“வரிகறப்பது மட்டுமே இந்த வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான மூலோபாயமாக தென்படுகிறது”
இலங்கை அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டதன் பின்னர் அது பற்றிய விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. நாட்டின் பொருளாதாரம் அதன் வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ள புறச்சூழலிலேயே இம்முறை பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பட்ஜெட் பற்றிய பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் ஏற்கனவே முனைப்படைந்திருந்தன. வெளிநாட்டு இறைமைக்கடன் மீள்செலுத்துதலை நிறுத்திவைத்து வங்குரோத்து நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு உடனடித்தீர்வாக எவற்றைக் கூறப்போகிறது என்று வணிக வியாபாரத்துறை சார்ந்தவர்களும் கல்வியாளர்களும் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் உன்னிப்பாக அவதானித்தக் கொண்டிருந்தனர்.
ஆனால் நிதியமைச்சரினால் வாசிக்கப்பட்ட இந்த பட்ஜட் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மிகவும் இலக்குப்படுத்தப்பட்ட செலவின ஒதுக்கீடுகளைக் கொண்டதாக அமையவில்லை. மாறாக வழமைபோலவே இலங்கை அரசாங்கங்கள் ஜனரஞ்சகமாக அடையக்கனவு காணும் எதிர்பார்க்கைகளை உள்ளடக்கியதொரு கொள்கைப் பிரகடனமாகவே அதனைக்காண முடிகிறது.
முதலிலொரு பட்ஜட் என்பது அடுத்துவரும் வருடத்திற்கானதொரு நிதி மதிப்பீட்டு அறிக்கையாகும். அதைவைத்து நீண்டகால அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைய எத்தனிக்க முடியாது. நடுத்தரகால மற்றும் நீண்டகால திட்டங்களை கொள்கைப் பிரகடனமான அரசாங்கம் வெளியிடலாம். ஆனால் இந்த பட்ஜட்டில் சொல்லப்பட வேண்டியது இப்போதைய நெருக்கடிக்கான அடுத்த வருடத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற உடனடித்தீர்வுகளை மாத்திரமேயாகும்.
அதேபோல 2024இற்கான பட்ஜட் 2023இன் அடைவுகளை அடியொற்றியதாக அதற்கடுத்த வருடம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியதாக அமைய வேண்டும். அந்த வகையில் அந்த பட்ஜட் முதற்கோணலாக மாறியுள்ளது. மக்கள் கேட்டதெல்லாம் இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து தமது தலைகளை சற்று மேலே வைத்து சுவாசிப்பதற்கான ஒரு காலஅவகாசத்தை மட்டும் தான்.
ஆனால் இந்த பட்ஜட் மக்களின் தலையைப்பிடித்து நீரில் அழுத்தி மூச்சடைக்க வைக்கும் வகையில் யோசனைகளை முன்வைத்துள்ளது. இவை பொதுமக்கள் அனுபவிக்கும்; துயரநிலை குறித்து சந்றேனும் கவலைப்படாத மரத்துப்போன முன்மொழிவுகளாகும்.
ஆனால் இவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகங்கள் கிடையாது. முதலில் இந்த பட்ஜெட் முன்வைக்கப்படும் பொருளாதார சூழல் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகள் நாடு பலத்த அடி வாங்கியுள்ளதை வெளிப்படையாகக் காட்டுகின்றன.
இலங்கையின் உத்தியோக பு+ர்வ தரவுகளின் படி நாட்டின் பணவீக்கம் கடந்த ஒக்டோபரில் 66சதவீதமாக இருந்தது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க நிபணரான ஹென்கி அவர்களின் கணிப்பிட்டின்படி இலங்கையின் ஒக்டோபர் மாதப்பணவீக்கம் 115சதவீதமாகும்.
ஆகவே உத்தியோபு+ர்வ தரவுகளுக்கும் சுதந்திரமான சர்வதேச கணிப்பீடுகளுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. அது மட்டுமன்றி கடந்த இரண்டு வாரங்களில் பொருள்களின் விலைகள் மிகச் சடுதியாக அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
ஆனால் பணவீக்கம் குறைவடைந்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது. அடுத்தவருடம் பணவீக்கம் 4 சதவீதமாகக் குறைவடையும் என மத்தியவங்கியின் ஆளுநர் எதிர்வு கூறுகிறார். இதில் எதனை நம்புவது என்பதை பொதுமக்களே தீர்மானிக்க வேண்டும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டிவீதங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொதுமக்களுக்கு கடன் வழங்குவதை நிதிநிறுவனங்கள் குறைத்துள்ளன. முதலீடுகளை மேற்கொள்வதும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதும் சிரமமானதாக மாறியுள்ளது.
நாட்டின் விவசாய உற்பத்திஇ கைத்தொழில் உற்பத்தி உள்ளடங்கலாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. 2021 இல் சுமார் 84 பில்லியன் டொலர் அளவிலிருந்த பொருளாதாரம் 2022 இல் 73 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த வீழ்ச்சி இதைவிட ஆழமாகச் சென்று சுமார் 58 பில்லியன் டொலர்கள் வரையில்; குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வீழ்ச்சியை சதவீதங்களில் கூறுவதாயின் 2022 ஆண்டில் பொருளாதாரம் 8.3 சதவீதம் வீழ்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியமும் அது 8.8 சதவீதமாகுமென ஆசிய அபிவிருத்தி வங்கியும் அவ்வீழ்ச்சியின் அளவு 9.2சதவீதமாக இருக்குமென உலக வங்கியும் கூறுகின்றன. இந்த வீழ்ச்சி 2023இலும் தொடருமென எதிர்வு கூறப்படுகிறது.
வருமான இழப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக நாட்டில் வறுமை நிலை தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. நாட்டின் சனத்தொகையில் 77 இலட்சம் பேருக்கு வெளியாரின் உதவிகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச ஒப்பீடுகளுக்கு பயன்படும் 3.6 அமெரிக்க டொலர்கள் வருமான அடிப்படையில் கணிப்பிடப்படும்; வறுமைக் குறிகாட்டியின்படி 2020இல் 12.7சதவீதமாக இருந்த இலங்கையின் வறுமை நிலை 2022ஆண்டில் இருமடங்காக அதிகரித்து 25.6சதவீதமாக உள்ளது. இது 2009 இல் இலங்கை இருந்த நிலையாகும்.
உரிய நேரத்தில் இரசாயனப் பசளைகள் நியாயமான தாங்கக் கூடிய விலைகளில் விவசாயிகளுக்கு கிடைக்காத காரணத்தால் நாட்டின் உணவு உற்பத்த்p 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதனால் உணவுபொருள் விலைகள் இருமடங்காக அதிகரித்துள்ளன.
நாட்டின் பொருளாதாரம் சுருங்கியுள்ளபடியினாலும் எரிபொருள் தட்டுப்பாடு மூலப்பொருள் தட்டுப்பாடு போன்ற காரணிகளாலும் தொழில்வாய்ப்புகள் குறைவடைந்து பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளமையை நடைமுறையில் காணமுடிகிறது. ஆனால் தொகை மதிப்புப் புள்ளிவிபரத்திணைக்களத்தின் தரவுகளின்படி 2022இன் முதற்காலாண்டிற்கான வேலையின்மையானது 4.3சதவீதமாக கூறப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட முக்கிய விடயம் நாட்டில் சகல வரிகளும் இவ்வாண்டில் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. இது பொருள்கள் சேவைகளின் விலைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் விலை அதிகரிப்புகள் காரணமாக தமது பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாமல் திணறும் நிறுவனங்கள் தமது உற்பத்தி நடவடிக்கைகளைக் குறைத்துள்ளன.
ஒருபுறம் பொருள்கள், சேவைகள் மீதான மக்களின் கேள்வி குறைவடைந்துள்ளதுடன் மறுபுறம் உற்பத்தி நடவடிக்கைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்படியானதொரு சூழ்நிலையில் தான் ‘நோய்வாய்ப்பட்டு விழுந்துகிடக்கும் பசுவைப்போல’ வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களிடம் ரணில் விக்கிரமங்க அரசாங்கம் வரிகறக்க எத்தனிக்கிறது.
வரிகறப்பது மட்டுமே இந்த வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான மூலோபாயமாகவும் தென்படுகிறது. மாறாக அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காண இயலவில்லை. அதிலும் குறிப்பாக பாதுகாப்புச் செலவினங்கள் இம்முறையும் பெருமளவு அதிகரிக்கபட்டுள்ளன.
நாட்டில் யுத்தமோ பாதுகாப்பு அச்சுறுத்தல்களோ இல்லாத நிலையில் அவை அதிகரிக்கப்படுவது பொருளாதாரம் முடங்கிப்போயுள்ள இந்த நிலையிலும் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. வரவு - செலவுத் திட்டக் குறைநிலையைக் குறைக்க வேண்டுமாயின் இது போன்ற செலவினங்களே குறைக்கப்படல் வேண்டும்.
