சூரியசக்தியின் மூலம் மின்சாரத்தை பிறப்பிக்க விரும்பும் சமூகங்களுக்கு இருக்கும் சட்ட ரீதியான தடைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

அதனால், தேசிய மின் கட்டமைப்பிற்கு மின்சாரத்தை விற்கவும் வீட்டுக் கூரை மேல் சூரிய மின்சக்தியினை உற்பத்தி செய்யவும் தேவைப்படும் உரிமம் பெறும் செயற்பாட்டிலிருந்து, வீட்டுக் கூரையின் மேல் சூரிய மின் பிறப்பாக்கத் தொகுதியின் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் மின்சார நுகர்வோர்களுக்கு விலக்களிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அளித்த உரிமத்தை வைத்திராத எவரும் மின்சாரத்தைப் பிறப்பிக்கவோ அம் மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு விற்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் இந்த புதிய தீர்மானத்தின்படி, ஆணைக்குழுவின் உரிமம் இன்றியே, மின்சார நுகர்வோர் எவரும் தத்தம் வசிப்பிடங்களில் சூரிய சக்தி அடிப்படையிலான அமைப்பைப் பொருத்திக் கொண்டு, மின்சாரத்தை பிறப்பித்து, நுகர்வோர் மற்றும் உரிமதாரர் ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப் படக்கூடிய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு விற்பனை செய்ய முடியும். அவர்களைப் போன்ற அனைத்துத் தரப்பினரும் ஒரு உரிமம் ஒன்றை பெறுவதிலிருந்து விலக்களிக்கப் பெற்றுள்ளனர்.

புதுப்பிக்கக் கூடிய மூல வளங்களின் ஊடாக மின்சாரப் பிறப்பாக்கத்தை ஊக்குவித்தல் என்னும் எண்ணக்கரு மீது, இலங்கை அரசாங்கமும் தனியார் துறை முதலீட்டாளர்களும் தங்களின் கவனத்தைக் குவித்துள்ள வேளையிலே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கமானது தற்போது “சூரிய பல சங்க்ராமய” (சூரிய சக்திக்கான போர்) எனும் ஒரு சூரிய மின்சக்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் மக்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை தாமே உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், வலிதுடைய மின்சாரக் கணக்கொன்றை வைத்திருக்கும், எந்தவொரு வீடு மற்றும் வேறு வளாகங்களின் சொந்தக்காரரும்  தாம் பிறபிக்கும் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்க முடியும். இது Net metering, Net Accounting மற்றும் Net Plus  எனப்படும் மூன்று முறைமைகளின் கீழ் நடைபெறும்.

சமூக அடித்தளத்தைக் கொண்ட, சிறு அளவிலான, வீட்டுக் கூரை மேல் செய்யப்படும் சூரிய மின்சாரப் பிறப்பாக்கத்திற்கான உரிம விலக்களிப்பிற்கான திட்டங்கள், இன்னும் அதிக அளவிலான சூரியத் தொகுதிகளை சமூகங்கள் பெறுவதற்கு ஊக்குவிக்கும்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மித்த குமாரசிங்க“ இந்த விலக்களிப்பினூடாக நாம் தடைகளை முடிந்த அளவு குறைக்க விரும்புகின்றோம் அத்துடன் வீட்டுக் கூரைகளின் மேல் சூரிய சக்தித் தொகுதிகளை குடும்பங்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கின்றோம்.” என கருத்துத் தெரிவித்தார்.

”சுற்றுச்சூழலுக்கு நட்பானதும் புதுப்பிக்கக்கூடிய மூலவளங்களின் மின்சாரத்தை சாத்தியமான விலையில் பெறக்கூடியதானதுமான சிறந்த வாய்ப்பாக, இலங்கை மின்சார நுகர்வோர்களுக்கு இது அமையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார நுகர்வோர்கள் மத்தியில் சூரிய சக்தி அடிப்படையிலான மின் பிறப்பாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம், வீட்டு சூரிய மின் சக்திப் பிறப்பாக்கத் தொகுதிகளால் பகல் வேளைக்கான மின்சாரத் தேவையினை எதிர்கொள்ள முடியும். அந்தக் காலப்பகுதியில் அனல் மின் நிலையங்களின் செயற்பாட்டை இது பிரதியீடு செய்யும். அத்துடன், இத்திட்டத்தால் நீர் மூல வளங்கள் அதிக வினைத்திறனுடன் பாதுகாப்படையும்.

இலங்கை மின்சாரசபையின் எதிர்வு கூறலின்படி இலங்கையின் மின்சாரத் தேவைப்பாடானது 2015 – 2034 காலப்பகுதியில் சராசரியாக 5.3 வீதம் வளர்ச்சியடையும். அதற்கு மேலதிகமாக, உச்ச தேவைப்பாடனது சராசரியாக 4.7 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.