கைப்பேசி – பயோடேட்டா

Published By: Ponmalar

15 Nov, 2022 | 05:09 PM
image

பெயர்: செல்போன், செல்லுலார் போன், மொபைல் போன், பொக்கெட் போன், ஹேண்ட் போன், ஸ்மார்ட் போன். சுருக்கமாக செல், மொபைல். தமிழில் அலைபேசி, கைப்பேசி.

கண்டுபிடிப்பு: மனித கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது மொபைல் போன். உலகம் முழுவதும் பரவலாக விற்பனையாகி, அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மனிதக் கண்டுபிடிப்பும் இதுவே.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே செல்போனுக்கான விதை தூவப்பட்டது. இருந்தாலும் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தில் எஞ்சினியராகப் பணியாற்றி வந்த மார்ட்டின் கூப்பர் என்பவர் 1973இல் செல்போனுக்கு உருவமும், செயல் வடிவமும் கொடுத்தார். இவர்தான் ‘செல்போனின் தந்தை’என்று அழைக்கப்படுகிறார்.

ஏப்ரல் 3, 1973 ஆம் திகதியன்று, தான் வடிவமைத்த போனிலிருந்து அழைப்பு விடுத்து ‘செல்போனில் பேசிய முதல் நபர்’ என்று வரலாற்றிலும் இடம் பிடித்துவிட்டார் மார்ட்டின் கூப்பர்.

மோட்டோ ரோலா நிறுவனத்தில் எஞ்சினியராகப் பணியாற்றி வந்த மார்ட்டின் கூப்பர் என்பவர் 1973இல் செல்போனுக்கு உருவமும், செயல்வடிவமும் கொடுத்தார்.

முதல் விற்பனை: 1973 இல் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1983 இல்தான் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தின் ‘DynaTAC 8000X’ என்ற மொடல் முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. இந்த போனில் இருந்த பேட்டரி முழுவதும் சார்ஜாக பத்து மணி நேரம் எடுத்துக்கொண்டது. இதன் விலை 3995 டொலர்கள். 

எடை : செல்போன் கண்டுபிடிக்கப்பட்டபோது  அதன்எடை 2  கிலோவாக இருந்தது. இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களின் சராசரி எடை 140 - 200 கிராம் மட்டுமே.

சுகாதாரம்: கழிப்பறையைவிட அதிக கிருமிகள் மொபைலில் இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. கழிப்பறை, திரையரங்கம், மருத்துவமனை... என நாம் செல்கின்ற இடங்களுக்கு எல்லாம் மொபைல் போனையும் எடுத்துச் செல்கிறோம். அந்த இடங்களில் இருக்கும் கிருமிகள் மொபைலில் தங்கிவிடும். நீங்கள் காலையில் வெளியில் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பும்போது 18 வகையான பக்டீரியாக்களை மொபைல் போன் உள்வாங்கிக் கொள்கிறது. அதனால்  மொபைலை தினமும் சுத்தம் செய்வது அவசியம் என்கிறது அந்த ஆய்வு.

திறன்: முதன் முதலாக மனிதனை நிலவுக்கு ஏற்றிச் சென்ற ‘அப்பல்லோ 11’ விண்கலத்துக்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்களின் திறனை விட, சாதாரண மொடல் செல்போனின் கம்ப்யூட்டர் திறன் அதிகம்.

சிறுநீர்:  இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் ரோபோடிக்ஸ் லேபரட்டரியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சிறுநீரிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து, செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துள்ளனர். இரண்டு லிட்டர் சிறுநீரிலிருந்து 30 முதல் 40 மில்லிவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய இந்த மின்சாரமே போதுமானது. எதிர்காலத்தில் ஸ்மார்ட் கழிவறைகளில் சிறுநீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வசதிகள் செய்யப்படலாம்.

திருட்டு: வேலை செய்யும் இடங்களில்தான் 11 சதவீத  ஸ்மார்ட்போன்கள் திருட்டுபோகின்றன. மதியத்திலிருந்து மாலை 5 மணிக்குள் தான் இந்த போன் திருட்டு அதிகமாக நடக்கிறது.

நோமோஃபோபியா:  மொபைல் போனுக்கு அடிமையாக இருப்பதை, மொபைல் போன் கையில் இல்லாமல் போனால் உண்டாகும் பயத்தை நோமோஃபோபியா என்று அழைக்கின்றனர்.