ஆனால் அவ்வாறான முன்மொழிவுகளைக் காண இயலவில்லை. மாறாக புதிய நிறுவனங்களை உருவாக்கும் முன்மொழிவுகள் காணப்படுகின்றன. இவ்வாறான நெருக்கடிமிக்க சவாலான ஒரு சூழ்நிலையில் அரச செலவினங்கள் வளர்ச்சியை உருவாக்கும் துறைகளை நோக்கி நகர்த்தப்படல் வேண்டும் அத்துடன் வீண் விரயங்களும் ஊழல்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். இது பற்றி எந்த ஒரு குறிப்பும் அதில் காணப்படவில்லை மாறாக இம்முறையும் வழமையான விடயங்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
ஜனரஞ்சகமான செலவுகள் அல்லாமல் அவசியமானவற்றுக்கே முன்னுரிமை தரப்பட்டுள்ளதாக வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அரசாங்கம் அடைய எத்தனிப்பதாக பட்டியல் படுத்தப்பட்ட இலக்குகள் ஜனரஞ்சக ரீதியில் துhக்கிப் பிடிக்கப்படும் இலங்கையால் எய்த முடியாத இலக்குகளாகும்.
உதாரணமாக. சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குதல் வருடாந்தம் 7 தொடக்கம் 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைதல், இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நூறுசதவீதத்திற்கு மேல் அதிகரித்தல், அடுத்துவரும் 10 வருட காலப்பகுதியில் வருடாந்தம் 3 பில்லியன் டொலர்கள் பெறுமதியான புதிய ஏற்றுமதிகளை மேற்கொள்ளல், அடுத்த 10 வருட காலப்பகுதியில் வருடாந்தம் 3 பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டுவருதல் உயர்திறன் கொண்ட போட்டித்தன்மை வாய்ந்த ஊழியப் படையை உருவாக்குதல் போன்ற ஜனரஞ்சகமான இலக்குகளே வரவு, செலவுத்திட்டம் திட்டம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
‘பல்லக்கில் தம்பி கால் நடை என்பது போல இது போன்ற இலக்குகளை நமது வாழ்நாள் முழுவதும் இலங்கை அரசியல்வாதிகளின் வாயிலிருந்து வடிவதைக் கேட்டுள்ளோம். ஆனால் இவற்றுள் ஓரிரண்டாவது நடைபெற்றிருந்தால் நாடு சர்வதேசத்தின் முன் தலைகவிழ்ந்து கிடக்க வேண்டியதில்லை. கடந்த காலத்தில் வந்த மகிந்த சிந்தனையாகட்டும் அதன் பின்னர் வந்த மூலோபாயங்களாகட்டும் இதைவிட அப்பனான இலக்குகளைக் கொண்டிருந்தன.
ஆனால் நடைமுறையில் ஒன்றும் அசையவில்லை. இலங்கையின் கஜானா காலியானது தான் மிச்சம். சிங்கப்பூர் ஜப்பான் வியட்நாம் போன்ற நாடுகளோடு ஒப்பிட்டு எங்கோ பிழைவிடப்பட்டிருப்பதாகவும் அதை ஆராய்ந்து கண்டுபிடிக்க போவதாகவும் கூறுகின்றனர். அதை நீங்கள் ஆறுதலாக திட்டம் போட்டு கூட்டம் போட்டு விருந்துண்டு மகிழ்ந்து அடுத்த ஜென்மத்திலாவது கண்டுபிடியுங்கள்.
இப்போது பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுப்பிரச்சினைக்கு வழியென்ன? முதலில் அதைச் சொல்லுங்கள். அதற்கான எந்த காத்திரமான வழியும் இந்த வரவு- செலவுத் திட்டத்தில் இல்லை. மக்களை என்ன விதத்திலாவது கசக்கிப்பிழிந்து அடுத்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 8.3 இலிருந்து 15 ஆக இருமடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் வருவாய் திரட்டும் யோசனைகளின் அடிநாதமாக உள்ளது.
இதனால் பொருளாதாரத்தின் மீது ஏற்படும் பாதகமான தாக்கங்கள் குறித்தோ உற்பத்தி நுகர்வு மற்றும் ஏற்றுமதி துறைகள் மீது ஏற்படும் விபரீதங்கள் குறித்தோ முறையான கவனம் செலுத்தப்படவில்லை. நேரில் வரிகளான வற்வரி போன்றவை இருமடங்காகியுள்ளன. வருமான வரிகள் ஒரு செல்வந்த நாட்டில் நிலவும் அளவுக்கு 36 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.
