சம்பள அதிகரிப்பு மட்டும் பிரச்சினைகளை தீர்க்காது…!

Published By: Digital Desk 2

20 Nov, 2022 | 11:26 AM
image

வரவு - செலவுத் திட்டத்தில் வழமை போன்று பெருந்தோட்ட சமூகம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் தறுவாயில் ‘தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்’ என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதை ஒரு சமாளிப்பு உரையாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளில், சம்பள விவகாரம் என்பது ஒரு பகுதி மாத்திரமே.  அதற்கு அப்பாற்பட்டு அவர்கள் எந்தளவு சவால்களுக்கு மத்தியில் தற்போது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர் என்பதை பெருந்தோட்ட அமைச்சர் என்ற வகையில் ரமேஷ் பத்திரன நன்கறிவார்.

அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம்   ஒன்று சமர்ப்பிக்கப்படுவற்கு முன்பதாக, துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கு அதிக வருமானம் பெறும் துறைகள் , சேவைகளை இனங்கண்டு அதன் மூலம் கடன்களை ஈடு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது வழமை. 

அதே போன்று மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் துறைகளுக்கு புத்துயிர் அளித்தல், அச்சமூக மக்களை கைதூக்கி விடுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து நிவாரணங்களை முன்மொழிதல் போன்ற ஆலோசனைகளை, குறித்த துறை சார்ந்தோர் மற்றும் பொறுப்பாக உள்ள அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி தீர்வுகள்,  முடிவுகளைப் பெற்ற பின்னரே வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்பது சாதாரணமாக அனைவரும் அறிந்ததோர் விடயம். 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட  அபிவிருத்தி தொடர்பாக  தேயிலை துறை  சம்பந்தமாக அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க பேச்சுக்கள் நடத்தவில்லையென்றே தெரிகின்றது. தற்போது தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம்  நடைமுறையில் இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் சம்பள நிர்ணய சபை, தொழில் திணைக்களம் ஆகியன ஊடாகவே தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் வருமானம் அல்லது நிவாரணம் தொடர்பில் அரசாங்கம் நிச்சயமாக தலையிட்டிருக்க முடியும். 

ஆனால் தேயிலைத் தொழிற்றுறை வீழ்ச்சிக்கான காரணங்கள் பற்றி பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வியெழுப்பிய பிறகே பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன அது குறித்து சில உண்மைகளையும் தெரிவித்துள்ளார். இரசாயன உரங்களுக்கான தடையால் பெருந்தோட்டத்துறை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவை, பெருந்தோட்ட அமைச்சர் என்ற வகையில் தானே முதலில் எதிர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டுப் பொறுப்பு காரணமாக இந்த விடயங்களை தான் வெளிப்படுத்தவில்லையென்றும் தற்போது அதை தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலைகள்   எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

தேயிலை விலை அதிகரித்துள்ள நிலையில், சுமார் 75 வீத உற்பத்தியை தன்னகத்தே கொண்டிருக்கும் சிற்றுடைமையாளர்கள் இலாபத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் கம்பனிகளின் கீழ் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்க இன்னும் சில தோட்ட நிர்வாகங்கள் பின்னடிப்பு செய்து வருவதை அமைச்சர் நன்கறிவார். அப்படி இருக்கும் போது இவர் ஏன் அதற்கான தீர்வுகளை வரவு - செலவுத் திட்டம் ஊடாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியை அணுகியிருக்க முடியாது என்ற கேள்வி எழுவது யதார்த்தமானது தானே?

அதே வேளை தோட்டத்தொழிலாளர்களைப் பொறுத்தவரை இங்கு அவர்களின் வாழ்வாதார பிரச்சினையாக இருப்பது வேதனம் மட்டுமல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியாகி விட்டது. ஆனால் அரசாங்கமோ, வேதனத்தை அதிகரித்து கொடுத்து விட்டால் இந்த மக்களின் சகல பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடும் என்ற நோக்கத்திலேயே செயற்பட்டு வருகின்றது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரியான இடத்தில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தாக மலையக பிரதிநிதிகளின் பலகீனங்களைக் கூறலாம். 

இரண்டாவதாக, அந்த பிரச்சினைகள் அனைத்தையும் அறிந்தும் மெளனமாக அதை கடந்து செல்லும்  பேரினவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளது என்பது முக்கிய விடயம். மேலும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் அவரின் அமைச்சரவையில் பெருந்தோட்டத்துறைக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் ரமேஷ் பத்திரன இரசாயன உரத் தடை குறித்து ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியதை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறார்.  

ஆனால் அப்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சை கொண்டிருந்த இ.தொ.கா அந்த சந்தர்ப்பத்திலேயே இதை சுட்டிக்காட்டி அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த துறையோடு இணைந்திருப்பவர்களின் வாக்குகளின் மூலமாகவே குறித்த அமைப்பானது 45 வருடகாலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து வருகின்றது. 

தற்போதும் கூட அந்த மக்களின் வாக்குகளினாலேயே நுவரெலியா ,பதுளை மாவட்டங்களில் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள்  பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே பெருந்தோட்டங்களைப் பாதுகாத்தல் என்பது அத்தொழிலோடு இணைந்திருக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களில் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மாத்திரமின்றி, அது அந்த மக்களுக்கான   அரசியல் இருப்போடும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை உரியோர் விளங்கிக்கொள்ளல் அவசியம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43