(ரொபட் அன்டனி) 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று  இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  இது தொடர்பில்  வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளதாகவும்  முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும்  சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான   ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். 

சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்  ஒருவகை சாயமே இந்த உயிரிழப்புக்களுக்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளதாகவும்  குறித்த சாயம் பயன்படுத்தப்படுவதனை   உடனடியாக  நிறுத்தியுள்ளதாகவும்     அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார்.   

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில்   இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு  அமைச்சர்  ஊடகவியலாளர்கள்  எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளும் அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு  

கேள்வி:- கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  இருதய சத்திரசிகிச்சை மேற்கொண்ட   நான்கு பேர் நேற்று   உயிரிழந்துள்ளனர். என்ன நடந்தது என்று  தெரியுமா?

பதில்:- ஆம்.  இது தொடர்பில் நாங்கள்  ஆராய்ந்து பார்த்தோம்.  இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஒரு  டாக்டர்  இருவருக்கு என்ற அடிப்படையில் இவ்வாறு நான்கு   இருதய  சத்திரசிகிச்சைகள் இடம்பெற்றுள்ளன. அதன்போதே  இந்த உயிரிழப்புக்கள்  பதிவாகியுள்ளன. 

கேள்வி:- இவ்வாறு ஒரே தினத்தில் நால்வர் உயிரிழந்தமைக்கு  என்ன காரணம் என்று தெரியுமா?

பதில்:-  இந்த சத்திரசிகிச்சைக்காக ஒருவிதமான சாயம் பயன்படுத்தப்படும்.  அந்த சாயம்தான்  ஒவ்வாமையை  ஏற்படுத்தி மரணத்தை சம்பவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த சாயத்தைப் பயன்படுத்துவதனை உடனடியாக நிறுத்தியுள்ளோம்.  

நான் உடனடியாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரை  தொடர்புகொண்டு விடயத்தை ஆராய்ந்து பார்க்குமாறு கூறினேன். அதுமட்டுமன்றி அவரிடமிருந்து ஒரு அறிக்கையொன்றையும் பெற்றுக்கொண்டேன்.  முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளேன். 

கேள்வி:- இதற்கு முன்னரும் இந்த சாயம் பயன்படுத்தப்பட்டுள்ளதா?

பதில்:- சாயம் பயன்படுத்தப்படும். ஆனால் இது இருப்பில் இருந்த புதிய கையிருப்பாகும்.   புதிய கையிருப்பு தொகுதியிலிருந்து  (பெட்ஜ்)  இந்த சாயம் பெறப்பட்டுள்ளது.  எவ்வாறெனினும் இதனை உடனடியாக நிறுத்துமாறு  உத்தரவிடப்பட்டுள்ளது.  இரண்டு  டாக்டர்கள்  ஒரே தினத்தில் இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்துள்ளனர்.   அதனால்தான் நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.   ஒரு டாக்டர்  செய்திருந்தால்  உடனடியாக  நிலைமையை புரிந்துகொண்டிருக்கலாம்.   

எவ்வாறெனினும்  சம்பவம் இடம்பெற்றுவிட்டது. இது தொடர்பில் தற்போது முழுமையான விசாரணையை நடத்துமாறு பணித்துள்ளேன் என்றார்.