நாட்டின் ஏற்றுமதிகள் மீது 30 சதவீதம் வரையில் வரிவிதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை நோக்கி நகரவிரும்பும் நாடுகள் பல அவற்றை இல்லாமல் செய்துள்ளன. இங்கு அவற்றை அதிகரிப்பதன் மூலம் ஏற்றுமதியை வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலக்கு வைப்பார்களாம். இதுதவிர இற்றை நாள் வரையில் 0, 10 மற்றும் 15 சதவீதங்களாகக் காணப்பட்ட இறக்குமதித் தீர்வையின் சதவீதங்கள் 0, 15இ மற்றும் 20 சதவீதங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
அத்துடன் பெற்றோலிய இறக்குமதி மீது விசேட தீர்வை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. நாட்டில் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் ஏற்கெனவே வானளாவ உயர்ந்துள்ளன. இந்நிலையில் இந்த வரிகள் அவற்றை மேலும் அதிகரிக்கும். அத்துடன் இறக்குமதி உள்ளீடுகளின் விலை அதிகரிப்பால் உற்பத்திச் செலவுகள் மேலும் உயரும். பொருளாதாரத்தின் வீழ்ச்சி மேலும்ஆழமாகச் செல்லும்;.
வாழ்க்கைச் செலவைக்கட்டுப்படுத்தி வாழ்வளிக்க பட்ஜட்டில் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்த பொது சனம் இப்போது பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து தப்பிக்கவே வழிதேடுகின்றனர். டிசம்பர் மாத சம்பளங்கள் கைக்கு வரும் போது மத்திய தர வர்க்கக் குடும்பங்கள் பல உழைக்கும் வறியவர்கள் என்ற புதிய வறிய வகுப்புக்குள் விழுந்திருப்பர்;.
ஏதாவது நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படும் என்று எதிர்பார்த்த சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சிகள் வரிகள் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மூடப்படும் நிலை உருவாகும். பெரிய நிறுவனங்களும் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் தொழிலாளர்கள் வேலை பலர் இழப்பர். தொழில் முயற்சிகள் இலங்கையில் இருந்து வேறுநாடுகளை நோக்கி நகரும். வாண்மையாளர்களும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களும் நாட்டைவிட்டு வெளிச்செல்வர்.
அரசாங்கம் கனவு காண்பதுபோல பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு குறைப்பதோ 7-8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதோ சாத்தியப்படாது என்பது ஒருபுறமிருக்க ஏற்கனவே 9.2சதவீதத்தினால் சுருங்கிப்போயுள்ள பொருளாதாரத்தை நேர்க்கணிய பெறுமதிக்கு கொண்டுவருவது கூட இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் யோசனைகள் மூலம் சாத்தியப்படாது.
வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்று பதில் வந்தது போலமக்கள் எதிர்கொள்ளும் உடனடிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்து பொருளாதாரத்தை வழமைநிலைக்கு கொண்டுவந்ததன் பின்னர் வரிகளை படிப்படியாக அதிகரித்து பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதே பகுத்தறிவான வழிமுறையாகும்.
வரிவிதிப்பு என்ற பொன் முட்டையிடும் வாத்தை வயிற்றைக் கிழித்து ஒரே தடவை செல்வந்தனாக முனைந்த விவசாயியைப் போல விக்கிரமசிங்க அரசாங்கமும் பொருளாதாரத்தில் காணப்படும் எல்லாவரிகளையும் பயன்படுத்தி மக்களைக் கசக்கிப்பிழிந்து வருவாய் திரட்சி ஆட்சி நடத்த முற்படுமாயின் அது ஆட்சியாளர்கள் மிகவும் கசப்பான ஒரு பாடத்தைக் கற்பதன் மூலமே முடிவடையக் கூடும்.
காரணம் இலங்கையின் இன்றைய கேவலமான நிலைக்கு நிச்சயமாக பொதுமக்கள் காரணமல்ல. பொருளாதாரத்தை வீழ்த்திய காரணகர்த்தாக்கள் பாதுகாப்புடன் பத்திரமாய் வாழ்க்கையை அனுபவிக்க அதற்கான கூலியை பொதுமக்களை செலுத்தச் சொல்லி நிர்ப்பந்திப்பது எவ்விதத்திலும் நியாயமல்ல.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM