FIFA உலகக் கிண்ண வரலாறும் நடந்துமுடிந்த அத்தியாயங்களும் -1

Published By: Digital Desk 2

18 Nov, 2022 | 03:41 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியுடன் வேறொன்றையும் ஒப்பிடமுடியாது.

ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி உலகக் கிண்ணப் போட்டிகளின் தரத்தை ஒத்ததாக இருக்கின்ற போதிலும் உலகக் கிண்ணத்துக்கு உள்ள மவுசை அது பெற்றுவிட முடியாது.

கத்தாரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ள 32 நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றின்போது கால்பந்தாட்டம் எந்தளவு பிரபல்யம் பெற்றிருக்கிறது என்பதை காணக்கூடியதாக இருக்கும்.

வேறு எந்த விளையாட்டுப் போட்டிகளையும் விட உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு உலகில் பெரு வரவேற்பு இருந்துவந்துள்ளதை அவதானிக்கலாம்.

ரஷ்யாவில் 2018இல் கடைசியாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்து 300 கோடி இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டுகளித்தனர். பிரான்ஸுக்கும் குரோஏஷியாவுக்கும் இடையிலான இறுதிப் போட்டியை சுமார் 81,000 இரசிகர்கள் நேரடியாகவும் 100 கோடி இரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்தனர்.

சிறுவர் முதல் முதியோர்வரை விரும்பிப் பார்க்கும் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 92 வருட வரலாற்றைக் கொண்டது.

அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திற்கு முன்னர் கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓர் அங்கமாக கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டுவந்தது. எவ்வாறாயினும் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஏதென்ஸில் அங்குரார்ப்பண நவீன ஒலிம்பிக் விளையாட்டு விழா 1896இல் நடைபெற்றபோது கால்பந்தாட்டம் இடம்பெறவில்லை.

ஒலிம்பிக் ஆர்வத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றுவந்த கால்பந்தாட்டம் 1920களில் தொழில்முறையாக மாற்றம் அடையத் தொடங்கியதும் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இந் நிலையில் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனம் (FIFA) அதற்கான திட்டத்தை வகுத்தது. அதனைத் தொடர்ந்து அங்கரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ தீர்மானம் 1928 மே 28ஆம் திகதி பீபாவினால் நிறைவேற்றப்பட்டது.

அதற்கு அமைய அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி உருகுவேயில் 1930இல் அரங்கேற்றப்பட்டது.

பாரிஸ் 1924 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் ஆர்ம்ஸ்டர்டாம் 1928 ஓலிம்பிக் விளையாட்டு விழாவிலும் தொடர்ச்சியாக உருகுவே தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததால் அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை உருகுவேக்கு வழங்கப்பட்டது.
அன்றிலிருந்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டுவருகிறது. எவ்வாறாயினும் 2ஆவது உலகப் போர் காரணமாக 1942இலும் 1946இலும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படவில்லை.

1. அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டம் (1930)

உருகுவே முதலாவது உலக சம்பியன்



உருகுவேயின் தலைநகரான மொன்டேவிடியோவில்  அங்குரார்ப்பண உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 1930 ஜுலை 13ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதிவரை நடத்தப்பட்டது. முன்னோடி சுற்றுகளோ தகுதிகாண் சுற்றுகளோ நடத்தப்படவில்லை. மாறாக அப் போட்டியில் 13 அழைப்பு நாடுகள் 4 குழுக்களில் மோதின. ஒரு குழுவில் 4 நாடுகளும் மற்றைய 3 குழுக்களில் தலா 3 நாடுகளும் லீக் அடிப்படையில் பங்குபற்றின.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடங்களைப் பெற்ற 4 அணிகள் குறுக்கு அரை இறுதியில் விளையாடின.

ஓர் அரை இறுதியில் ஐக்கிய அமெரிக்காவை ஆர்ஜன்டீனாவும் மற்றைய அரை இறுதியில் யூகோஸ்லாவியாவை  உருகுவேயும் 6 - 1 என்ற ஒரே கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனாவை 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் உருகுவே வெற்றிகொண்டு முதலாவது உலக சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

பங்குபற்றிய நாடுகள் 13: ஆர்ஜன்டீனா, பெல்ஜியம், பொலிவியா, பிரேஸில், சிலி, பிரான்ஸ், மெக்சிகோ, பரகுவே, பெரு, ருமேனியா,  ஐக்கிய  அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா.

2. இரண்டாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

இத்தாலி சம்பியனானது



இத்தாலியில் 1934 மே 27ஆம் திகதியிலிருந்து ஜுன் 10ஆம் திகதிவரை 2ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்பட்டது. முதல் தடவையாக தகுதிகாண் சுற்று நடத்தப்பட்டதுடன் அதில் 32 நாடுகள் பங்குபற்றின. தகுதிகான் சுற்று நிறைவில் 16 நாடுகள் இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. இரண்டாவது உலகக் கிண்ண அத்தியாயம் நொக் அவுட் முறையில் நடத்தப்பட்டது.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஒஸ்திரியாவை 1 - 0 என்ற கோல் அடிப்படையில் இத்தாலியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனியை 3 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் செக்கோஸ்லோவாக்கியாவும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் செக்கோஸ்லோவாக்கியாவை வெற்றிகொண்டு இத்தாலி சம்பியனானது.
பங்குபற்றிய நாடுகள் 16: ஆர்ஜன்டீனா, ஒஸ்திரியா. பெல்ஜியம், பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா.

