(நெவில் அன்தனி)
தேசத்திற்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் பல்வேறு நன்மைகளையும் இலாபங்களையும் ஈட்டிக்கொடுத்த வெற்றிகரமான முதலிரண்டு லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் தொடராக அதனைவிட மிக சிறப்பாக இந்த வருட எல்.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக அதன் கௌரவ செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் மூன்றாவது அத்தியாயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு எஸ். எல். சி. கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்றபோது மொஹான் டி சில்வா இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், 'வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் இன்னும் அதிகமான அனுபவங்களைப் பெறுவதற்கும் அவர்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கும் லங்கா பிறீமியர் லீக் சிறந்த வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்துள்ளது.
அத்துடன் வர்த்தக ரீதியிலும் எமக்கு நிறைய பலன்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக எமது நாட்டுக்கு நிறைய பலன் கிடைத்துள்ளது' என்றார்.
எல். பி. எல். போட்டி தொடர்பாக விளக்கிய போட்டி ஏற்பாட்டுக் குழுப் பணிப்பாளர் சமன்த தொடங்வல, 'இலங்கை கிரிக்கெட் நாட்காட்டியில் மூன்றாவது லங்கா பிறீமியர் லீக் முக்கிய இடம்பிடிக்கவுள்ளது.
ஏனெனில் இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்த வருட லங்கா பிறீமியர் லீக் ஒரு களமாக அமையவுள்ளது.
அத்துடன் இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் நிதி ரீதியாகவும் அவர்கள் நிறைந்த பலனைப் பெறுவர்' என்றார்.
இந்த வருட லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஹம்பாந்தோட்டை, கண்டி, கொழும்பு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ ஸ்டார்ஸ், தம்புள்ள ஜயன்ட்ஸ், கோல் க்ளடியேட்டர்ஸ், கண்டி ஃபெல்கன்ஸ் ஆகிய 5 அணிகள் அதே உரிமையாளர்களுடன் பங்குபற்றும் லங்கா பிறிமியர் லீக்கின் மூன்றாவது அத்தியாயம் ஹம்பாந்தோட்டையில் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் போட்டிகள் கண்டியிலும் கடைசிக் கட்டம் மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் கொழும்பிலும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நடைபெறும்.
'2021இல் முதலாவது லங்கா பிறீமியர் லீக் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நடத்தப்பட்டதை அனைவரும் அறிவர். கொவிட் - 19 தொற்று நோய் தாக்கம் காரணமாக முழு உலகமும் முடங்கியிருந்த நிலையில் சவால்களுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் லங்கா பிறீமியர் லீக் போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துக்கொண்ட அயரா முயற்சியும் ஐபிஜி நிறுவனம் வழங்கிய பூரண ஒத்துழைப்பும் அப் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவின.
கடந்த வருடம் இரண்டாவது அத்தியாயத்தையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீண்டும் வெற்றிகரமாக நடத்தினோம்.
'எவ்வாறாயினும் மூன்றாவது அத்தியாயம் முதலிரண்டு அத்தியாயங்களைவிட மிகவும் சவால்மிக்கதாக அமையவுள்ளது. ஏனேனில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த வருட எல் பி எல் நடத்தப்படவுள்ளது.
2020இல் முதலாவது அத்தியாயம் நடத்தப்பட்டபோது அமெரிக்க டொலரின் பெறுமதி 202 அல்லது 210 ரூபாவாக இருந்தது. அப்போது அணி உரிமையாளர்களுக்கு அது பெரிய பொருட்டாக அமையவில்லை. ஆனால், தற்போது டொலரின் பெறுமதி 355 ரூபாவாகும்.
இதன் காரணமாக பெருந்தொகை பணம் செலுத்தி அணிகளை உரிமையாளர்கள் வாங்கவேண்டியுள்ளது. இதன் காரணமாக அனுசரணையாயர்கள் கிடைப்பது இலகுவல்ல. ஆனால், இத்தகைய சிரமங்கள், சவால்களுக்கு மத்தியிலும் உரிமையாளர்களும் அனுசரணையாளர்களும் எமக்கு கிடைத்துள்ளனர்' என சமன்த தொடங்வெல தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக ஆகஸ்ட் மாதம் அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிறீமியர் லிக் டிசம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதால் சில வெளிநாட்டு வீரர்களை இழக்க நேரிட்டதாக அவர் கூறினார்.
லங்கா பிறிமியர் லீக் போட்டியில் விளையாட அணிகளில் இணைக்கப்பட்ட சில வெளிநாட்டு வீரர்கள் பிக் பாஷ், தென் ஆபிரிக்க லீக் ஆகியவற்றில் விளையாடுவதால் அவர்கள் இந்த வருடம் விளையாடமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலாக சிறந்த வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள் என தொடங்வெல கூறினார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க, உபாதையினால் ஒய்வு பெற நேரிட்டுள்ள சில வீரர்கள் ஆகியோருக்குப் பதிலாக தெரிவாளர்களால் 12 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் அந்தந்த அணிகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த வருட லங்கா பிறிமியர் லீக் போட்டிக்கு உலகப் பிரசித்திபெற்ற முன்னாள் வீரர்கள் மூவர் சிறப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அது போட்டியின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும் எனவும் தொடங்வெல குறிப்பிட்டார்.
லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தூதுவர்களாக சேர் விவியன் றிச்சர்ட்ஸ், வசீம் அக்ரம், சனத் ஜயசூரிய ஆகியோரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.
ஐந்து அணிகளுக்கும் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுவிட்டதாகவும் அணி உதவியாளர்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்த தொடங்வெல, அடுத்த ஓரிரு தினங்களில் அணிகளின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM