தயாரிப்பு: கிரொஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி
நடிகர்கள்: கலையரசன், கிஷோர், வேல. ராமமூர்த்தி, 'மேற்கு தொடர்ச்சி மலை' அண்டனி, லவ்லின் சந்திரசேகர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர்.
இயக்கம்: ல.ராஜ்குமார்
மதிப்பீடு: 2/5
தமிழ் திரையுலகின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி, மூன்று ஆண்டுகளுக்கு மேல் கள ஆய்வு செய்து, எட்டு அத்தியாயங்கள் கொண்ட வலைத்தள தொடராக 'பேட்டைக்காளி' எனும் பெயரில் படைப்பை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ல.ராஜ்குமார்.
இவரது ஆய்வுகளை திரையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ரசனை மிக்க படைப்பாக வழங்கி இருக்கிறாரா, இல்லையா என்பதை இனி காண்போம்.
சிவகங்கை எனும் நகரை சுற்றியுள்ள மலை சார்ந்த பகுதிகளை கதைக்களமாக கொண்டிருக்கிறது, இந்த 'பேட்டைக்காளி' எனும் வலைத்தள தொடர்.
தற்போது இந்த தொடரின் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியிருக்கின்றன. இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் இதன் புதிய அத்தியாயங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'தூங்கும் எரிமலையின் பெருவெடிப்பு', 'வல்வினையும் வஞ்சப் பெரும் பகையும்', 'வன்மம் என்னும் கொடுங்கூர் ஆயுதம்', 'காளியின் அவதரிப்பு' என தலைப்பிடப்பட்டிருக்கும் முதல் நான்கு அத்தியாயங்களில்...
தாமரைக் குளம் எனும் ஊரில் பெருநிலக்கிழாராக இருக்கும் செல்வசேகரன் (எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி) தன்னுடைய பரம்பரையின் ஆதிக்க குணத்தை அச்சு அசலாக கொண்டிருப்பவர்.
இவர், தங்களது விவசாய நிலத்தில் ஆண்டாண்டு காலமாக கூலிகளாக பணியாற்றுபவர்களுக்கு உரிமை இருந்தும், நிலங்களை வழங்க மறுக்கிறார்.
அத்துடன் அந்த ஊர் மக்களை முன்னேறவிடாமல் தடைக்கல்லாகவும் நிற்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாகவும், தலைவனாகவும் முத்தையா (கிஷோர்) இருக்கிறார்.
இந்நிலையில் செல்வசேகரன் வளர்க்கும் காளை மாடொன்று ஜல்லிக்கட்டில் பங்குபற்றுகிறது. சில ஆண்டுகளாக யாராலும் அடக்க இயலாத இந்த காளையை மதுரை மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதியில் சிறந்த மாடுபிடி வீரராக இருக்கும் பாண்டி (கலையரசன்) அடக்குகிறார்.
இவர் முத்தையாவின் நெருங்கிய உறவினர். இதனால் கோபமடையும் செல்வசேகரன், பாண்டியை கொலை செய்ய வேண்டும் என திட்டமிடுகிறார்.
இதனை தன் மகன் வீரசேகரனுடனும் (பாலா ஹாசன்) விவாதிக்கிறார். இதன் பிறகு பாண்டி கொல்லப்படுகிறார். பிரச்சினை பெரிதாகிறது. ஏழு ஊர் பஞ்சாயத்து நடைபெறுகிறது. அந்த பஞ்சாயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? அதனை தாமரைக் குளத்தைச் சார்ந்த ஆதிக்க குழுவினரும், முல்லையூரைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட குழுவினரும் ஏற்றுக்கொண்டார்களா? இல்லையா? இதுதான் இந்த வலைத்தள தொடரின் கதை.
ஜல்லிக்கட்டு என்ற வீரம் செறிந்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை மையப்படுத்தி தயாராகியுள்ள இந்தத் தொடர், அதன் பின்னணியில் உள்ள விபரங்களையும், அம்மண்ணில் வாழும் கிராம மக்களின் நம்பிக்கையையும் ஆவணப்படுத்தும் வகையில் பல நுட்பமான விடயங்களை இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
கிஷோர், கலையரசன் இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பித்து, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வேல. ராமமூர்த்தி, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான 'காளி' எனும் படத்திலும் இதேபோன்ற வேடத்தில் நடித்தது நினைவுக்கு வருகிறது.
நடிகை ஷீலா ராஜ்குமாரின் வருகைக்குப் பிறகு திரைக்கதை வேகம் பிடிக்கிறது. அதிலும் அவருக்கும், அவர் வளர்க்கும் 'பேட்டைக்காளி' எனும் காளையுடனான உணர்வு ரீதியான உறவு ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
வலைத்தள தொடர் என்றாலும் பின்னணி இசையால் கவனம் பெறவேண்டிய பல காட்சிகள், பலவீனமாகவே கடந்து போகின்றன. இயக்குநர் இதில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.
குறைகள் அதிகம் இருந்தாலும், நிறைகளும் இருப்பதால் 'பேட்டைக்காளி' எனும் வலைத்தள தொடரை பயணத்தின்போதோ அல்லது ஓய்வு நேரங்களிலோ பார்வையிடலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM