படுதோல்வியை முன்னதாகவே அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது - ஜி.எல்.பீரிஸ்

By Nanthini

19 Nov, 2022 | 09:01 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற்றால், அரசாங்கம் பொதுத் தேர்தலையும் பிற்போட அவதானம் செலுத்தும். 

இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது.

தேர்தலை பிற்போடும் முயற்சியை சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (நவ 19) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து தீர்வு காண முடியாது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகை உட்பட சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. ஆனால், அரசாங்கம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக செயற்படுகிறது.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாமல் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் தேர்தலை நடத்த வேண்டும். தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தை சர்வதேசம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தமக்கு அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோர சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டமை முற்றிலும் தவறானது.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏதும் கிடையாது. ஆனால், இடைக்கால விதிவிதானங்களின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு நியமனம் இடம்பெறும் வரை அதுவரை நடைமுறையில் இருந்த ஆணைக்குழுக்களுக்கு முழுமையான அதிகாரம் உண்டு. 

ஆகவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தில் எவ்வித மட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

எந்த தரப்பினருக்கும் அடிபணியாமல் சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்தும் முழு அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆகவே, உரிய காலத்தில் தேர்தலை நடத்துவது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். அதனை விடுத்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோருவது காலத்தை வீணடிப்பதாகும்.

சட்டமா அதிபர் அரசாங்கத்தின் பிரதான சட்ட அதிகாரி சட்டமா அதிபரின் ஆலோசனை கட்டாயமானதல்ல, சட்டமா அதிபரின் ஆலோசனைகள் உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, இரத்து செய்யப்பட்ட பல சான்றுகள் காணப்படுகின்றன. 

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட முயற்சித்தால் மறுகணமே உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து பிற்போட பல முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது. 

பிரதமர் தினேஷ் குணவர்தன, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளார்.

எல்லை நிர்ணய குழுவை அமைக்கும் அதிகாரம் பிரதமருக்கு கிடையாது. எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய குழுவுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது. எவ்வித அங்கீகாரமும் கிடையாது.

8000 உறுப்பினர்களை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை 4000ஆக குறைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஜனாதிபதி ரணில் பிரதமராக பதவி வகித்த போது அவர் தான் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். கடந்த நான்கு வருட காலத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளமை சந்தேகத்துக்குரியது.

தேர்தல் முறைமை ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த தன்மையே மாகாண சபை தேர்தலுக்கும் நேர்ந்தது. 

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் இயங்குகின்றன. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகள் தேர்தல்கள் முறைமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை கருத்திற்கொள்ளாமல் மாகாண சபைகள் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதனால், அரசியலமைப்பின் விதிவிதானங்கள் மறுக்கப்பட்டுள்ளன. மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றிபெற்றால், அரசாங்கம் பொதுத் தேர்தலையும் பிற்போட அவதானம் செலுத்தும். 

இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. படுதோல்வி அடைவதை முன்கூட்டியதாக அறிந்தே அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல அச்சமடைகிறது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சியை சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக்...

2023-02-02 16:08:53
news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36