திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

By Ponmalar

16 Nov, 2022 | 02:40 PM
image

திருக்கோணேஸ்வரம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கோணேஸ்வரம் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸியர் என்ற அன்னியரின் ஆதிக்கத்துக்குள் திருக்கோணமலை கொண்டுவரப்பட்டமை அதற்குரிய காரணங்களாக இருக்கலாம்.

இதனால் தான் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் தன் குறிப்பொன்றில் ‘கீழைத்தேயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் ரோமாபுரி திருக்கோணேஸ்வரம்’ என வர்ணித்துள்ளார் என்ற தொடரும் திருக்கோணேஸ்வரம் பற்றிய மேன்மையுரையுடன் நூல் வடிவம் பெற்றுள்ளது.

இலங்கையின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருகோணேஸ்வரம் நூல்.

புராணங்களில் இடங்கொண்ட புராதன தலம், திருக்கோணமலையிற் சோழரின் திருப்பணிகள், குளக்கோட்டனும் ஆலய தருமங்களும், கஜபாகு மன்னனின் திருப்பணிகள் போன்ற 11 தலைப்புகளுடன் வெளியாகியுள்ளது திருகோணேஸ்வரம்.

குறித்த 11 தலைப்புக்களின் இறுதியிலும் அதற்கான அடிக்குறிப்புகளும் விளக்கவுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர நூலின் இறுதி பக்கங்களில் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தோற்றம், சுவாமியின் சிலைகள், அகழ்வில் கிடைத்த நந்தி போன்றனவற்றின் வண்ணப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நூலின் அணிந்துரையில் கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் தலைவர் கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் நூலின் ஆசிரியர் பற்றி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்…

மரியாதைக்குரிய பேராசிரியர் உயர்திரு சிவசுப்பிரமணியம் பத்மநாதன் அவர்களுடைய தகைமைகளை – சாதனைகளை பட்டியலிடுவதானால் பக்கம் பக்கமாக வரிகள் நீண்டுக் கொண்டே போகும். அவைகளைத் தனித்தனியாக குறிப்பிட்டுச் சொல்வதை தவிர்க்க முயன்றபோதும் அதுவே நீண்டு விடப்பார்க்கிறது.

உயரிய கல்வியாளர் தன் பட்டங்களால் அப்பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர், உயரிய பதவிகளை வகித்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக தான் பிறந்த மண்ணை மக்களை மொழியை ஆன்மீகத்தை ஆலயங்களை கலையை கலாசாரத்தை அளவு கடந்து நேசித்தவர்.

எண்பத்தியொரு வயதினை எட்டிவிட்ட போதும் இன்றும் ஆராய்ச்சியையும் அது சார்ந்த நூல்களை ஆக்குவதையும் பேராசிரியர் நிறுத்தவில்லை.

பேராசிரியர் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றி அவ்வப்போது எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணைத்து அளித்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் இந்நூலின் முக்கியத்துவம் பற்றி அடியேன் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தொன்மை வாய்ந்த எமது ஆலயத்தின் சிறப்பினை கேள்விக்குள்ளாக்கக்கூடிய விதங்களில் வேற்று சமயத்தைச் சேர்ந்த குருமார்களே இப்போது செயற்படுகிறார்கள். 

இத்தகைய சூழ்நிலையில் திருகோணேஸ்வரம் நூல் ஆலயத்தின் தொன்மையையும் சிறப்புகளையும் காலங்கடந்தும் நிறுவிக் கொண்டேயிருக்கும் வல்லமை கொண்டது என்பதை கூற விரும்புகிறேன். என்பதாக தொடர்கிறது.

நூலின் ஆசிரியர் பேராசிரியர் சி, பத்மநாதன் தனது முன்னுரையில் திருக்கோணேஸ்வரம் பற்றி தனது ஆராய்ச்சிகள் தொல்பொருள் சின்னங்கள் கல்வெட்டுக்கள் பற்றி குறிப்பிட்டுள்ளதுடன் இந்நூலின் உருவாக்கத்திற்கு துணை நின்றவர்களுக்கு தனது பாராட்டுகளையும் 

இந்நூலானது கொழும்பு – 6, குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மற்றும் குமரன் புத்தக இல்லம் இணைந்து வெளியிடப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வண்ணப்படத்தினை அலங்கரிக்கும் முன்னட்டையுடன் கைக்கு அடங்கலாக உருவாகியுள்ள இந்நூலின் அணிந்துரை, மேன்மையுரை, முன்னுரை, பொருளடக்கம் தவிர்ந்து 206 பக்கங்களை கொண்ட நூலின் விலை 950.00 மட்டுமே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right