்தமேயில்லை என்ற யதார்த்தத்தை தமிழ்த்தேசியக்கட்சிகள் மறக்கக் கூடாது.

தமிழ்த்தேசியத்தரப்பின் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் தான் ரணில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.  இதன் அர்த்தம் அரசு சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேசவேண்டும் என்பதாகும். 

இங்கு பேச்சுவார்த்தை அரசிற்கும் தமிழ்த்தேசிய அரசிற்கும் இடையிலானதே. தமிழ்த் தேசியக் கட்சிகள் சாராத அரசு சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ்த்தேசியக் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகவே ஜனாதிபதி இதனை முன்வைத்திருக்கிறார். முஸ்லிம்கள் பிரச்சினைகள் தொடர்பாக சகல முஸ்லிம் கட்சிகளுடனும் பின்னர் பேச்சுவார்த்தையை நடத்தலாம்.

இவற்றை விட அரசியல்தீர்வை 13இக்குள் முடக்குதல், இழுத்தடிப்புச் செய்தல் என்பதும் ஜனாதிபதியின் நோக்கங்களாக உள்ளன. இந்தநோக்கங்களுக்கும் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் பலியாகக் கூடாது. ரணில் பெருந்தேசியவாதத்தின் லிபரல் முகத்தையுடையவர். அவர் லிபரல் முகத்தை வெளிப்படையாகக் காட்டுவார். 

லிபரல் முகம் அம்பலப்படக்கூடாது என்பதற்காக பெருந்தேசியவாத முகத்தை மறைமுகமாகக் காட்டுவார். அவாpன் நடத்தைகளை நுணுக்கமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பெருந்தேசியவாத முகம் தொpயும். ஏனையவர்களுக்கு பெருந்தேசியவாதமும் துலக்கமாகத் தெரியாது.

தவிர கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவதிலும் ரணில் வல்லவர். அவர் ஒருபோதும் தனது கட்சியைப் பலப்படுத்துவதன் மூலம் தன்னைப் பலப்படுத்துவதில்லை. மாறாக எதிர்த்தரப்பை பலவீனப்படுத்துவதன் மூலமே தன்னைப்பலப்படுத்துகின்றார். தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கூட்டமைப்பாகக் கையாளாமல் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாகவே கையாண்டு வருகின்றார். இது தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தேசமாக அணுகுவதில் இது பலத்த தடைகளையே ஏற்படுத்தும். 

தற்போதைய நிலையில் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் முக்கியமாக இராணுவத்தைக் குறைத்தல், புலம்பெயர் முதலீடுகளை உள்வாங்குதல், அரசியல் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்துதல் ஆகிய மூன்று நிபந்தனைகளையும் பிரதானமாக முன்வைத்துள்ளன. 

இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் இந்நிபந்தனைகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. தவிர இந்திய அரசாங்கமும் பல வழிகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கின்றது. ரணில் தமிழ்த்தரப்புடன் பேசும் விடயத்தில் அவசரம் காட்டுவதற்கு இவையே காரணமாகும். எனவே தமிழ்த்தரப்பு வரலாறு தந்த இந்தச்சந்தர்ப்பத்தை கவனமாகப் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டக் கூடாது.

ரணில் அறிவிப்புக்கு தமிழ்த்தரப்பின் பதில் வினைகள் திருப்தியானதாக அமையவில்லை. சம்பந்தன் ரணிலின் கால இழுத்தடிப்பு தந்திரத்தை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தார். செல்வம் அடைக்கலநாதனும் சித்தார்த்தனும் தாயகமாக அணுகுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தனர். கஜேந்திரகுமாரும். விக்னேஸ்வரனும் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தந்திரோபாயத்தையும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாயத்தையும் சுட்டிக்காட்டியிருந்ததார்.  

எனவே ரணிலுடனான பேச்சுவார்த்தை விவகாரங்களை தமிழ்த்தேசியத் தரப்பு பல விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். அதில் முதலாவது ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சித்தனமான நகர்வுகளை தமிழ்த்தேசிய நிலைநின்று புரிந்துகொண்டு அணுகுவதாகும். ரணில் தமிழ்த் தேசியத் தரப்பையும், இந்தியாவையும் மோதவிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மருமகன் என்பதையும் அவரின் அரசியல் வாரிசு என்பதையும் மறக்கக்கூடாது. தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்பட்ட நகா;வுகளுக்கே அவர் எப்போதும்முக்கியத்துவம் கொடுப்பார்என்பதையும் மறக்கக்கூடாது. அவரின் தந்திரங்களை எதிர்கொள்ளும் வகையில் மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியத் தரப்பு தயாராக வேண்டும்.

