பயம் தேவையில்லை !

Published By: Ponmalar

19 Nov, 2022 | 12:53 PM
image

கேள்வி:
எனக்கு வயது 19. என்னுடைய பிரச்சினை என்னவெனில், இன்னும் நான் பூப்படையவில்லை. இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பிரச்சினை தீரவில்லை. இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு? இதனால், எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படுமா?

பதில்:
மிகச் சிலருக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் இருப்பதுண்டு. இதற்கு, உங்கள் உடலில் சுரக்கக்கூடிய ஹோர்மோன்களே காரணம்.

பொதுவாகப் பெண் பிள்ளைகள் 9 முதல் 16 வயதுக்குள் பூப்படைவது அவசியம். அப்படியல்லாத பட்சத்தில் வைத்தியரின் ஆலோசனையை நாட வேண்டும். நீங்கள் ஆலோசனை பெற்ற வைத்தியர் உங்களுக்கு எம்மாதிரியான சிகிச்சைகளைப் பரிந்துரைத்தார் என்பது தெரியவில்லை. மேலும், அந்த சிகிச்சைகளின் பின்னும் இந்தப் பிரச்சினை தொடர்வது குறித்து அவரது கவனத்திற்குக் கொண்டு சென்றீர்களா? அதற்கு அவர் என்ன சொன்னார் என்பதும் தெரியவில்லை.

உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாதபோதும், 19 வயதுப் பெண்ணுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றுள்ளீர்களா என்பது குறித்தும் தெரியவில்லை.

பொதுவாக, இதுபோன்ற சமயங்களில், ஹோர்மோன் ஊசிகள் மூலம் மாதவிடாயை வரவழைக்க வைத்தியர் முயற்சி மேற்கொள்வார். இதுபோன்ற ஊசிகள் எதையும் பெற்றுக்கொண்டீர்களா என்பதும் தெரியவில்லை.

எவ்வாறெனினும், தொடர் வைத்திய சிகிச்சைகள் மூலமே இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணப்படவேண்டும். நீங்கள் பூப்பெய்தியதும், சீரான மாதவிடாய் வராதது போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். ஆனால் பயப்படத் தேவையில்லை. சில ஊக்க மருந்துகள் மூலம் அவற்றைச் சீர்ப்படுத்திவிடலாம். என்றாலும், உங்களைப் போன்றவர்களுக்கு, மகப்பேற்றில் சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், கூடிய விரைவில் திருமணம் செய்துகொண்டு குழந்தைச் செல்வத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right