(ரொபட் அன்டனி)
2023ஆம் ஆண்டுக்கான வருமானமாக 3408 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த வருமான மதிப்பீட்டில் 3130 பில்லியன் ரூபா வரி வருமானமாக அறவிடப்படவுள்ளது.
இலங்கையின் அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கமினால் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. சாதக பாதக விமர்சனங்கள் மதிப்பீடுகள் ஆய்வுகள் என்பன பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான தமது மதிப்பீடுகளை ஆராய்வுகளை வெளியிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர் பொதுவாகவே கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றனர். அதேபோன்று ஆளும் தரப்பினர் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்து உரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வரவு - செலவுத் திட்டத்தின் ஒரு சில விடயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. முக்கியமாக வரவு - செலவுத் திட்டத்தின் இந்த இலக்கங்கள், மதிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அரச வருமானம், அரச செலவினம், பற்றாக்குறை என்பன எந்தளவு தூரம் ஆற்றல்மிக்கதாக இருக்கின்றன? அவை எந்தளவு தூரம் சாத்தியமானவை என்பது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது.
முக்கியமாக வரவு - செலவுத் திட்டம் என்பது அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வருமானத்தையும் செலவுகளையும் மதிப்பீடு செய்கின்ற ஒரு திட்ட ஆவணமாகவே கருதப்படுகின்றது. அதில் எதிர்பார்க்கும் வருமானம் அப்படியே வந்து விடும் என்று 100 வீதம் உறுதியாக கூற முடியாது. காரணம் பொருளாதாரத்துக்கு பல அதிர்ச்சிகள், நிலைமாற்றங்கள், திடீர் ஏற்றத்தாழ்வுகள், இடம்பெறலாம். எனவே அவை எந்தளவு தூரம் முழுமையான ஆற்றலை தரும் என்பது தொடர்பாக ஆராய வேண்டி இருக்கின்றது.
அதுமட்டுமின்றி இந்த வரவு செலவுத் திட்டத்தின் பல கசப்பான பக்கங்களையும் நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. காரணம் அரசாங்கம் மிகவும் இக்கட்டான காலகட்டத்திலேயே பட்ஜட்டை முன்வைத்துள்ளது.
பொருளாதாரம் தலை கீழாக மாறி தற்போது குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்து கொண்டிருக்கின்ற சூழலிலேயே இந்த வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே இந்த வரவு - செலவுத் திட்டம் நீண்டகால அபிவிருத்தியை நோக்கியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது. உடனடியான நிவாரணங்கள் விலை, குறைப்புகள் சம்பள உயர்வுகள் என்பன இதில் இடம்பெறவில்லை, எனவேதான் அது எதிர்த்தரப்பினரின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. எப்படியிருப்பினும் வரவு - செலவுத் திட்டத்தின் வருமானம் மற்றும் செலவினங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதை தொடர்பாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
இந்த வரவு - செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதை சகல தரப்பினராலும் ஊகித்துக் கொள்ள முடிகிறது. காரணம் இலங்கை தற்போது நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்க்கின்றது. சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உத்தியோகஸ்தர் மட்டத்தில் இணங்கி இருக்கின்றது.
கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டவுடன் அந்ததொகை இலங்கைக்கு கட்டம் கட்டமாக கிடைக்கும். அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும், வரவு செலவு பற்றாக்குறையை குறைக்க வேண்டும், வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் போன்ற பல பரிந்துரைகள் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விடயங்களை உள்வாங்கியே இம்முறை வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும்.
அதன்படி அடுத்த வருடத்துக்கான முழுமையான வருமானமாக 3408 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்த வருடத்துக்கான முழு செலவினமாக 5819 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையாக அதாவது இடைவெளியாக 2404 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
செலவினங்கள்
இந்த 5819 பில்லியன் ரூபா செலவினத்தில் மீண்டெழும் செலவினங்களாக 4609 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அரச சேவை சம்பளங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் நிவாரண உதவித்தொகை என்பவற்றுக்காக இந்த 4609 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இது அரசாங்க செலவில் மிகப் பெரிய ஒன்றாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் முதலீடுகளாக 1220 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்துக்காக 1000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ரீதியில் அரசாங்கம் பெற்றிருக்கின்ற கடன்களுக்கான வட்டி 2193 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனூடாக அரசாங்கத்தின் செலவினத்தில் அதாவது 5819 மில்லியன் ரூபா செலவில் 2193 பில்லியன் ரூபா ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இதன் ஊடாக நாட்டின் இநிதி நிலைமை எப்படி இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி அரசாங்கம் மக்களுக்கு வழங்குகின்ற மானியங்கள் உதவித்தொகைகள் போன்றவற்றுக்காக 1114 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்தவகையிலேயே அரசாங்கத்தின் செலவினங்கள் அமைந்திருக்கின்றன. பொதுவாக மீண்டெழும் செலவினம் மிக அதிகமாகவே இருக்கின்றது.
