இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அது உலகம் செய்யும் துரோகமாகும் - சிறிதரன்

Published By: Vishnu

18 Nov, 2022 | 04:24 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் அது, இன அழிப்பிற்கு உள்ளான இனத்திற்கு உலகம் செய்யும் துரோகமாக கருதப்படும். 

புரையோடி போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி  இதயச்சுத்தியுடன் செயற்படுவாராயின் சமஷ்டி அடிப்படையில் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் 

அவர் மேலும் கூறுகையில் 

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பொருளாதார ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஒரு நாட்டின் வரவு செலவுத் திட்டம் புதிய நிதியாண்டுக்கான அரச வருமானம், அரச செலவு மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்படும்.

ஜனாதிபதி அன்றாடம் எவரிடமாவது கடன் அல்லது உதவி பெற்று நாட்டை முன்கொண்டு செல்லலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகிறார். 

நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை மறுபுறம் வீழ்ச்சியடைந்த விவசாயத்துறையை மேம்படுத்த அவதானம் செலுத்தப்படவில்லை. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு துறைக்கு மாத்திரம் அதிக நிதி ஒதுக்குவதன் நோக்கம் என்ன? மொத்த இராணுவத்தில் 75 சதவீதமானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.தமிழர்களின் காணிகளில் அவர்கள் குடி கொண்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டியில் 3000ஆயிரம் ஏக்கர் காணியில் படையினர் விவசாயம் செய்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் காணிகள் படையினரது பண்ணைகளாக தற்போது காணப்படுகின்றன.இதற்காகவே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது,பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதியை விவசாயத்துறைக்கு ஒதுக்கினால் விவசாயிகள் நாட்டை முன்னேற்றமடைய செய்திருப்பார்கள்.

இராணுவத்தை பலப்படுத்த ஒதுக்கும் அதிக நிதி பிரிதொரு யுத்தத்தை தோற்றுவிக்கும் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நாட்டின் அரச இயந்திரம் செயற்பட முடியாத நிலையில் உள்ளது. அரச தலைவர்கள் மத்தியில் உள்ள இனவாதம் மற்றும் மதவாத சிந்தனைகள் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த இடமளிக்காது.

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வாருங்கள், தீர்வை கையில் வைத்துள்ளோம் என்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர்களை போல அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் உலகத்தை முழுமையாக ஏமாற்றும் வகையில் காலத்திற்கு காலம் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள். நாட்டில் சமஷ்டியாட்சி முறைமையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து அவதானம் செலுத்துங்கள் என்பதை சிங்கள தலைவர்களிடமும், சிங்கள இளைஞர்களிடமும் வினையமாக கேட்டுக் கொள்கிறோம்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், விருப்பு வாக்கு முறைமையை நீக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் என்பது குறித்து முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன. ஐந்தாண்டுகள் கடந்தும் அந்த தீர்மானங்கள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வரவு செலவுத் திட்டத்தின் மீதான உரையின் போது 1995 ஆம் ஆண்டு வியட்நாம் நாட்டின் கைவிருப்பு இலங்கையை விட குறைந்த மட்டத்தில் இருந்தது, ஆனால் தற்போது வியட்நாம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக உள்ளது, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் மட்டத்தில் உள்ளது என குறிப்பிட்டார். வியட்நாம் நாடு பல்லின சமூகத்தன்மையை ஆதரித்து, அவரவர் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கி முன்னேற்றமடைந்துள்ளது, இலங்கையில் அவ்வாறான தன்மை காணப்பட்டதா, காணப்படுகிறதா,

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தந்தை செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், ரணில் பிரபா ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் நித்திரையில் இருந்து எழுந்ததை போல் கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது இனவாதத்ததை விடுத்து பொதுத்தன்மையுடன் செயற்பட வேண்டும். இனவாதம், மதவாதம் தான் இந்த நாட்டை இந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதை முதலில் உறுதியாக விளங்கிக் கொள்ளுங்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இந்திய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது பொறுப்பல்ல அது எமது கடப்பாடு என குறிப்பிட்டார். அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொண்டதால் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அவரால் முடியவில்லை. யுத்தத்தின் பின்னர் நாட்டை ஐக்கியப்படுத்தும் முயற்சியை அரச தலைவர்கள் முன்னெடுக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்காமல் சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாக இருந்தால் இது இன அழிப்புக்கு உள்ளான தமிழ் சமூகத்திற்கு உலகம் இழைக்கும் துரோகமாக கருதப்படும்.

வடக்கு தமிழ் அரசியல் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என ஜனாதிபதி குறிப்பிட்டார், ஆனால் அதற்கான நடடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதயச்சுத்தியுடன் உள்ளாராயின் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைவர் இரா.சம்பந்ததின் காலத்தில் ஒரு தீர்வை எட்டாவிட்டால், தற்போதைய பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 00:35:32
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21
news-image

வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட...

2024-02-23 19:40:36
news-image

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

2024-02-23 19:44:18
news-image

புளொட் இராகவனின் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுப்பு

2024-02-23 18:31:37
news-image

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில்...

2024-02-23 18:12:51