அதுமட்டுமல்ல உலகளவில் செல்போனை பயன்படுத்துபவர்கள், அழைப்பு வருகிறதோ இல்லையோ தினமும் சராசரியாக 150 முறை தங்கள் போனை எடுத்து நோட்டமிடுகின்றனர். 91 சதவீத இளம்பருவத்தினர் தங்களது கைக்கு எட்டும் தூரத்திலேயே ஸ்மார்ட்போனை வைத்துக்கொள்கின்றனர்.

எண்ணிக்கை: உலக மக்கள் தொகை 800 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், செல்போனின் எண்ணிக்கையோ 1100 கோடியை எட்டிவிட்டது. 2025ல் உலகம் முழுவதும் 1800 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

ஐபோன்:  ஸ்மார்ட்போன் துறையில் ராஜாவாகத் திகழ்கிறது ‘அப்பிள்’ நிறுவனத்தின் ஐபோன். 2007ஆம் ஆண்டு முதல் தலைமுறை ஐபோன் அறிமுகமானது. வருடந்தோறும் புது மொடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது ‘அப்பிள்’. இதுவரை 220 கோடிக்கும் அதிகமான ஐபிஒக்கள் விற்பனையாகியுள்ளன.

அதிக விற்பனை: நொக்கியாவின் ‘1100’ என்ற மாடல்தான் உலகளவில் அதிகமாக விற்பனையான செல்போன். 25 கோடி போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. உலகளவில் அதிகமாக விற்பனையான எலெக்ட்ரானிக் சாதனமும் இதுவே.

மொபைல் நெட்வொர்க்: ஜப்பானைச் சேர்ந்த ‘நிப்பான் டெலிகிராப் அண்ட் டெலிபோன்’ நிறுவனம் 1979ல் உலகின் முதல் மொபைல் நெட்வொர்க்கை அறிமுகம் செய்தது. இன்று இருநூறுக்கும் மேலான  நிறுவனங்கள் மொபைல் நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றன.

உற்பத்தி: உலகளவில் உற்பத்தியாகும் போன்களில் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி மட்டுமே 21 சதவீதம். அப்பிள் 16 சதவீதமும், ஷியோமி 13 சதவீதமும், ஓப்போ 10 சதவீதமும், விவோ 9 சதவீதமும், மற்ற நிறுவனங்கள் 31 சதவீதமும் உற்பத்தி செய்கின்றன.

சந்தை:  செல்போன் அறிமுகமான நாட்களில் ‘மோட்டோரோலா’ நிறுவனத்தின் கைகளில் மொபைல் சந்தை இருந்தது. 1983 முதல் 1998 வரை மொபைல் சந்தையின் ராஜா, மோட்டோரோலாதான். ‘நொக்கியா’வின் வருகையால் மோட்டோரோலா பின்வாங்கியது. 1998லிருந்து நொக்கியாவின் வசமானது மொபைல் சந்தை. 2012ஆம் சூண்டு வரை யாராலும் நொக்கியாவின் பக்கம் நெருங்க முடியவில்லை. ஸ்மார்ட்போனின் வருகை நொக்கியாவின் தலையெழுத்தை மாற்றி எழுதியது. சாம்சங் நிறுவனம் மொபைல் சந்தையைப் பிடித்தது.

சாம்சங்குடன் போட்டிபோட்டு தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து அந்தஸ்தின் அடையாளமாகப் பரிணமித்தது ஐபோன். இன்று ஸ்மார்ட்போன் சந்தை சாம்சங் மற்றும் அப்பிளின் வசமாகிவிட்டது.

முதல் கெமரா போன்: ஜப்பானில் மே மாதம் 1999ஆம் வருடம் ‘Kyocera Visual Phone VP-210’ என்ற கெமரா போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதான் உலகின் முதல் கெமரா போன். இதனை மொபைல் வீடியோ போன் என்று அழைத்தனர்.

முதல் ஸ்மார்ட்போன்: காலண்டர் ஆப், அட்ரஸ் புக், கால்குலேட்டர், உலக கடிகாரம், இ-மெயில் வசதி, கேம்ஸ், நோட்பேடுடன் ‘சைமன்’ என்ற போன் 1994இல் வெளியானது. ஐபிஎம் நிறுவனத்தின் தயாரிப்பு இது. இந்த போன் வெளிவந்த போது ஸ்மார்ட்போன் என்ற சொல்லே பயன்பாட்டில் இல்லை. இதுதான் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்கின்றனர் நிபுணர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57