பரதன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் “பைரவா”. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “பைரவா” படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்பு நிறைவு நிகழ்ச்சியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரஜினியின் ‘2.0’ படப் பிடிப்பும் இதே இடத்தில் நேற்று நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. 

இதை அறிந்ததும் விஜய் ‘2.0’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று ரஜினியை சந்தித்தார். இருவரும் சுமார் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். ரஜினி ‘2.0’ படத்தில் வரும் ‘கெட்-அப்’பில் இருந்தார். எனவே, புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.

விஜய் ஏற்கனவே ரஜினியின் “அண்ணாமலை” படத்தை ‘ரீமேக்’ செய்யப் போவதாகவும், அதில் விஜய் நடிக்க விரும்புவதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகின. அது போன்ற திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது. இப்போது ரஜினியை விஜய் திடீர் என்று சந்தித்து பேசி இருப்பதால் “அண்ணாமலை” ரீமேக் அனுமதி தொடர்பாக அவர் பேசி இருக்கலாம் என்று மீண்டும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.