வருமானம்
2023 க்கான அரச வருமானத்தை எடுத்து நோக்கும் போது 2023 ஆம் ஆண்டுக்கான வருமானமாக 3408 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த வருமான மதிப்பீட்டில் 3130 பில்லியன் ரூபா வரி வருமானமாக அறவிடப்படவுள்ளது. இதனூடாக இந்த அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் வருமானத்தில் கிட்டத்தட்ட 95 வீதமான வருமானம் வரி மூலம் அறவிடப்படுகின்றது. குறிப்பாக வருமான வரி மூலமாக 912 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகின்றது.
பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான வரி வருமானமாக 1763 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரி ஊடாக 455 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகின்றது. வரியல்லா வருமானமாக 278 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக வரி ஊடாக எந்தளவு தூரம் வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தற்போதைய சூழலில் இலங்கையின் வரி வருமானமானது மொத்த தேசிய உற்பத்தியில் 8.3 வீதமாக காணப்படுகின்றது. அதனை 15 வீதமாக உயர்த்துவதற்கு பட்ஜட் பரிந்துரைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இந்த மட்டத்திற்கு அரசாங்கம் பயணிக்க வேண்டும்.
ஆற்றல் எவ்வாறுள்ளது?
ஆனால் இவ்வாறு 3408 பில்லியன் ரூபா அரச வருமானமாக மதிப்பிடப்பட்டு இருந்தாலும்கூட அது முழுவதுமாக சாத்தியமாகுமா என்பது குறித்து பார்க்க வேண்டும். காரணம் வருமான வரியாக எதிர்பார்க்கப்படுகின்ற 912 பில்லியன் ரூபாவை முழுவதுமாக பெற்றுக்கொள்ள முடியுமா? சகலரும் இந்த வரியை செலுத்துவார்களா? அதற்கான பொறிமுறை எவ்வாறு அமைந்துள்ளது? என்ற கேள்வி எழுகின்றது. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து 455 பில்லியன் ரூபாவை வரி வருமானமாக பெற்றுக் கொள்ள முடியுமா? வெளிநாட்டு வர்த்தகம் தற்போது மிக நெருக்கடியான கட்டத்தில் இருக்கின்றது. சர்வதேச மட்டத்திலும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட பணவீக்கம் அதிகரித்து இருக்கிறது. எனவே இலங்கையில் இந்த வருமான மூலங்களை சரியாக பிரயோகித்து வருமானத்தை பெற முயற்சிகள் செயற்றிறன்மிக்க வகையில் இடம்பெறவேண்டும்.
பற்றாக்குறை
வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையானது அதாவது துண்டு விழும் தொகை 2404 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் ஊடாக இது நிரப்பப்பட விருக்கின்றது. இந்நிலையில் தற்போது இந்த பட்ஜட்டில் காண்பிக்கப்பட்டுள்ள இந்த பெரிய இலக்கங்கள் செயற்பாட்டு ரீதியில் பெறுவதற்கான பிரயோகங்கள் முக்கியமாகின்றன.
இலங்கை ஏற்கனவே 51 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த கடன்களை செலுத்த வேண்டியுள்ளது. வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 6 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆனால் கடன் செலுத்துவதற்கான டொலர் இருப்பில் இல்லை. மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பை பொருத்தவரையில் பயன்படுத்தக்கூடிய வகையில் டொலர் கையிருப்பு மிக குறைவானதாகவே இருக்கிறது.
1.5 பில்லியன் டொலர் அளவிலான சீனா யென்கள் மத்திய வங்கியின் ஒதுக்கீட்டில் காணப்படுகின்றன. ஆனால் அதனைக் கொண்டு வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது.கடன் மறுசீரமைப்பின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்து கொள்ளவிருக்கின்ற ஒப்பந்தத்தின் ஊடாக சர்வதேச நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டால் கடன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்படும். எனினும் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்னும் தயாராக இல்லை.
வரவு - செலவுத் திட்டத்தை பொறுத்தவரையில் நிவாரணங்கள் முன்வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் அதல பாதாளத்தில் விழுந்து இருக்கின்ற பொருளாதாரத்தை முதலில் மீளக் கட்டியெழுப்பவேண்டும். முதலில் பள்ளத்தில் விழுந்த வாகனத்தை உரிய கருவிகளைக் கொண்டு மேலே எடுக்க வேண்டும். அதன் பின்னரே அந்த வாகனத்தை பழுது பார்த்து வீதியில் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். முதலில் வாகனத்தை மேலே எடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியமாகும். அதன்படி முதலில் பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வர வேண்டி இருக்கிறது. மீட்சியை நோக்கிய திட்டங்கள் இன்றியமையாததாகவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM