நல்லிணக்கம், பாதுகாப்பு, இராஜதந்திரம் குறித்து அரசின் திட்டங்கள்

By Nanthini

22 Nov, 2022 | 09:04 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ரசாங்கம் பல முக்கியமான விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளது. குறிப்பாக, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு திட்டங்கள், பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் முரண்பாடுகளை தவிர்த்தல் மற்றும் புலம்பெயர்ந்த உறவுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா தேசிய பிரச்சினை தீர்வு திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

அதாவது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபிக்கவும், அதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராக உள்ளதாகவும் தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி  உள்நாட்டு முரண்பாடுகள் மற்றும் மோதல்களுக்கு பின்னரான இன நல்லிணக்கம், உண்மைகளை கண்டறிதல் மற்றும் பொறுப்பேற்று பதிலளித்தல் உள்ளிட்ட மீள் - நிகழாமையை உறுதி செய்தல் போன்ற விடயங்களில் தென் ஆபிரிக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். 

இதன்போதே உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கவும், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்கவும் உறுதியளித்திருந்தார்.

இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவின் செயல்திறனை வலுப்படுத்துவதற்காக பிரதிநிதிகள் குழுவொன்றை தென் ஆபிக்காவுக்கு அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு உதவுவதற்கு தென் ஆபிரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களுக்கு இடையில் நீண்ட கால நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக 2015ஆம் ஆண்டு உண்மை – நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுகளை அப்போதைய பிரதமர் என்ற வகையில் முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், தென் ஆபிரிக்காவின் கறுப்பு – வெள்ளை இன வேறுபாடு மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது போன்று இலங்கையிலும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது இந்த ஆணைக்குழுவின் குறிக்கோளாக அமைந்தது என்றார்.  

டிசம்பரில் புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம்

இதேவேளை, புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இந்த புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், பன்னாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நேரடியாக இந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இவ்வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கலான முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளையும் ஆதரவையும் வழங்குமாறு பன்னாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம்  ஜனாதிபதி ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் பகிரங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினரை லண்டனில் ஜனாதிபதி ரணில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இதன்போது 'புலம்பெயர் சமூகம்' என்பதற்கு பதிலாக 'வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்' என்று அடையாளப்படுத்திக்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். 

மேலும், புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு சிங்களம் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

அதே போன்று முதலீட்டாளர்களும் இந்த அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும். எனவே, புலம்பெயர்ந்தோருக்கான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இவ்வாரத்தில் முன்வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் பாதுகாப்பு விமானங்கள், கப்பல்களுக்கு புதிய விதி  

மறுபுறம் இலங்கைக்கு வரும் உலக நாடுகளின் பாதுகாப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக பாதுகாப்பு படையினருக்கு புதிய 'நிலையான செயல்பாட்டு கட்டமைப்பை' அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த புதிய 'நிலையான செயல்பாட்டு கட்டமைப்பை' தயாரித்துள்ளதுடன், எதிர்காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவும் உள்ளது. 

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்தபோது, அந்த கப்பல் உளவுக்கப்பல் என  குறிப்பிடப்பட்ட நிலையில் பெரும் இராஜதந்திர நெருக்கடிகளை இலங்கை எதிர்கொண்டது.

கப்பல் வருவதற்கு இந்தியா நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் இலங்கை அரசு சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இராஜதந்திர ரீதியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. 

இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டே பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு இது தொடர்பான நிலையான வேலை திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி, இலங்கைக்கு வரும் உலக நாடுகளின் பாதுகாப்புக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு விமானங்களை இராஜதந்திர சிக்கல்கள் ஏற்படாத வகையில் ஏற்றுக்கொள்வதா என்பது இந்த புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 

மேற்படி விடயம் தொடர்பில், சாகல ரத்நாயக்கவுக்கும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே நிலையான செயல்பாட்டு கட்டமைப்பு குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி - ரணில் சந்திப்புக்கு நாள்...

2022-11-26 16:25:50
news-image

சீனா தயக்கம் : இதுதான் காரணம்

2022-11-24 10:16:35
news-image

மஹாதிரின் படுதோல்வி தரும் பாடம்

2022-11-23 11:34:18
news-image

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும்...

2022-11-21 21:47:01
news-image

அரசின் வரவும் - செலவும் மக்களின்...

2022-11-21 13:15:25
news-image

நல்லிணக்கம், பாதுகாப்பு, இராஜதந்திரம் குறித்து அரசின்...

2022-11-22 09:04:27
news-image

ரணிலின் நேசக்கரம் குறித்து சந்தேகிக்கும் தமிழ்...

2022-11-18 16:33:06
news-image

தமிழ்ப்படகு மக்கள் 

2022-11-15 13:31:24
news-image

பாதுகாப்பை மையமாகக் கொண்ட அரசாங்கத்தின் அணுகுமுறை...

2022-11-22 09:41:24
news-image

பெருந்தோட்டப்பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு காரணங்கள் என்ன...

2022-11-13 12:01:47
news-image

தேசிய நிதி கட்டமைப்பின் 13 விடயங்களை ...

2022-11-12 12:25:24
news-image

இரட்டைக்குடியுரிமையும் பாராளுமன்ற உறுப்பினர்களும்

2022-11-10 11:02:34