இரண்டாவது பேச்சுவார்த்தை செயற்பாட்டை தமிழர் தாயகமாக அணுகவேண்டுமே தவிர வடக்கென்றோ, கிழக்கென்றோ பிரித்து அணுகக்கூடாது. அத்துடன் ஒரு தேசமாக ஒருங்கிணைந்து அணுகுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். துண்டு துண்டாக அணுகின் தேசத்தின் ஒருங்கிணைந்த குரல் வெளியேவராது. இக்குரல் வரவில்லையென்றால் தமிழ் மக்களை எவரும் கணக்கெடுக்க மாட்டார்கள். முதலில் ஒருங்கிணைந்துவாருங்கோ என்று தமிழ்த்தேசிய தரப்புக்கு புத்திமதி கூறி காலத்தினையும் தென்னிலங்கை தலைமைகள் கடத்திவிடும். சொல்லப்பார்ப்பர். அனைத்து தேசியக் கட்சிகளும் சுயநிர்ணயமுடைய சமஷ்டியை அரசியல் தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் பின்னரும் ஒருங்கிணைய மறுத்தால் கட்சி அரசியலும் தேர்தல் அரசியலும் மட்டுமே அதற்கு காரணமாக இருக்கும். 

மூன்றாவது நீடிக்கும் பிரச்சினையாக இருப்பது தமிழ்த் தேசியப் பிரச்சினையே. அதாவது தேசத்தை அழித்தல் பற்றிய பிரச்சினை எனவே அரசியல் தீர்வு இந்த அழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு தமிழ்த்தேசியத் தரப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையே தான் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். அரசுசார்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பாக கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. 

நான்காவது பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியத் தரப்பு அரசியல் தீர்வின் கோட்பாட்டு அடிப்படைகளையும் யாப்புப்புச் சட்ட அடிப்படைகளையும் தெளிவாத் தயாரித்தல் வேண்டும். கோட்பாட்டு அடிப்படைகளாக தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுய நிர்ண சமஷ்டி என்பன இருத்தல் வேண்டும். அதேவேளை யாப்புச்சட்ட அடிப்படைகளாக தாயக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் வடக்கு - கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் தேசிய இனமாகப்பங்குபற்றுதல், சுயாட்சி அதிகாரங்களைப் பாதுகாத்தல் என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

ஐந்தாவது பேச்சுவார்த்தை செயற்பாட்டை ஒரேயடியாக முன்னெடுக்கக் கூடாது. கட்டம் கட்டமாக முன்னெடுத்தல் வேண்டும். முதலாம் கட்டம் நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை அரசாங்கம் தெளிவாகக் காட்டுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதில் ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், படையினர் பறித்த காணிகளை மீளப்பெறுதல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்றுதல் இ வடக்கு - கிழக்கிற்கென தனியான பொருளாதார சபையை உருவாக்குதல் என்பவற்றிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

2ஆம் கட்டத்தில் அரசியல் தீர்விற்கான கோட்பாட்டு அடிப்படைகளை ஏற்பதற்கும் 3ஆம் கட்டத்தில் அரசியல் யாப்புச்சட்ட அடிப்படைகளையும் ஏற்பதற்கும் அழுத்தங்களைக் கொடுத்தல் வேண்டும்.

ஆறாவது கட்சிகள் மட்டும் பேச்சுவார்த்தைக்குழுவில் அடங்கக் கூடாது. துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்க வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் தமிழ் மக்களின் சுயமரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தாமல் தமிழ்க்கட்சிகள் செயற்படுவதாகும். இது விடயத்தில் சுயமரியாதை நரம்பு தமிழ்த் தேசியத் தரப்புக்கு இருக்கின்றதா? என்பதை தமிழத்தேசியக்கட்சிகள் ஒருதடவை சோதித்துப்பார்ப்பது நல்லது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right