3. மூன்றாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

சம்பியன் பட்டத்தை இத்தாலி தக்கவைத்தது



உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாவது அத்தியாயம் பிரான்ஸ் தேசத்தின் 9 நகரங்களில் 1938 ஜுன் 4ஆம் திகதியிலிருந்து ஜூன் 19ஆம் திகதிவரை  நடைபெற்றது. வரவேற்பு நாடான பிரான்ஸும் அப்போதைய நடப்பு சம்பியன் இத்தாலியும் நேரடியாக இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றன. மற்றைய 14 நாடுகள் தகுதிகாண் சுற்றின் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.

இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஐரோப்பிய கண்டத்திற்கு உலகக் கிண்ணப் போட்டியை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் அமெரிக்க நாடுகளான உருகுவேயும் ஆர்ஜன்டீனாவும் உலகக் கிண்ணப் போட்டியை பகிஷ்கரித்தன. உள்ளூர் யுத்தம் காரணமாக ஸ்பெய்ன் பங்குபற்றவில்லை. ஜேர்மனியுடன் ஒஸ்திரியா இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைசி நேரத்தில் ஒஸ்திரியா வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக 15 நாடுகளே 3ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின. இதன் காரணமாக நொக் அவுட் சுற்றில் சுவீடனுக்கு விடுகை மூலம் நேரடியாக கால் இறுதியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

ஒரு அரை இறுதிப் போட்டியில் பிரேஸிலை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் இத்தாலியும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் சுவீடனை 5 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஹங்கேரியும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 5 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட அப்போதைய நடப்பு சம்பியன் இத்தாலி இரண்டாவது நேரடித் தடவையாக உலக சம்பியனானது.
பங்குபற்றிய நாடுகள் 15: பெல்ஜியம், பிரேஸில், கியூபா, செக்கோஸ்லோவாக்கியா, டச் ஈஸ்ட் இண்டீஸ், பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ருமேனியா, சுவீடன், சுவிட்சர்லாந்து.

4. நான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

இறுதிப் போட்டி இல்லாமல் சம்பியனான உருகுவே



இரண்டாவது உலகப் போர் காரணமாக 1942, 1946களில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவில்லை. நான்காவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி பிரேஸில் தேசத்தில் 6 நகரங்களில் நடத்தப்பட்டது.
தகுதிகாண் சுற்றின்போது ஆர்ஜன்டீனா, ஈக்வடோர், பெரு வாபஸ் பெற்றதால் சிலி, பொலிவியா, பரகுவே, உருகுவே ஆகியன தகுதிபெற்றன. ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பர்மா ஆகிய நாடுகள் வாபஸ் பெற்றதால் இந்தியா தகுதிபெற்றது.

ஒஸ்திரியாவும் பெல்ஜியமும் வாபஸ் பெற்றதால் சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகியன கடைசிச் சுற்றுகளில் விளையாடமலே இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. எனினும் தகுதிபெற்ற பின்னர் இந்தியா, ஸ்கொட்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் வாபஸ் பெற்றதால் 13 நாடுகள் மாத்திரமே இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

இதன் காரணமாக 2 குழுக்களில் 4 அணிகளும்  ஒரு  குழுவில் 3 அணிகளும் ஒரு குழுவில் 2 அணிகளும் லீக் சுற்றில் பங்குபற்றின. லீக் சுற்று முடிவில் 4 குழுக்களிலும் முதல் இடங்களைப் பெற்ற அணிகள் சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிச் சுற்றில் மிண்டும் லீக் அடிப்படையில் விளையாடின. இறுதிச் சுற்றில் தீரமானம் மிக்க கடைசி போட்டியில் 4 புள்ளிகளுடன் பிரேஸிலும் 3 புள்ளிகளுடன் உருகுவேயும் விளையாடின. அப் போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற உருகுவே இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் புள்ளிகள் அடிப்படையில்  சம்பியன் தீர்மானிக்கப்பட்டமை அதுவே முதலும் கடைசியும் ஆகும்.

பங்குபற்றிய நாடுகள் 13: பொலிவியா, பிரேஸில், சிலி, இங்கிலாந்து, இத்தாலி, மெக்சிகோ, பரகுவே, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லாவியா.

5. ஐந்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டம்

மேற்கு ஜேர்மனிக்கு முதலாவது சம்பியன் பட்டம்



ஐந்தாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயம் சுவிட்சர்லாந்தில் 1954 ஜூன் 16ஆம் திகதியிலிருந்து ஜூலை 4ஆம் திகதிவரைஅரங்கேற்றப்பட்டது. 6 நகரங்களில் நடத்தப்பட்ட உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 நாடுகள் பங்குபற்றின. ஸ்கொட்லாந்து, துருக்கி, தென் கொரியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ணத்தில் அறிமுகமாகின.

நான்கு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் சுற்று நடத்தப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் நொக் அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றன.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் ஒஸ்திரியாவை 6 - 1 என்ற கோல்கள் கணக்கில் மேற்கு ஜேர்மனி துவம்சம் செய்தது. இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் உருகுவேயை 4 - 2 என்ற கோல்கள் கணக்கில் ஹங்கேரி வெற்றிகொண்ட து.

இறுதிப் போட்டியில் ஹங்கேரியை 3 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட மேற்கு ஜேர்மனி முதல் தடவையாக உலக சம்பியன் பட்டத்தை சூடியது. (இன்னும் வரும்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35