இலங்கையிலுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக சிரியா சென்றுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச நாடுகள் இரண்டிலிருந்து இலங்கைக்கு தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் இன்றைய சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் அதிகரித்து வருவதாக புலனாய்வுத் துறையினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இரகசிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதிகமானோர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவு வழங்குவோர் கிழக்கு மாகாணத்தில்தான் இருப்பதாக நம்பி வந்தனர். ஆனால், புலனாய்வுத் துறையினரின் தகவல்களின் படி அவர்கள் குருணாகலை, கண்டி, கொலன்னாவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் அந்த ஊடகம் முன்பக்க செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.